(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுவுடைமைப் பாதைக்குத் திரும்பினேன்- தொடர்ச்சி)
கீற்று நேர்காணல் (1.3)
தோழர் தியாகு எழுதுகிறார்
ஆயுதப் போராட்டமா? உற்பத்திப் பெருக்கமா?
அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி. சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம்தான் சோசலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாறம். நிலச் சீர்திருத்தம்தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத்து உருசியாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத்து உருசியாவில் எல்லாச் சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும் நிலச்சீர்திருத்தம் இருக்கிறதே என சி.சுப்பிரமணியம் பேசினார். இப்படியாக விவாதம் நீண்டு கொண்டே போனது.
‘நில உச்சவரம்பு 30 ஏக்கர்தான் ஆனால் ஆயிரம் ஏக்கர் வைத்துள்ளவர்கள் நம் ஊரிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள் நீங்களெல்லாம் சட்டத்தை ஏய்ப்பவர்கள்’ என்று கடுமையாக வாதிட்டேன். நான்கு சிருந்தும், இரண்டு பங்களாவும் வைத்திருப்பவர்களும் நில உச்சவரம்புச் சட்டத்தை மீறாதவர்கள்தானா என நான் கேட்டேன். (நான் குறிப்பிட்டது மூப்பனாரை, அவரும் அங்குதான் இருந்தார்.) கோபத்தில் சி.சுப்பிரமணியம் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
மறுநாள் அந்தப் பயிலரங்கமே இரண்டுபட்டது. ‘ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமாஇ எது சோசலிசத்திற்கான வழி?’ என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடைபெற்றது. அந்த முகாமில்தான் காங்கிரசின் பத்து அம்சத்திட்டம் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டேன். தஞ்சை இராமமூர்த்தி வெளியிட மரு. கோபி பெற்றுக் கொண்டார். என்னுடைய முதல் புத்தகம் அது. அன்று மாலை நிறைவாகக் காமராசர் பேச வேண்டும்.
அதற்கு முன்னதாகத் திருப்பூர் வின்செண்டு “கூட்டத்திலிருந்து சி.எசு. அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். காலையில் இருந்து காங்கிரசா, நக்குசலைட்டா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. நக்குசலைட்டு என்று சொல்பவரை ஆதரிப்பதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள்” என்று காமராசரிடம் போட்டுக் கொடுப்பது போல் பேசினார். காமராசர் என்னை அருகில் அழைத்துப் பேசினார். புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். அவரது உரையில் என்னைக் குறிப்பிட்டுப் பேசினார்,
“தியாகு என்ன தப்பா சொல்லிட்டாருன்னேன், ஆயுதப் போராட்டம் வேணுங்கிறாருன்னேன், வேற வழியில்லாட்டி அதுதான் சரின்னேன், வச்சிருக்கவன் குடுக்க மாட்டான்னேன், ஆயுதப் போராட்டம் நடத்தினா நான் முதல்ல ஆயுதம் எடுப்பேன்னேன்’ என்று பேசினார். அங்கு கரவொலி அடங்குவதற்கு வெகுநேரம் ஆனது.
காமராசரிடம் உங்களைக் கவர்ந்த விசயம் எது?
அவருடைய ஆளுமைதான். யாரையும் அடக்கி விடும் அவரைக் கண்டு கட்சியில் அனைவருக்குமே ஒரு பயம் உண்டு. ஒருமுறை காங்கிரசு கூட்டத்தில் கண்ணதாசன் பேசினார், ‘47-67 இந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசுஎன்ன செய்து விட்டது என்று அண்ணா கேட்கிறார். காங்கிரசு ஆட்சிக்கு வந்தும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. அண்ணா இராணியம்மையை மணந்தும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன, குழந்தை இல்லை என்பதற்காகக் கணவரை மாற்றி விடலாமா? என்று பேசினார். மேடையில் இருந்த காமராசருக்குக் கடுங்கோபம் வந்து விட்டது.
கண்ணதாசனிடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னேன். பேசினதுக்கு உடனடியாக மன்னிப்புக் கேள், இல்லைன்னா இந்த இடத்தை விட்டு போயிடுன்னேன்’ எனக் கடுமையாக கோபித்துக் கொண்டார். கண்ணதாசன் அந்த இடத்திலேயே மன்னிப்புக் கேட்டார்.
செயகாந்தனுடைய பேச்சும் காங்கிரசுகாரர்களால் வெகுவாக இரசிக்கப்பட்டது. குடித்து விட்டுத்தான் அவர் மேடையேறுவார். ஏறியதும் தாறுமாறாகப் பேசத் தொடங்குவார். வேலூரில் கோட்டை மைதானத்தில் ஒரு மாநாட்டின் நிறைவாக நடந்த பெரிய கூட்டத்தில் ஈ.வெ.கி. சம்பத்து பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சை மேடையிலிருந்து காமராசர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கூட்டத்திற்குத் தாமதமாகச் செயகாந்தனும், கண்ணதாசனும் வருகிறார்கள்.
வந்தவர்கள் மேடையின் பின்வழியாக மேடையில் ஏறினார்கள். அவர்களைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. காமராசர் திரும்பிப் பார்த்தார். பயத்தில் கண்ணதாசனும், செயகாந்தனும் ஒரே தாவில் மேடையில் இருந்து கீழே குதித்து விட்டனர். காமராசர் கண்ணதாசனை அழைத்து, ‘ஏன் தாமதம்’ என்று கேட்டார்.
‘இரயில்வே கேட் பூட்டியிருந்தது, அதான்’ என்றார் அவர். ‘இரயில்வே கேட் பூட்ட முன்னாடி வந்திருக்கணும்னேன், இந்தக் கூட்டத்தில் நீங்க இரண்டு பேரும் பேச முடியாது திரும்பிப் போகலாம்னேன்’ என்றார். கூட்டத்தினர் ‘கண்ணதாசனும், செயகாந்தனும் பேச வேண்டும்’ என்று கூச்சலிட்டனர். மேடையில் இருந்த காமராசர் எழுந்து சென்று சம்பத்திடம் இருந்து ஒலிவாங்கியை வாங்கி, ‘அவங்க இரண்டு பேரும் பேச மாட்டாங்கன்னேன், நான் பேசப் போறேன்னேன், கேட்கிறவங்க கேட்கலாம், மத்தவங்க எந்திரிச்சிப் போகலாம்னேன்’ என்று கர்ச்சிக்க கூட்டம் அப்படியே அமைதியானது. செயகாந்தன் பயத்தில் மேடைப் பக்கமே வரவில்லை.
காங்கிரசில் நான் கலந்து கொண்ட கடைசி மாநாடு எடமேலையூரில் நடைபெற்றது. காங்கிரசு சார்பில் நடைபெற்ற சோசலிசக் கருத்தரங்கத்துக்கு பூண்டி வாண்டையார்தான் தலைமை வகித்தார். நான் காங்கிரசு நிருவாகிகளிடம் சோசலிசக் கருத்தரங்கிற்குப் பூண்டி வாண்டையார் வேண்டா எனக் கோரிக்கை வைத்தேன். அது நிராகரிக்கப்பட்டது. ஊரில் பாதிக்கு மேல் நிலங்களை வைத்துக் கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வந்த நிலச்சுவான்தார் அவர்.
பேசுவதற்கான என் முறை வந்ததும் நான் எழுந்து, ‘சில பேர் வீட்டில் ஒரு பக்கம் காந்தி படமும், மறு பக்கம் நேரு படமும் வைத்து நடுவிலே இரட்டைச் சவுக்கு வைத்திருக்கிறார்கள். (பூண்டி வாண்டையார் வீட்டில் அப்படித்தான் வைக்கப்பட்டிருக்கும். இரட்டைச் சவுக்கு என்பது பண்ணையடிமை முறையின் அடையாளம்) அந்த சவுக்குகள் யாருக்காக? இங்கே ஒரு பக்கம் பள்ளமாக இருக்கிறது. மறுபக்கம் மேடாக இருக்கிறது. பள்ளங்களை நிரப்ப வேண்டுமானால் மேடுகளை சரிக்க வேண்டும்’ என்று பூண்டி வாண்டையாரை குறிவைத்துத் தாக்கினேன். என்னுடைய அந்தப் பேச்சு அங்கிருந்த மக்களால் வெகுவாக இரசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தோடு நான் மனத்தளவில் முழுமையாகக் காங்கிரசில் இருந்து வெளியேறி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து என்ன மா.பொ.க வா(சி.பி.எம்-ஆ), மா.இலெ.வா(எம்.எல்-ஆ), என்பதில்தான் எனக்குக் குழப்பம் இருந்தது. நண்பர்களோடு தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. மா.இலெ.(எம்.எல்)-இன் ஆயுதப் போராட்டங்களின் மீது எங்களுக்கு ஈர்ப்பு இருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.) மக்களைத் திரட்டாமல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்ற கருத்தை வைத்திருந்தது.
மனத்தளவில் இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் காங்கிரசு மாவட்ட அமைப்பாளர் தேர்தல் வந்தது. என்னை நிற்கச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். மா.பொ.க.(சி.பி.எம்.) தோழர்களும், ‘நீங்க தேர்தலில் நின்று கலகம் பண்ணுங்க’ என்று கூறினார்கள். போட்டியின்றித் தேர்ந்தெடுக்க நடைபெற்ற மாணவர் காங்கிரசு கூட்டத்திற்கு மூப்பனார் தலைமை வகித்தார்.
பட்டுக்கோட்டை இராசேந்திரன், மூர்த்தி, நான் என மூன்று பேர் போட்டியிடுவதாக இருந்தோம். மூப்பனார் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். என்னிடம் பேசும் போது, ‘போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகப் பட்டுக்கோட்டை இராசேந்திரன் தெரிவித்து விட்டார். கட்சியில் பெரும்பாலானவர்கள் மூர்த்தி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே நீங்கள் விலகிக் கொண்டு நீங்களாகவே அவர் பெயரை முன்மொழிந்து விடுங்கள்’ என்று கூறினார். நானும் அப்படியே செய்தேன்.
நான் நக்குசலைட்டு ஆதரவாளன் என்பதால் என்னை விலக வைப்பதற்காக மூப்பனார் நிறைய வேலை செய்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. அத்தோடு காங்கிரசில் இருந்து முற்றிலுமாக விலகி வெளியே வந்து விட்டேன். அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருடம் மொத்தமே நான் ஏழு நாட்கள் தான் வகுப்புக்கு சென்றிருந்தேன். எனவே என்னால் தேர்வு எழுத முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்வு எழுதுவதற்காகத் தினமும் கல்லூரிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்று கல்லூரி நிருவாகம் கூறி விட்டது.
இந்த நேரத்தில் நான் வலங்கைமானில் இருப்பது தி.மு.க. கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக உரூபாய்க்கு மூன்று படி அரிசி போன்ற பல திட்டங்களை அவர்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அவை தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை. ‘அண்ணாத்துரை அண்ணாச்சி மூணு படி என்னாச்சி!’ போன்ற வாசகங்களை தட்டியில் எழுதி ஊர்ப் பொதுவிடத்தில் வைத்து விடுவேன். இது தி.மு.க. கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 295
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக