கருத்துக் கதிர்கள் 16-18 : [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]
கருத்துக் கதிர்கள் 16-18
[16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க.
துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும்.
குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]
16. ஒரே தேர்தல் : பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (19.06.2019) நடைபெற்றது. நாடு முழுவதும் ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரும் இத்திட்டத்தைப் பெரும்பாலோர் எதிர்த்து வருகின்றனர். இக் கூட்ட முடிவில் பா.ச.க.அமைச்சர் இராசுநாத்து(சிங்கு), ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்குஅனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது எனப் பொய்யுரை புகன்றுள்ளார்.அவரே, “ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் 21 கட்சிகள் கலந்து கொண்டன. மேலும் 3 கட்சிகள் தங்களது ஆலோசனைகளைக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர்” எனக் கூறியுள்ளார். வந்திருந்தவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் எப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவாகக் கூறமுடியும். தமிழ்நாடு, மே.வங்காளம், கேரளம், மகாராட்டிரம், புது தில்லி முதலான அனைத்து மாநிலங்களிலுமே பா.ச.க. நீங்கலான பல கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. வழக்கம்போல் மக்களுக்கு எதிரான திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் ஆதரவு இருப்பதுபோல் பொய்யுரை கூறும் பா.ச.க. இப்பொழுதும் அவ்வாறு கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. பொய்யை அடித்தளமாகக் கொண்ட கட்சி எப்படி மெய்யைக் கூறும்? பொய்களை வித்திடுவோரை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாமா?
இலக்குவனார் திருவள்ளுவன்
துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும்.
மூத்த தலைவரும் மேனாள் அமைச்சரும் தான் பொறுப்பு வகித்த பொதுத்துறையின் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவருமான துரை முருகன் நலக்குறைவில் அடிக்கடி மருத்துவமனை சென்று வருகிறார். அவர் விரைவில் நலமடைய நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம், தன் மகன் போட்டியிடும் வேலூர் தொகுதியின் தேர்தல் ஒத்திவைக்ப்பட்டுள்ளதால் கவலையில் உள்ள அவர் நிலை தடுமாறிப் பேசுவது வருந்தத்தக்கது. சென்னைக்கு வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டுவரப் போவதாக அரசு அறிவித்ததை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் எனச் செய்திகள் வந்தன. அதை மறுத்துள்ளார். எனினும் அதிலும் என்ன கூறியுள்ளார்? “வேலூர் மாவட்டத்தில் உள்ள சோலார் பேட்டையைத் தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனைச் சென்னைக்குக் கொண்டுபோவதில் எங்களுக்கு எந்தவித மறுப்பும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்துச், சென்னைக்கு கொண்டு போனால், எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றுதான் வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்” என்றுதான் விளக்கம் அளித்தார். வேறு எங்காவது கிடைக்கும் தண்ணீரை வழங்குவதை மறுத்துக் கூறுவதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
வந்த செய்திக்கும் இவர் கூறுவதற்கும் வேறுபாடு இல்லையே! தொடக்கத்திலேயே வேலூருக்கு வாரம் இருநாள் மட்டும் வரும் தண்ணீரைக் கொண்டு எப்படிச் சென்னைக்கு அனுப்ப முடியும் என்று கேட்டிருந்தால், உண்மை நிலையை விளக்குவதாக எடுத்துக் கொண்டிருக்கலாம். மாறாகப் போராட்டம் என்று சொன்னால், காவிரி நீரைக் கேட்பதில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களுக்கு ஆதரவான திட்டங்களில் போராட்டம் என்றெல்லாம் சொல்லித் தி.மு.க.வின் எதிர்காலத்தைக் கெடுக்க வேண்டா என அதன் தலைவர்மு.க.தாலின் அவரைக் கண்டிக்க வேண்டும். அதே நேரம் அவர் கூறிய சிக்கல் உண்மை என்றால், அரசு மிகுதியாகத் தண்ணிர் இருக்கக் கூடிய வேறு எங்கிருந்தாவது சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா?
கேரள முதலமைச்சர் பிணறாயி விசயன் நாள் தோறும் தண்ணீரைத் தொடரி மூலம் சென்னைக்கு அனுப்ப முன்வந்ததாகவும் தமிழக அரசு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு மக்களிடையே எதிர்ப்பு வந்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில்,கேரள அரசு வழங்கும் தண்ணீரைத் தமிழக முதல்வர் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். காலம் தாழ்த்தி நன்றி தெரிவிதது விட்டு இப்போதைக்குத் தேவையில்லை எனக் கேரளக் குடிநீரை வாங்காத பொழுது மறுப்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும் ? நம் தேவைக்கு அவர்கள் தரும் பங்களிப்பு ஆயிரத்தில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், சிறுதுளி பெருவெள்ளமாகுமன்றோ!
கேரளத்திற்கு அண்மையில் தண்ணீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிக்கு அந்தத்தண்ணீரைப் பயன்படுத்தலாம் அல்லவா? அதிகாரிகள், கேரளம் நாள்தோறும் தண்ணீர் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றார்களாம். கேரள முதல்வரும் நாள்தோறும்தானே தண்ணீர் வழங்குவதாகத் தெரிவித்தாகச் சுட்டுரையில் தெரிவித்துள்ளார். அப்புறம் எதற்கு இந்தச் சமாளிப்பு? போதை நீரில் தள்ளாட்டம் என்பது இயற்கையான ஒன்று. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக