வியாழன், 16 பிப்ரவரி, 2017

அ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்! - இலக்குவனார் திருவள்ளுவன்




அ.தி.மு.க.,   
பதவி  நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்!

  ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின் அடிப்படையில் கொடுத்ததாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பதவி விலகல் ஏற்பிற்குப்பின்னர்,  ஆளுநருக்கும் தலைமையமைச்சருக்கும் நன்றி மடல்கள் அனுப்பியுள்ளார்.  எவ்வாறிருப்பினும் ஆளுங்கட்சியின் நம்பிக்கையை இழந்தபின்னர், பதவி கோரும் உரிமையில்லை.
  ஆனால்,  சட்ட அடிப்படையில்லாத இவரின் கோரிக்கையை அடிப்பைடயாக வைத்துப்,  பேர வணிகத்திற்கு இடமளிக்கும் வகையில், ஆளுநர்  பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு உள்ள எடப்பாடி க.பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
இச்சசூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, பன்னீர்செல்வம்  மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும்,  அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்து, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்குமாறு ஆளுநருக்கு வேண்டுகோள் தீ்ர்மானம் இயற்ற வேண்டும். முதல்வர் பதவியைக் கோரும் உரிமை பன்னீர்செல்வத்திற்கு இல்லை என்பதை உணர்த்தவே இந்தத் தீர்மானம்.

  முன்னர் அளித்த தீர்மானத்தின்படி, அவர்கள், எடப்பாடி க.பழனிச்சாமியைத் தங்கள் தலைவராக ஏற்றுள்ளதாகவும் அவரை ஆட்சி  அமைக்க அழைக்க  வேண்டும் என்றும் இரண்டாம் தீர்மானம் இயற்ற வேண்டும்.

 இத்தீர்மானங்களை ஆளுநருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆளுநர் வித்தியாசாகர் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் பல்வேறு வழக்குகள் முளைத்து, மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக