(தோழர் தியாகு எழுதுகிறார் 79 தொடர்ச்சி)
வெண்மணியும் பெரியாரும் 1
கீழவெண்மணி குறித்துப் பெரியார் மேல் எனக்கே குற்றாய்வுகள் உண்டு. பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஆனால் சுயசாதிப் பற்று என்பது இழிவான அவதூறு. பெரியாரைக் கனவிலும் அப்படி எண்ணிப் பார்க்க முடியாது. 2017 திசம்பரில் ‘இந்து’ தமிழ் ஏட்டுக்கு வெண்மணி குறித்து நான் தந்த செவ்வியிலேயே பெரியார் பற்றிய குற்றாய்வு உள்ளது. இதோ அந்தப் பேட்டி:—
“வெண்மணி வெறும் கூலிக்கான போராட்டம் அல்ல!” – தியாகு பேட்டி
வெண்மணி படுகொலைச் சம்பவத்தின் காரணமாகக், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் தியாகு. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘வெண்மணியின் குழந்தை’. வேளாண் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சிறைப்பட்டிருந்த ஆண்டுகளில் ‘மூலதனம்’ நூலை மொழிபெயர்த்தவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினராகவும் ‘உரிமைத் தமிழ்த் தேசம்’ ஆசிரியராகவும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் தியாகு, வெண்மணி நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
கீழத் தஞ்சையில் வேளாண் கூலித் தொழிலாளர்களின் போராட்டம் எப்போது தொடங்கியது?
அப்போது காவிரித் தீரம் என்பது முப்போகம் விளையக் கூடிய பகுதி. வேளாண் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடுக்கப்பட்ட(தலித்து) மக்கள். வருக்கச் சுரண்டலும் சாதிய ஒடுக்குமுறையும் கடுமையாக இருந்தன. சாணிப்பால், சவுக்கடி என்று மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகள் இருந்தன. இவற்றுக்கு எதிரான போராட்டங்களை ‘30-கள் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் நடத்தியிருக்கிறார்கள்.
வெண்மணி படுகொலை நிகழ்வு பற்றிய ஆய்வின் போது இந்தப் பகுதியில் பொதுவுடைமை இயக்கம் எப்போது வந்தது என்று விசாரித்தேன். “எங்கள் ஊர்களில் ‘60-களில்தான் கட்சியைக் கொண்டுவந்தோம். ஆனால், வெண்மணியைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் எங்களுக்கு முன்பே கட்சி இருந்தது. எனக்கே அது முழுமையாகத் தெரியவில்லை” என்று என்னிடம் சொன்னார் ஏ.சி.கத்தூரிரங்கன். அந்தப் பகுதியில் ஒரு முக்கியமான தலைவராக இருந்த அவர், அதற்கு முன்பு திராவிட இயக்கத்தில் இருந்தவர்.
வெண்மணி வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்த இராமையா என்ற பெரியவரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். இந்தப் பகுதியில் மணலூர் மணியம்மை ஊர் ஊராகச் சென்று இயக்கப் பணிகளைத் தொடங்கினார் என்று அவர் சொன்னார். பேராயக் குமுகியக்(காங்கிரசு சோஷலிசுட்டு) கட்சியில் இருந்த மணியம்மை, நிலச்சுவான்தாரர்களுக்குத் தெரியாமல் இரவோடு இரவாகச் சென்றுதான் அந்த வேலைகளைச் செய்திருக்கிறார். சின்னக்குத்தூசியின் நண்பர் அவர். அப்போது சின்னக்குத்தூசி திராவிட இயக்கத்தில் இருந்தார். மணியம்மை பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றி செங்கொடிச் சங்கங்களை அமைத்தார். இரண்டு இயக்கமும் ஒரே காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் வளர்ந்தன.
திராவிட இயக்கத்தின் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள்
ஒரு பகுதி ஒடுக்கப்பட்ட(தலித்து) மக்கள் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரில் இயங்கினார்கள். ஏ.சி.கே., பாச்சா போன்ற தலைவர்கள் அந்தச் சங்கத்திலிருந்து உருவானவர்கள்தான்.
1967-க்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்த காலக்கட்டத்தில், கூலி உயர்வால் பலனில்லை; தேவையில்லாத வன்முறைகள் நடக்கின்றன என்று சொல்லி இந்தப் போராட்டங்களைப் பெரியார் தவிர்த்தார். அப்போது பலர் அவரை விட்டு விலகி பொதுவுடைமை இயக்கத்துக்கு வந்துவிட்டார்கள். இப்போதும்கூட, அந்தப் பகுதியில் ‘திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம்’ இயங்கிவருகிறது. ஏ.சி.கே. பிற்காலத்தில் மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அந்த அமைப்பில் இணைந்து மாநிலப் பொறுப்பாளரானார்.
முக்கியமாக, ஒடுக்கப்பட்ட மக்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாக இருந்ததால், பொருளாதாரரீதியாகக் கூலி உயர்வுக்குப் போராடுவது மட்டுமே போதவில்லை. ஒன்றாகச் சேர்ந்தால் வலிமையாக இருக்கலாம் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாக அந்தப் பகுதியில் சாதியக் கொடுமைகள் தணிந்தன.
வெண்மணி சிக்கல் எப்படித் தீவிரமானது?
1967 பொதுத் தேர்தல் முடிவுகள் மக்கள் மத்தியில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தின. மார்க்குசியக் கட்சி திமுகவுடன் கூட்டணியில் இருந்ததால், ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. வெண்மணி நிகழ்வுக்கு முன்பாகவே வேளாண் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்றே ‘உழவர் காவல் துறை’ ‘ என்று ஒரு பிரிவைத் தொடங்கினார்கள். நாகப்பட்டினம் வட்டத்தின் பல சிற்றூர்களில், அந்தக் காவலர்கள் முகாமிட்டிருந்தார்கள். நிலச்சுவான்தாரர்களின் இடங்களில்தான் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டன.
ஊர்களில் புகுந்து ஆடு, கோழிகளைத் திருடுவது, மக்களைத் தெருவில் மண்டிபோடச் சொல்வது, ‘பி.ராமமூர்த்தி ஒழிக’ என்று முழக்கம் போடச் சொல்வது என்று அந்தக் காவலர்கள் பல அக்கிரமங்களைச் செய்தனர். மறு பக்கம் நிலச்சுவான்தாரர்கள் ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்க’த்தை ஏற்படுத்தி, எந்த ஊரிலும் செங்கொடி ஏற்றக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார்கள். அவர்களது சங்கத்தின் வெள்ளைக் கொடியைத்தான் ஏற்ற வேண்டும், இல்லையென்றால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று நெருக்கடி தந்தார்கள்.
கோபாலகிருட்டிண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவருடைய மாமா பக்கிரிசாமி நாயுடுதான் அவரை ஆட்டிப் படைத்தவர் என்று சொல்வார்கள்.
காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் பூந்தழங்குடி பக்கிரி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு நாள் இரவு ஏ.சி.கே.வைக் கொலைசெய்யக் காத்திருந்தவர்கள் அவருக்கு முன்பாக வந்த சிக்கல் பக்கிரியைக் கொன்றுவிட்டார்கள். நாகை வட்டம் முழுக்கப் பதற்றமாக இருந்தது. வெண்மணி உள்ளடங்கிய தேவூர் பகுதியில் நிலக்கிழார்களின் அடியாட்கள் குடிசைகளைக் கொளுத்தும் ஆபத்து இருப்பதாக மார்க்குசியக் கட்சி சார்பில் அரசுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1968 திசம்பர் 25 முன்னிரவில் மிராசுதாரர்களின் அடியாட்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இருகூர் பக்கிரி கொல்லப்பட்டார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என எல்லாரும் பயந்துகிடந்தார்கள். பக்கத்து ஊருக்குச் சென்று உதவி கேட்பதற்காக இளைஞர்கள் எல்லாம் ஊரை விட்டுச் சென்றிருந்தார்கள். அதனால்தான் இரவு அந்த நிகழ்ச்சி நடந்தபோது ஊரில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களே இருந்தார்கள்.
நிகழ்ச்சி நாளன்று தினத்தன்று என்ன நடந்தது?
அன்று இரவு தொழிலாளர் குடியிருப்புக்குள் நீல நிறக் காவல் ஊர்தி போய் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்றார்கள். கோபாலகிருட்டிண நாயுடுதான் அவர்களை வழிநடத்திச் சென்றார். இராமையாவின் குடிசை அந்த ஊரின் கடைசியில் இருந்தது. அந்தக் குடிசையைத் தாண்டியும் போக முடியாது.
அங்கு பதுங்கிக்கொண்டால் விட்டுவிடுவார்கள் என்றுதான் தொழிலாளர் குடும்பத்தினர் நினைத்திருப்பார்கள். குடிசையையே கொளுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நிகழ்ச்சி நடந்து சில நாட்கள் கழித்து, நான் அங்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த தென்னை மரங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
வேளாண் சங்கத் தலைவர்கள் யாருமே அப்போது ஊரில் இல்லை. கேரளத்தில் மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து கொண்டி ருந்ததால், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் எல்லாரும் அங்கே இருந்தார்கள். ஏ.சி.கே. மீது ஒரு வழக்கு இருந்ததால், அவர் தலைமறைவாக இருந்தார். நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட பிறகுதான் அவர்கள் வந்துசேர்ந்தார்கள். பி.ராமமூர்த்தி வந்த பிறகுதான் காவல் துறை முற்றுகையை மீறி ஊருக்குள்ளேயே நுழைய முடிந்தது.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 50
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக