திங்கள், 5 ஜூன், 2017

அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக! – முதல்வர் வி.நாராயணசாமி




சமூக வலைத்தளங்களில்
அவதூறு பரப்புவதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்துக!

புதுச்சேரி: அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதைப் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என, முதல்வர் வி.நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவர் ம.சே.கு.(Centac) மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது:
முந்தைய ஆண்டுகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீட்டு முறை இல்லை. தற்போது இந்த அரசின் விடா முயற்சியால் 50  விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம்.
அதன்படி, 318 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் அரசு ஒதுக்கீடாக 50  விழுக்காடு (162 இடங்கள்) பெறப்பட்டன.
நீதிபதி  இராசேசுவரன் தலைமையிலான குழு அரசு ஒதுக்கீட்டுக்கு உரூ. 3 இலட்சம், நிருவாக ஒதுக்கீட்டுக்கு உரூ. 13 இலட்சம் எனக் கட்டணத்தை  வரையறுத்தது. இதனை எதிர்த்து, தனியார் கல்லூரி நிருவாகங்கள் வழக்கு தொடர்ந்தன.
பின்னர்க் கட்டணக் குழுவை மீண்டும் கூட்டி அரசு ஒதுக்கீட்டுக்கு உரூ. 5.5 இலட்சம், நிருவாக ஒதுக்கீட்டுக்க உரூ. 14 இலட்சம் என  வரையறுக்கப்பட்டது.
கடந்த 30-ஆம்  நாள் ஆளுநர் கிரண் பேடி ம.சே.கு.(Centac) அலுவலகத்துக்குச் சென்று அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிருவாக ஒதுக்கீடாக தரப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டைக் கூறி, ம.சே.கு.(Centac) ஒருங்கிணைப்பாளரிடம் சில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு மடல்களை வழங்கும்படி உத்தரவிட்டார். 26 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு மடல் தரும்படி அவர் கூறியுள்ளார்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டண  வரையறைக் குழுவின் அதிகார வரம்புக்குள் வருவதாகத் துணைநிலை ஆளுநர் உறுதி அளித்ததால், 22 மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்தனர். புதுவை மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் முறைகேடு செய்வதாக சமூக வலைத்தளங்களில் ஆளுநர் கூறியுள்ளார். இவ்வாறு கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறக் கூடாது. இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக