அகரமுதல
செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!- மு.க.தாலின் கண்டனம்
செம்மொழி திறனாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுக் குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் வலியுறுத்தியுள்ளார்.
வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது எனத் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்திய முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக மு.க.தாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (மார்ச்சு 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழுக்கு எதிராகத், தமிழ்ப்பண்பாட்டைத் தன் மனம்போன போக்கில் பாசக, மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பும் நோக்கில் திரித்து எழுதிவரும் நாகசாமிக்கு மோடி அரசு பத்மவிபூசண் விருதை வழங்கிச்சிறப்பித்தது. இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பை வழங்கி செம்மொழித் தமிழுக்குப் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், “கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தத்தளித்து நிற்கிறது. 2016-17 முதல் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, சிறப்பிப்பதையோ, கலைஞர் பெயரில் அமைந்துள்ள சிறப்பு விருதையோ, பாசக அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியுள்ளது” என்றும் தாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் அவசர அவசரமாகத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு இப்போது விருதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தாலின், “அன்னைத் தமிழாம் செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் திரு.நாகசாமி செம்மொழித் தமிழாய்வு விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளைக் கிள்ளுக்கீரையாக எண்ணிப் பாசக அரசு அவமானப்படுத்துகிறது. சமக்கிருதமும், வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற நச்சுப்பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிச் செம்மொழித் தமிழாய்வு விருதுகளைப் பாகுபாடின்றித் தேர்வு செய்ய முடியும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டை வெளிக்கொணராமல் ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சிகளைப் பாசக அரசு இன்னும் மூடி மறைத்து வருகிறது எனவும், இதில் உள்ள சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மாபெரும் துரோகம் செய்வதாகவும் தாலின் தெரிவித்துள்ளார். நாகசாமியை உடனடியாக அக்குழுவிலிருந்து நீக்கிவிட்டு, ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாசு சவடேகருக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழர்களின் உணர்வுடன் விபரீத விளையாட்டு நடத்த வேண்டாம் என்று மத்திய பாசக அரசை எச்சரிப்பதாகவும் அந்த அறிக்கையில் தாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக