தமிழர்
நாகரிகம் தமிழர் பண்பாடு குறித்த
தமிழ்ச்சான்றோர்
வகுத்த முடிவுகளை
அரசியல்
காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா!
கடவுள் வழிபாட்டில் ஊறிய நாம் பல்வேறு வடிவங்களைக் கற்பித்து
வழிபடுகிறோம். ஓராற்றல் அஃதே பேராற்றல், அதற்கு வடிவம் இல்லை, அடியும் இல்லை, முடியும் இல்லை எனத் தெரிந்தும் முருகன் என்றும் கண்ணன் என்றும்
சிவன் என்றும் திருமால் என்றும் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
திருநாமம் நாம் வழங்கிக் கொண்டாடுகிறோம். இஃது நம்பிக்கை. இங்கே
ஆராய்ச்சிக்கு இடமில்லை.
பிறந்தநாள் கொண்டாடுகிறோம். யாருக்கு? ஆதியும் அந்தமும் இல்லாத
பரம்பொருளுக்கு! கண்ணன் பிறந்தநாளும் கந்தன் பிறந்த நாளும் நம்மைக்
களிப்பில் ஆழ்த்துகின்றன. ஆடி மகிழ்கிறோம்; பாடிப் பரவுகிறோம். இந்தப் பிறந்தநாளை யார் வகுத்தார்? எப்படி வகுத்தார்கள்? எல்லாமே நம்பிக்கையின்
அடிப்படையில் தான்.
சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை தாக்கம்
செலுத்திவரும் மாபெரும் இலக்கிய ஆளுமை திருவள்ளுவர் என்பதில் ஐயமில்லை. அவர்
எப்போது தோன்றினார்? வரலாற்றுச் சான்றுகள் காட்ட முடியுமா? பல குழப்பங்கள்
நிலவிவந்தன. எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தோற்றம் என
வகுத்து தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடலாம்
எனச் சான்றோர் முடிவு மேற்கொண்டனர்.
யார் யார்? மறைமலையடிகள், கா.நமச்சிவாயர், தெ.பொ.மீ, கி.ஆ.பெ. எனப் பல தமிழ்ச்சான்றோர்கள். இவர்களெல்லாம் அரசியல்வாதிகளா? ஏதேனும் கட்சியைச்
சேர்ந்தவர்களா?
தமிழியக்கச் சான்றோர் வகுத்த முடிவுகளைக் கலைஞர் ஏற்றுக்கொண்டு
அரசு கால அட்டவணையில் இடம்பெறச் செய்தார். இதனைப் பின்பற்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மோரிசியசு நாடுகளில்
திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டு
வருகின்றது. அந் நாட்டு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். உலகின் அனைத்து நாடுகளிலும்
புலம்பெயர் தமிழர் தை இரண்டாம் நாளையே திருவள்ளுவர் திருநாளாகக்
கொண்டாடிவருகின்றனர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக நிலவிவரும் இந்த வழமை தமிழ்
மறுமலர்ச்சியின் குறியீடு எனல்
பொருந்தும். அனைத்துச் சமயத்தினர்க்கும் அரசியல் சார்பினர்க்கும் பொதுவான
திருவள்ளுவர் திருநாளை அரசியல் கண்ணோட்டத்தில் காண்பது முறையாகுமா?
தொன்மைவாய்ந்த ஒரு பெரும்புலவரின் பிறந்தநாளை வரலாற்றின்
அடிப்படையில் கணிக்க இயலாத சூழலில் தமிழறிஞர்கள் மேற்கொண்ட வழிமுறையே நாம்
கொண்டாடிவரும் திருவள்ளுவர் திருநாள் எனலாம். சமயப்பெரியவர்கள் வகுத்த
கண்ணன் பிறந்தநாளையும் முருகன் பிறந்தநாளையும் கேள்வி கேட்காமல்
ஏற்றுக்கொள்கிறோம்.
தமிழ்ச் சான்றோர்கள் வகுத்த திருவள்ளுவர் திருநாளையும் அதுபோன்றே
ஏற்றுத் திருவள்ளுவர் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் பரப்பிவருதல்
நமது கடமையாகும். இதனை மாற்ற முயல்வது பெருங்குழப்பத்திற்கும் வீணான பூசல்களுக்கும்
வழிவகுத்துவிடலாம்.
தமிழால் இணைவோம்; தமிழைப் போற்றும்போது கட்சிவேறுபாடுகளை
மறப்போம். மானிடம் உய்வதற்கும் அமைதி பரவுதற்கும் உலகம் ஒன்றுபடுவதற்கும்
வள்ளுவர் வகுத்த வாய்மொழியைப் பின்பற்றுவோம்.
மறைமலை இலக்குவனார்
செயலாளர், தமிழகப்
புலவர் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக