(தோழர்தியாகுஎழுதுகிறார் 77 தொடர்ச்சி)
இலெனினைப் படிப்போம்!
இலெனினைப் பயில்வோம்!
இலெனின் தேசத் தன்-தீர்வுரிமை குறித்து என்ன எழுதினார், எப்படி விளக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பார்ப்பது கதிரவனுக்காகவே அன்று. அக்கறை கொண்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
பாட்டாளி வகுப்பின் நலன் பற்றிப் பேசிக் கொண்டே தேசிய இனச் சிக்கலில் இந்திய ஆளும் வகுப்பின் ஒடுக்குமுறைக் கொள்கைக்கு வால் பிடிக்கும் பாரத பக்த இடதுசாரிகள் எப்படியெல்லாம் இலெனினைத் திரிக்கின்றார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இடதுசாரிகள் இலெனினுக்குச் சிலை வைக்கிறார்கள் என்று செய்தி வந்த போது சிலையின் பீடத்தில் என்ன எழுதி வைக்கப்போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.
“தேசிய ஒடுக்குமுறை நிலவும் சூழலில் தேசங்களின் தன்-தீர்வுரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் குமுகியர்கள் ஆவது கிடக்கட்டும், குடியாட்சியரே ஆக முடியாது.”
[அதாவது ஒடுக்குண்ட தேசத்தின் தன்-தீர்வுரிமையை ஏற்க மறுப்பவர்கள் குமுகியர்கள் ஆக இருக்க முடியாது. அவ்வளவு ஏன், சனநாயகவாதிகளாகக் கூட இருக்க முடியாது]
இந்திய வல்லரசியத்தின் தேசிய இனக் கொள்கைக்கும் இந்த இடதுசாரிகள் எனப்படுவோரின் தேசிய இனக் கொள்கைக்கும் அடிப்படையான வேறுபாடில்லை என்பதைப் புரிய வைத்தாக வேண்டும். இந்தத் திரிபியர்கள் இலெனினை எப்படியெல்லாம் சீரழித்துத் தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எனக்குள்ள பட்டறிவைச் சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக இனவாத நிலைப்பாடுகள் எடுத்துக் கொண்டு மார்க்குசியம் சரியில்லை, இலெனினுக்குத் தெளிவில்லை என்று கயிறு திரிப்பவர்களையும் தோலுரித்தாக வேண்டும்.
மூன்றாவதாக இலெனினைப் பற்றி எதுவும் தெரியாமலே இலெனின் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று முழங்கினால் வாய்வீச்சுப் புரட்சிக்குத் தகுதி பெற்று விடலாம் என்று எண்ணிக் கொள்ளும் துணிச்சல்காரப் பொய்யர்களிடமிருந்தும் இலெனினைக் காத்தாக வேண்டும்.
எனவேதான்
இலெனினைப் படித்தால் போதாது, பயிலவும் வேண்டும்!
கற்க கசடற! இலெனினைக் கற்க கசடற!
இலெனின் எழுதிய ஒரு நூல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நூலினைப் படிப்பதோடு பயிலவும் வேண்டும் என்பதற்காகவே! இன்னும் பேசுவோம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 49
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக