தம் 93 ஆம் அகவையில், தை 23, 2050 / பிப்.06,2019 அன்று இயற்கை எய்திய (தன்மானப் போராளி வழக்குரைஞர் சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன்) சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப் பெற்றது.
சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேலை நேரத்திற்குள் செல்ல இயலாது என்பதை உணர்ந்ததால் விண்ணப்பப் படிவம் அளித்தல், ஒப்புகை பெறல் முதலான முன் ஏற்பாடுகளைச் செய்து முடித்தோம். இதற்கு எம்ஞ்சியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மரு.சுதா சேசையன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வெண்ணிலா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மரு. ஆனந்து, தொழிலதிபர் மனோகரன் ஆகியோர் உதவி செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் மேனாள் முதல்வர், ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மரு. மலர்க்கண்ணி இன்பலாதன், வழ.இன்பலாதன், மரு. இ.இராசராசன் ஆகியோர் ஏற்பாட்டால் மின்னஞ்சல்வழி அனுப்பிய படிவங்களை மருத்துவமனையில் பெற்று முன் நடவடிக்கை எடுத்தனர்.
மாலை 4.00 மணிக்குள் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு வர முடியாது என்பதால் உடலை அமரர் அறையில் ஒப்படைக்க இசையுமாறும் மறுநாள் மருத்துவமனையில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தோம். ஆராய்ந்து பார்த்த பின் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனையக மருத்துவ அலுவலர்(RMO) மரு.மகேந்திரன் இதனை ஒப்புக் கொண்டார். இரத்த வங்கிப் பொறுப்பாளர் திரு பாண்டியன், அமரர் அறைப் பொறுப்பாளர் திரு கோபி, பிற மருத்துவர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.
மறுநாள் (24.01.2050 / 07.01.2019) காலை எளியோர் துணைவர் இரா.இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக முறைப்படி வழங்கப் பெற்றது.
அவர் கண் தானத்திற்கு விழைவு தெரிவித்திருந்தாலும் உரிய காலத்திற்குள் கண் வங்கியில் தொலைபேசியை எடுக்காத காரணத்தால் அவர் விருப்பத்தை நிறைவேற்ற இயவில்லை.
உடல்கொடை குறித்த விழிப்புணர்வும் செயலுணர்வும் அரசிற்குத் தேவை என்பதை உணர்ந்தோம். இது குறித்துத் தனியே எழுதுகிறேன்.
உடல் கொடையை ஏற்பதற்கு வெவ்வேறு வகையில் உதவிய மேற் குறித்தோருக்கும் பிறருக்கும் குடும்பத்தினரின் நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக