சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே! ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த) நாளான 12-02-2019 அன்று காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மொழி மீதும், மண் மீதும், பற்றுக்கொண்டு தன் இனத்தின் விடுதலை வாழ்விற்காகத் தன்னையே ஒப்படைத்த அந்த உன்னதத் தியாகியின் நினைவு நாளில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைத்து மக்களும் கலந்துசிறப்பிப்பதே சிறந்த மரியாதையும், அஞ்சலியுமாகும்.
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாகப் புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகை ப்பேரொளி முருகதாசன், சுவிட்சர்லாந்தில், செனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 பிப்.  12 அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரித் தீக்குளித்தார்.
“7 பக்கங்களுக்கு உலகச் சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தீயில் வீரகாவியமானவரே ‘ஈகைப்பேரொளி’ எனப் போற்றப்படும் வருணகுலச்சிங்கம் முருகதாசன் அவர்கள் ஆவார்.
-ஈழம் இரஞ்சன்