செவ்வாய், 6 ஜூன், 2017

மிகச்சிறந்த பாராளுமன்றவாதி இரா.செழியன் மரணம்
மிகச்சிறந்த பாராளுமன்றவாதி 
 இரா.செழியன் மரணம்

மேனாள் அமைச்சர் நாவலர்  நெடுஞ்செழியனின் தம்பியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் (95) இன்று(வைகாசி 23, 2048 / சூன்  26, 2017) வேலூரில் மரணம் அடைந்தார்.

. 21 ஆண்டுகள்  நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி மிகச்சிறந்த பாராளுமன்றவாதி என்று பாராட்டு பெற்றவர்.

  சனதா தளம்,உலோகதளம் கட்சிகளில் முன்னணித் தலைவராக திகழ்ந்தவர். கடந்த 2001- ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
  தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் சித்திரை 15, தி.பி. 1954 / 1923- ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 - இல் பிறந்தார்.
மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கத்தின் மீது கொண்ட பற்றுதலால் தி.மு.க தொடங்கப்பட்ட போது அந்தக் கட்சியில் சேர்ந்தார்.

1962, 1967 ஆகிய தேர்தல்களில் கும்பகோணம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977 இல் தி.மு.க.வில் இருந்து விலகி சனதா கட்சியில் இணைந்து மத்திய அரசியலில் ஈடுபட்டார்.

1988- இல் சனதா கட்சி உடைந்து வி.பி.சிங்கு  தலைமையில் சனதா தளம் உருவானதும் அதில்  முதன்மைப் பொறுப்பு வகித்தார்.

பின்னர்  இராமகிருட்டிண எக்குடே தலைமையில்  உலோக தளம் உருவானதும் அதில் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

1975- இல் நெருக்கடி (மிசா) கால அத்துமீறல்கள் பற்றி  சா ஆணையம் உசாவி 525 பக்க அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையைச் செழியன் மீட்டெடுத்துப் புத்தகமாக ஆங்கிலத்தில் வெளியிட்டார்.  நாடாளுமன்றத்தில் செழியன் ஆற்றிய உரையின்தொகுப்பு நூலாக(Parliament for the People) வெளிவந்துள்ளது.
1934 ஆம் ஆண்டு முதல் அவர் சேமித்து வைத்திருந்த 6500 நூல்களை வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
சிறுகதைகள், நாடகங்கள் எழுதி எழுத்தாளராகவும் புகழ் பெற்றார்.
2005ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பெரியார் விருது வழங்கி  இரா.செழியனைச் சிறப்பித்தது.


தன் கட்டுரை இதழ்களில் வெளிவந்தால் எனக்கு அனுப்பி என் கருத்துரையைக் கேட்கும் வகையில் என்மீது அன்புள்ளம் கொண்டவராக இருந்தார். அவரது கட்டுரைகளைப் பகிர்ந்தால் உடன் நன்றி தெரிவிப்பார். அன்னார் மறைவிற்கு அகரமுதல மின்னிதழ்  சார்பிலும் தமிழ்க்காப்புக்கழம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.