(தோழர்தியாகுஎழுதுகிறார்  78 தொடர்ச்சி)

இலெனின் சுப்பையா என்று சொன்னால்

எங்கள் விடுதலைக் குரல் என்று சொல்வோம்!

1985 நவம்பர்க் கடைசியில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நேரம் நண்பராகக் கிடைத்த ளம் வழக்கறிஞர் திரு இராசுகுமார். சட்ட சமூக ஆராய்ச்சி மையம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்காக மொழிபெயர்ப்பு போன்ற சிலவற்றில் உதவுவேன். சிறைப்பட்டோர் விடுதலை தொடர்பான சில வழக்குகளை அவரிடம் கொடுத்து நடத்தச் சொல்வேன்.

இராசுகுமார் வழியாக எனக்கு அறிமுகமானவர்தான் தோழர் இலெனின் சுப்பையா. சென்னையிலும் புதுவையிலும் மனிதவுரிமை தொடர்பான நிகழ்வுகளில் பாடுவார். அவை கருத்துச் செறிவுமிக்க பாடல்களாக இருக்கும். அவரே பாடல் இயற்றி இசையமைத்துப் பாடவும் செய்வார். பக்க வாத்தியம் இருந்தாலும் இல்லா விட்டாலும் கவலைப்படாமல் எடுப்பான குரலில் உணர்ச்சி பொங்கப் பாடுவார்.

சிலநேரம் நான் கலந்து கொள்ளும் நிகழ்வில் அவர் இருக்கக் கண்டு அழைத்துப் பாடச் சொல்வேன். மறுப்பே சொல்லாமல் பாடுவார். பாடிமுடித்த பின் “தோழர், நல்லாப் பாடினேனா?” என்று கேட்பார். “அருமை” என்று பாராட்டுவேன், ஒரு முறை அவர் அப்படிக் கேட்கும் போது, “சரியில் லை தோழர்” என்ற போது அதிர்ந்து போனார்.

பிறகு தனியாக அழைத்து விளக்கினேன். அந்தப் பாட்டு பார்ப்பனியப் பண்பாட்டுடன் பாட்டாளியப் பண்பாட்டை ஒப்பிட்டுப் பாடுவது. அடுக்கடுக்கான வரிகளில் இந்த ஒப்பீடு வரும். நீ அப்படிச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன் என்று ஒவ்வொன்றுக்கும் எதிராக மாற்றைச் சொல்லிப் பாடுவார். கலை, இலக்கியம், இசை ஒவ்வொன்றாக எடுத்து இரு பண்பாடுகளையும் ஒப்பிடுவார்.

அந்த வரிசையில் வசவுச் சொற்களை ஒப்பிடும் போது “நீ அபிசுட்டு என்று சொன்னால் நான் “…….” என்று சொல்வேன் என்று வரும். அது ஒரு கெட்ட வார்த்தை. அக்கா அம்மா என்று இணைத்துத் திட்டுகிற முறைதான் அதற்கு அடிப்படை. அது ஆபாசமான வசவுச் சொல், இதைத் தவிர்க்க வேண்டும் என்றேன்.  இந்தச் சொல்லுக்குக் கிடைக்கும் கைத்தட்டல் ஒரு மட்டமான இரசனைக்கு அடையாளம். ஏட்டிக்குப் போட்டியாகக் கூட அவாளிடமிருந்து பண்பாட்டுக் கேட்டை நாம் பார்த்தொழுகக் கூடாது என்றேன். சரி என்று ஏற்றுக் கொண்டார்.

பிறகு என் எதிரில் அந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அந்த வரி வரும் போது என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார், அப்போதே அந்தச் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் போட்டுப் பாடுவார்.

ஒன்றைச் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தலைவர்கள் உட்படப் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தலைமுடியைச் சொல்வது வாடிக்கையாகி விட்டது. திரைப்படங்களில் நனவியத்தின் பேரால் கதைமாந்தர்கள் பச்சையாக் கெட்ட வார்த்தை பேசுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவை கவலை தரும் போக்குகள். சுப்பையா மாற்றிக் கொண்டார். மற்றவர்கள் மாறுவார்களா?  

தோழர் இலெனின் சுப்பையாவின் உயர்ந்த பண்புக்கு ஓர் அடையாளமாக.. நண்பர் இராசுகுமார் திடீரென மறைந்த போது அவரை நினைவேந்தத் தன்னாலியன்ற முயற்சிகள் செய்தார். எனக்கு ஒவ்வொன்றையும் அறியத் தந்தார். நான் எதிலும் கலந்து கொள்ள முடியாத தொலைவில் இருந்தேன். அதற்காக சுப்பையா என்னைக் கடிந்து கொண்டிருந்தாலும் சரியே. “சரி தோழர், நான் பார்த்து கொள்கிறேன்” என்பார்.

தோழர் இலெனின் க.சுப்பையா (1954-2022) சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகில் உள்ள நாட்டார்குடிச் சிற்றூரில் கருப்பன் – தம்பா தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். 1957 முதுகுளத்தூர் கலவரத்தின் போது நாட்டார்குடி சேரி கொளுத்தப்பட்டு அங்கு வாழ இயலாத சூழலில் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டிக்கு கருப்பன் தம்பா குடும்பம் இடம் பெயர்ந்தது.

தொடக்கக் கல்வியை முனியாண்டிப்பட்டியிலும் பள்ளியிறுதிக் கல்வியை மேலூரிலும் முடித்தார். இளங்கலை பட்டத்தை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பெற்றார்.

கல்லூரிக் காலத்திலேயே பொதுவுடைமைக் கட்சியின்(மா-லெ)  கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரிக் கல்விக்குப் பின்னர் மதுரையிலிருந்து இயங்கிய சமூக, சமத்துவ இயக்கம் (SSI) எனும் நிறுவனத்தின் களச் செயல்பாட்டாளராகப் புதுச்சேரிக்கு வந்தார்.

1986இல் மலேசியாவில் வாழ்ந்த கருப்பையா ஆறுமுகத்தம்மாள் தம்பதியினரின் மகளான சுப்புலட்சுமியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். திருமணத்திற்குப் பின்னர் புதுச்சேரியில் நிரந்தரமாக வாழலானார். தோழர் இலெனின் க.சுப்பையா – சுப்புலட்சுமி இணையருக்கு இரண்டு ஆண் மக்கள் – இசுபாருட்டகசு, கார்க்கி.  இருவரும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள்.

1995இல் விடுதலைக் குரல் கலைக்குழுவை அமைத்துத் தமிழகம் – புதுவையின் அனைத்துச் சிற்றூர்களுக்கும் பயணம் செய்து சாதி, மதம், பெண்ணடிமைத்தனம், வருக்கச் சுரண்டல் போன்ற இழிவுகளுக்கு எதிராகப் புரட்சிப் பாடல்கள் மூலம் மக்களை அணி திரட்டியவர். இசைப்போர், இசைப்போர்-2 ஆகிய 188 பாடல்களை கொண்ட இரண்டு பாடல் தொகுதிகளை வெளியிட்டார். தனது இசுபாருட்டகசு பதிப்பகத்தின் மூலம் 10க்கு மேற்பட்ட கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை நூல்களை எழுதி வெளியிட்டவர்.

தமிழகம், புதுவையில் இயங்கி வரும்  இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் நிறுவனங்கள் போன்றவற்றிற்காக 50க்கு மேற்பட்ட குறுந்தகடுகளை உருவாக்கியவர். அரசையும், அதிகாரத்தையம் தனது வலிமையான புரட்சிப் பாடல்கள் மூலம் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தவர். விடுதலைக் குரல் கலைக்குழுவின் வேர். குரலற்ற எளிய சனங்களின் குரலாக முழங்கிய கலகக் குரலுக்கு சொந்தக்காரர்.

தோழர் இலெனின் க.சுப்பையா அவர்களுக்குச் செவ்வணக்கம்!.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 50