பொருள் உடையவர் முன் இல்லாதவர் பணிந்து நின்று பெறுவதுபோல் கல்வியறிவு உடையவர் முன் பணிந்து கற்க வேண்டும். அவ்வாறு கற்காதவர் இழிந்தவர் என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியியல் அரசியலையும் அரசியல் கல்வியியலையும் பாதிக்கின்றன. கற்றவரே முன்னிலையில் இருப்பர் என அரசறிவியலாளர் கூறுகின்றனர். அதுபோல் கல்லாதவரைக் கடையராகத் திருவள்ளுவர் கூறுகிறார்.
ஏக்கற்று என்றால் ஏக்கமுற்று எனச் சிலர் பொருள் கொள்கின்றனர். ஏக்கறுதல் – பெருமையை இழத்தல். தொல்காப்பியர் “ஏ பெற்று ஆகும்”(தொல்காப்பியம், உரியியல், நூற்பா 7) என்கிறார். பெற்று = பெருமை, பெருக்கமுமாம். எனவே, ஏக்கறுதல் என்றால் பெருமையை இழத்தல். தனக்குரிய பெருமையை இழந்து பணிந்து நிற்றல் என்பதை இச்சொல் குறிக்கிறது.
இரங்கத்தக்க நிலை வந்துவிட்டதே எனக் குறுகி, பொருள் கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் தன்நிலை கருதாது பொருளையே கருதிப் பணிந்து நிற்கின்றனர். அதுபோல், தனக்குள்ள செல்வ நிலை முதலியவற்றைக் கருதாது, தான் கல்விச்செல்வம் இல்லாத வறுமையாளன் என்பதை உணர்ந்து பணிந்து கற்க வேண்டும்.
பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,
பிற்றைநிலைமுனியாதுகற்றல்நன்றே (புறநானூறு 183)
என்கிறார். வழிபட்டு அல்லது பணிந்து நிற்கவேண்டியது குறித்துச் சினமோ வெறுப்போ கொள்ளாமல் கல்வியறிவு உடையாரிடம் கற்க வேண்டும் என்கிறார். இதையேதான் திருவள்ளுவரும் இங்கே வலியுறுத்துகிறார்.
பேரா.முனைவர் சி.இலக்குவனார், கற்பதற்கு முன்பு, ஒன்றும் இல்லாதவர் பொருள்களைப்பெற விரும்பி நிற்பதுபோல் விரும்பிக் கற்றால் பின்னர் எல்லாம் பெற்று உயர்வர். கல்லாதவர் எல்லாம் இயல்பாகப் பெற்றிருந்தாலும் தாழ்ந்தவராகக் கருதப் பெறுவார் என்கிறார்.
பொருள் இல்லாவிட்டாலும் வறுமையில் செம்மை உடையவர்கள் யாரிடமும் சென்று இரக்க மாட்டார்கள். உடையவர் முன் இல்லாதவர் பணிதலும் உலகில் உள்ளதெனினும் திருவள்ளுவர் பொருளாதார வேறுபாட்டை உவமையாகக் கூறியிருப்பார் என்று எண்ணுவது சரியல்ல. முன்னோர்கள் அவ்வாறு கூறி, அதன் வழி இக்கால அறிஞர் பெருமக்களும் அவ்வாறுதான் கூறியுள்ளனர். எனினும் நாம், பின்வருமாறு கருதலாம்
கல்விச் செல்வம் உடையவர் முன், தனக்கு வேறு செல்வம் இருப்பினும் ஒன்றும் இல்லாதவர்போலும் தனக்குக் கல்வியறிவு இருப்பினும் சிற்றறிவும் இல்லாதவர்போலும் தன் பெருமை நிலையை மறந்து கற்பவரே உயர்ந்தவர் ஆவார். பிற செல்வம் உடைமையால் கற்காமல் போனால் அவர் கடைமகனாவார்.
இவ்வாறு திருவள்ளுவர் கூறியுள்ளார் என்பதே திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை உணர்த்தும் எனலாம்.
அனைத்து நிலைகளிலும் கட்டணமில்லாத் தாய்மொழிவழிக் கல்வி அளித்து, அனைவரையும் கற்றவராக்குவதை அரசுகள் தத்தம் கடமையாக்கட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக