நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி
அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம்.
தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர்
உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது.
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள் முதலான நம் தமிழ் நூல்களில் இசை,இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் குறித்து மிகுதியான செய்திகள்இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் முதலான இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார்.பொங்கு தமிழ் மன்றம்,தந்தை பெரியார் தமிழிசை மன்றம், முதலான அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.
’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் ‘தொல்லிசையும் கல்லிசையும்’ என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின்தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.
வயல்வெளித் திரைக்களம். புதுச்சேரி – 605 003. தொடர்புக்கு: 94420 29053
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக