உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?
அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு
வணக்கம்.
வருமாண்டு (பங்குனி 23-25, 2055 **** 5-7/04/2024) சிகாகோவில் நடைபெற உள்ள ஐந்தாவது திருக்குறள் மாநாட்டை முன்னிட்டுத் திருக்குறள் நூலரங்கு நிகழ உள்ளது. இனித் திருக்குறள் தொடர்பான நூல்கள் வெளியிடுநர் அவற்றின் வெளியீட்டிற்கு இம்மாநாட்டு அரங்கைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர்த் திருக்குறள் தொடர்பான நூல்களை வெளியிட்டவர்கள் இம்மாநாட்டை அவரவர் நூல்களின் அறிமுக நிகழ்வாகக் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருக்குறள் தொடர்பாக வெளியிட உள்ள புதிய நூல்கள் / அறிமுகத்திற்காக அனுப்பப்பெறும் முன் வெளியிடப்பட்ட நூல்கள் ஆகியவற்றின் ஆசிரியர் பெயர், நூலின் பெயர், ஆண்டு, பதிப்பகப் பெயர், முகவரி, மின்வரி, அலைபேசி எண், நிலைபேசி எண் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.
நூல்களின் ஐந்து படிகளைத் திருக்குறள் ஆய்வு நூல் வெளியீடு அல்லது திருக்குறள் ஆய்வு நூல் அறிமுகம் என நேர்விற்கேற்ப உரிய தலைப்பைக் குறிப்பிட்டுப் பின் வரும் முகவரியைக் குறிக்க வேண்டும். மே/பா இயக்குநர் ஆசியவியல் நிறுவனம் * INSTITUTE OF ASIAN STUDIES செம்மண்சேரி, சோழிங்க நல்லூர் சென்னை 600 119 தமிழ்நாடு. பேசி: 044-24501851, 24500831 பழைய நூல்களாயின் வரும் மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும் புதிய நூல்களாயின் வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024 ஆம் நாளுக்குள்ளும் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் நூலறிமுகத்திற்கும் வெளியீட்டிற்கும் அனுப்பும் நூல்களின் மின்வடிவுகளை உரைக்கோப்பு வடிவிலும் பொதிவுக்கோப்பு(பி.டி.எஃப்.) வடிவிலும் thirunool50@gmail.com மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.
வெளியிடப்படும் புதிய நூல்களின் அட்டைக்கு அடுத்துள்ள முதல் பக்கத்தில் இந்நூல், சிகாகோ நகரில், சிகாகோ தமிழ்ச்சங்கம், ஆசியவியல் நிறுவனம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா ஆகியன இணைந்து பங்குனி 23-25, 2055 /ஏப்பிரல் 5-7, 2024 ஆகிய நாள்களில் நடத்திய ஐந்தாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் போது வெளியிடப்பெற்றது/அறிமுகப்படுத்தப் பெற்றது என நேர்விற்கேற்பக் குறிக்கப்பெறுவது சிறப்பாகும்.
5 ஆவது உலகத் திருக்குறள் மாநாட்டில் இதற்கென ஓர் அமர்வு ஒதுக்கி வைக்கப்படும். மாநாட்டிற்கு வருபவர்கள் நுழைமம்(விசா) பெறுவதற்காகத் தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண், நிலைபேசி எண், கடவுச்சீட்டு எண், கடவுச்சீட்டு முடியும் நாள் முதலிய விவரங்களை thirunool50@gmail.com மின்வரிக்கும் contact@thirukkuralconference.org மின்வரிக்கும் தெரிவிப்பின் விழாக் குழுவினர் அழைப்பு மடலை அனுப்பி வைப்பர். வெளியீட்டாளர் அல்லது பதிப்கத்தாரும் பங்கேற்கலாம். நேரில் வர இயலாதவர்களும் நூல்களை உரிய விவரங்களுடன் அனுப்பி வைக்கலாம். மாநாட்டின் பொழுது உணவு, உறையுள், உள்ளூர்ப் போக்குவத்து முதலிவயவற்றை விழாக் குழுவினர் ஏற்றுக் கொள்கின்றனர். தத்தம் இருப்பிடங்களில் இருந்து சிகாக்கோ சென்று வர ஆகும் பயணக் கட்டணங்களை அவரவர் நிறுவனச் செலவில் அல்லது சொந்தச் செலவில் அல்லது வேறு வகையில் ஏற்க வேண்டும். மாநாட்டுப் பேராளர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு வழங்க விரும்புவோர் முன்னதாகத் தெரிவித்து விட்டு, மாநாட்டு வருகையின்போது கொணர வேண்டும்.
நூல் வெளியீட்டு அல்லது நூல் அறிமுக நிகழ்வில் பங்கேற்க இருப்போர், நிகழ்நிரல் திட்டமிடுவதற்காக 30.11.23 ஆம் நாளுக்குள் தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பொறுப்பாளர் ,
நூலரங்கம்
ஐந்தாவது திருக்குறள் மாநாடு ‘
குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக