(தோழர் தியாகு எழுதுகிறார் 83 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (9)

தாராளவியமா? தாராளியமா? தாராளிகமா?

இனிய அன்பர்களே!

நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? என்பதிலிருந்து இந்த உரையாடல் தொடங்கியது நினைவிருக்கும். நவ தாராளவாதம் வேண்டா என்று தொடக்கத்திலேயே தள்ளி விட்டோம். அதுதான் வேண்டும் என்றோ, அதுவே இருக்கட்டும் என்றோ யாரும் கட்சி கட்டவில்லை. ‘நவ’ என்பது புது எனப் பொருள் தரும்.

கலைச் சொல்லாக்கத்தில் பாதி தமிழாகவும் பாதி வேற்று மொழியாகவும் இருக்கலாகாது. நவ என்ற வடமொழிச் சொல்லை தாராளம் என்ற தமிழ்ச்சொல்லோடு சேர்க்க முடியாது, சேர்த்தால் அது இயல்பான தமிழாக இருக்காது. முன்பெல்லாம் self-expansion என்பதை சுயபெருக்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இரா. கிருட்ஷ்ணையா அவர்கள்தான் “சுயமும் பெருக்கமும் ஒட்டாது” என்று சொல்லி அதனைத் “தற்பெருக்கம்” என்று மாற்றச் செய்தார்.

தன் + பெருக்கம் = தற்பெருக்கம். ஆனால் முன்னொட்டாக ‘தற்’ சேர்ப்பது எல்லா இடத்திலும் ஒத்து வராது. தற்காலம் என்ற சொல் தொடர்ந்து தவறாகவே ஆளப்படுகிறது. என் எதிரில் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இருக்கிறது. இந்தத் தற்காலம் தன்+காலம் அன்று, தத்+காலம்  தான். ‘தத்’ என்றால் வட மொழியில் அந்த என்று பொருள். தற்காலம் என்றால் அந்தக் காலம் என்றாகிறது. இந்தக் காலத்தை மனத்திற்கொண்டு அந்தக் காலம் என்பதைக் குறிக்கும் தற்காலம் என்று எழுதுவது முரண் அல்லவா? Modern என்பதைத்தான் தற்காலம் என்று தவறாக எழுதுகின்றனர். இதற்கு நல்ல தமிழ்ச் சமன் புதுமக் காலம் என்பதே. புதுமக் காலத்துக்கு ஏற்ற புதுத் தமிழ்ச் சொல்லாக்கம் தேவை. தனித் தமிழ் அல்லது தூய தமிழ் என்பது பழந்தமிழ் என்றும் புதுத் தமிழ் என்றால் ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் கலந்த தமிழ் என்றும் கருதிக் கொள்வது வெறும் மயக்கமே. பழங்கவிதை என்றால் தூய செந்தமிழ் என்றும் புதுக் கவிதை என்றால் கலப்படத் தமிழ் என்றும் கருதிக் கொள்வதும் அப்படித்தான்.

சொல்லாக்கத்தில் வேற்றுமொழிச் சொல்லை அல்லது சொற்றொடரை அப்படியே ஒலிபெயர்த்துத் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் போது அப்படிச் செய்யலாம். ஆக்சிஜன், ஐட்ரஜன், மீத்தேன்  என்றெல்லாம் எழுதலாம், அறிவியல் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளும், பாதி தமிழ், பாதி வேற்றுமொழி என்று எழுதுவதுதான் மோசம். அறிவியலுக்கு மொழி பெரிதில்லை என்பது பிதற்றலே. சரியான மொழியில்தான் சரியான அறிவியல் பழகும்.

சரி, தாராளவியமா? தாராளியமா? என்ற வினாவிற்குத் திரும்புவோம். இரண்டு விதமாகவும் ஆளலாம் என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லியிருந்தார். புணர்ச்சி இலக்கணப்படி தாராளவியம்தான் சரி என்று சிபி சுட்டிக் காட்டினார். சிபி சொல்லும் இலக்கணம் சரியானதே என்று இலக்குவனார் திருவள்ளுவனார் ஏற்றுக் கொண்டார். ஆனால் தாராளியம் என்று பழகியிருந்தால் அதிலும் தவறில்லை என்றார். ஆக, தாராளவாதத்துக்கு விடை கொடுத்தனுப்பிய பிறகும், தாராளியமா? தாராளவியமா? என்ற கேள்வி எஞ்சியிருந்தது. எந்நேரமும் என் அருகில் அருங்கலைச்சொல் அகரமுதலியாக அமர்ந்திருக்கும் சொல்லாய்வறிஞர்  அருளியாரைக் கேட்டேன். தாராளிகம் என்றார். இது என்னய்யா புதிய சிக்கல்? தொலைப்பேசியில் சிக்கலைச் சொல்லி வைத்தேன். உடனே அவர் ஒன்றும் சொல்லவில்லை. காத்திருந்தேன். அவரிடமே கேட்க வேண்டும், அவர் சென்னை வந்தால் கேட்டு விடலாம்  எனக் காத்திருந்தேன். வரவில்லை. புதுவைக்கே சென்று கேட்டு வரலாமா? என்று கூட எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று தொலைப் பேசியில் அழைத்து அவரே விளக்கமாகப் பேசினார்:

தாராளம் என்ற சொல் எப்படி வந்திருக்கக் கூடும்? என்று பாவாணர் ஆராய்ந்தார். தார் என்றால் படை. ஆள் என்றால் படைத் தலைவன். (அல்லது படையாளாக கூட இருக்கலாம்) இந்தத் ‘தாராள்’ என்ன செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களாம். அவனது போக்கு தாராளம் எனப்பட்டது. தாராளம் என்பதன் வேர்ச்சொல் தாராள் ஆகையால் தாராள் + இயம் எனக் கொண்டால் தாராளியம் பெறப்படும். தாராளியம் என்பதில் தவறில்லை. தாராளம் + இயம் என்று பிரித்தால் தாராளவியம் என்றும் சொல்லலாம். நீங்கள் தாராளியம் என்று சொல்லிப் பழகியிருந்தால் அவ்வாறே தொடருங்கள்! தாராளமாகத் தொடருங்கள் என்றார்.

அப்படியானால், தாராளிகம் என்று அகரமுதலியில் கூறியுள்ளீர்களே? அப்படிச் சொல்வது தமிழ் மரபுக்கு உகந்ததே! வாணியத்தை வாணிகம் என்று சொல்வதில்லையா?

நாகரிகம் போல் தாராளிகம் எனக் கொள்ளலாம். நான் தாராளியம் என்றே எழுதியும் பேசியும் வருகிறேன். புதுத் தாராளியம் எதிர்ப்போம்! பழந்தாராளியத்தின் வரலாறு படிப்போம்! ஊழியர் கொள்கையில் மாவோ சொல்லும் தாராளியப் போக்குகளைக் களைவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 52