(தோழர் தியாகு எழுதுகிறார் : சந்துரு உயர்த்தும் ஒளிவிளக்கம் – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (1.1)

நக்குசலைட்டு பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்

[நக்குசலைட்டு வாழ்க்கை, தமிழ்த் தேசியச் செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் எனப் பொது வாழ்க்கையில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு தமிழ் அறிவுலக்குக்கு இவர் அளித்த மிகப் பெரிய கொடை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, மிகுந்த சிரமத்திற்கிடையில் விடாது தொடர்ந்து நடத்தி வருகிறார். ‘சமூகநீதி தமிழ்த் தேசம்’ இதழின் ஆசிரியர். மூன்று அமர்வுகளாக அவருடன் நடத்திய நேர்காணலிருந்து…]

உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்:

என்னுடைய பூர்விகம் சந்திரசேகரபுரம் அருகில் உள்ள நல்லம்பூர் என்கிற சிறிய ஊர். என்னுடைய தாத்தா காலத்திலேயே அங்கிருந்து பிழைப்புத் தேடி திருவாரூர் வந்து விட்டார்கள். அதனால் நான் பிறந்தது படித்தது எல்லாமே திருவாரூரில்தான். என்னுடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்ததும் என்னுடைய அம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் எட்டுப் பிள்ளைகள். என்னுடைய அப்பா திருவாரூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதே பள்ளியில் தான் நானும் படித்தேன். கல்லூரிப் படிப்பு கும்பகோணத்தில் தொடர்ந்தது.

இதில் அரசியல் ஈடுபாடு எப்போது, எப்படி ஏற்பட்டது?

அப்போது திருவாரூர் கீழ வீதியிலே நிறைய பொதுக்கூட்டங்கள் நடக்கும். பத்து வயதிலேயே அதை எல்லாம் மிக ஆர்வமாகக் கேட்பேன். என் அப்பாதான் அழைத்துச் செல்வார். பெரியார், அண்ணா, காமராசர், சீவானந்தம், கலைஞர் போன்ற எல்லாத் தலைவர்களும் அங்குப் பேசுவார்கள். ஒப்பீட்டளவில் அங்குப் பொதுவுடைமைக்கட்சிக் கூட்டங்கள் குறைவாகத்தான் நடக்கும். 62 தேர்தல் நடைபெறும் போது என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அப்போது அரசியல் அறிவு இருந்தது.

1962 இந்திய-சீன எல்லைப் போரின் போது சிறையில் இருந்து வெளியே வந்த அண்ணா அது குறித்துத் திருவாரூர் தேரடி பொதுக் கூட்டத்தில் பேசினார். அந்தப் பேச்சு எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாமும் இதே போல் பேச வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் ‘படிக்காத மேதை’, ‘கல்வித் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்’ என்ற வகையில் காமராசரின் மீது எனக்குத் தனி மரியாதை இருந்தது.

திருவாரூரில் அப்போது ஏராளமான படிப்பகங்கள் இருந்தன. தி.மு.க. ஒரு படிப்பகம் ஆரம்பித்தால் மறுநாளே அதன் பக்கத்தில் தமிழ்த் தேசியக் கட்சி ஒரு படிப்பகம் ஆரம்பிக்கும் அளவுக்குப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தி.மு.க. சார்பில் முரசொலி, நம்நாடு, திராவிடநாடு, காஞ்சி என ஏராளமான பத்திரிகைகள் கிடைக்கும். கண்ணதாசன் தென்றல் திரை நடத்திக் கொண்டிருந்தார். காங்கிரசில் நவசக்தி வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு என்ற பத்திரிகை, மா.பொ.சி. நடத்திய செங்கோல் பத்திரிகை என ஏராளமான பத்திரிகைகள் படிப்பகங்களில் படிக்கக் கிடைக்கும். இவற்றை விடாமல் வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது.

என்னுடைய பள்ளிப் படிப்பு முடியும்போது என்னுடைய வயது மிகக் குறைவாக இருந்தது. 14 வயதில் பதினோராம் வகுப்பு முடித்திருந்தேன். அதனால் உடனடியாகக் கல்லூரியில் சேர முடியவில்லை. எனவே 65ஆம் வருடம் முழுவதும் படிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆண்டு அது. திருவாரூரில் அப்போது கல்லூரி எதுவும் இல்லாததாலும், வேறு சில காரணங்களாலும் அப்பா தன்னுடைய வேலையை வலங்கைமானுக்கு மாற்றினார். நாங்கள் வலங்கைமானுக்கு குடிபெயர்ந்தோம். அந்த ஓராண்டில் தான் என் வாழ்க்கையின் பாதை திசைமாறியது.

கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு எனப் பல்வேறுபட்டவற்றில் எனக்குத் தெளிவு கிடைத்தது. அதே நேரத்தில் நிறைய கேள்விகளும் எழுந்தன. இதனால் நான் ஏதாவது கட்சியில் சேர்ந்து விடுவேனோ என்று பயந்து போன என் அப்பா இந்தியாவில் இருக்கிற எல்லாக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் எனக்காக விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்னைத் தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்து விட்டார். என்னுடைய பாதை திசைமாறி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத் தட்டச்சுப் பள்ளியில் இரண்டு மடங்கு காசு கொடுத்து அதிக நேரம் நான் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

அந்தத் தட்டச்சுப் பயிற்சி பள்ளி நடந்த இடம் வலங்கைமான் கம்பிக்காரத் தெருவில் ஒரு வீடு. வீட்டுக்கு உரிமையாளர் அமீர்சான். அவரோடு நட்பு ஏற்பட்டது. அவர் உறுதியான சாதி, சமய மறுப்பாளர். என்னுடைய கேள்விகளை அவரோடு விவாதிக்க ஆரம்பித்தேன். அவர்தான் என்னை நாத்திகனாக மாற்றினார். வீட்டின் வெளியே ஒரு பந்தல் போட்டு அதில் பத்திரிகைகள் வாங்கிப் போடுவார். அதற்கு ‘நாணய நிரூபண படிப்பகம்’ என்று பெயர் வைத்திருந்தார். இன்றைக்கும் இந்தப் பணியை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்தார். பலவித மருத்துவ முறைகளையும் கற்று ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ உதவிகளும் செய்து வந்தார். சமகாலச் சிக்கல்கள் குறித்து நிறைய துண்டறிக்கைகள் வெளியிடுவார். அவர் எனக்குள் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினார். அதன் விளைவாக நடை, உடை, உணவு என எல்லாவற்றிலும் அவரைப் போலவே மாறினேன்.

(தொடரும்)

தோழர் தியாகு
தாழி மடல் 294