அகரமுதல
உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டுத் தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் அமைப்பும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் தாய்மொழி நாள் உறுதியேற்பு விழா, தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதி(பலூன்) பறக்கவிடும் நிகழ்வு, தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களைப் போற்றிச் சிறப்பு செய்திட சிறப்பாரம் (விருது) வழங்கும் விழா ஆகியன இணைக்கப்பட்டுத் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி ஏ.வி. அரங்கத்தில் உலகத்தாய்மொழி நாளான 20.02.2019 அன்று நடை பெற்றது.
தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தலைவர் இசை மொழி இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். தமிழரண் மாணவர்கள் தாமரை, இரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினரான தூய வளனார் கல்லூரி கலைமனைகளின் அதிபர் தந்தை இலியோனார்டு முன்னிலையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 22 தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பள்ளி – கல்லூரி மாணாக்கர்களால் தமிழ்க் குரிசில் என்னும் சிறப்பாரம் (விருதுகளை) வழங்கப்பெற்றுப் பொன்னாடை அணிவித்து மலர்கள் தூவி போற்றப்பட்டனர்.
பெயரில், கல்வியில், கையெழுத்தில், வழிப்பாட்டில், நிருவாகத்தில், ஆட்சியில், வணிகப் பெயர்ப் பலகையில், ஊர்திகளில், இல்லற வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில், எங்கும் எதிலும் தமிழே நிலைபெறச் செயல்படுவோம் என மாணவர்கள், சான்றோர் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றனர்.
நிறைவில் தமிழ்ச் சான்றோர்கள் படம் பொறித்த வளிஊதியைப் (பலூன்) பறக்கவிட்டு, அன்னைத் தமிழ் வாழ்க! என்றும் தமிழாய் வாழ்வோம்! தாய் தமிழை தலை நிமிரச் செய்வோம்! என்றும் முழக்கங்கள் முழங்கினார்கள்.
இந்நிகழ்வை தமிழரண் மாணவன் விசயகுமார் ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றினார். தமிழகப் பெண்கள் செயற்களத்தின் தீபிகா, தமிழரண் மாணவி கவிதா இருவரும் தொகுத்து வழங்கினார்.
இறுதியில் தமிழரண் மாணவி அபிநயா நன்றி கூற இனிதே நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக