தலைப்பு-தன்னாட்சி, கட்டாயம், விக்கினேசுரவன்2/3 ; thalaippu_thannaatchi_kattaayam_vigneswaran

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3

  கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன?
 போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து பயன்களைத் துய்ப்பதன் (அனுபவிப்பதன்) பொருள் என்ன? கேளிக்கை விடுதிகள், வேளாண் பண்ணைகள், தனியார் குடியிருப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து படையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நீதி என்ன?
  வல்லாளுகை(ஆக்கிரமிப்பு) செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தையும் விடுவிக்காததன் காரணம் என்ன? மேலும், பல காணி அளவுக்கு மக்கள் நிலங்களை இப்பொழுதும் புதிதாகக் கையகப்படுத்தும் படையினரின் நடவடிக்கை எம் மக்களின் மனத்தில் ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
 போர்க்குற்றப் பொறிமுறையானது கலப்புப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பது 2015ஆம் ஆண்டின் செட்டம்பர் மாதப் பன்னாட்டு எதிர்பார்ப்பு. வெளிநாட்டு வழக்கு நடத்துநர், வெளிநாட்டு நீதிபதிகள், பன்னாட்டுப் போர்க்குற்றச் சட்டத்தை உள்ளேற்றல் போன்றவை இல்லாது கலப்புப் பொறிமுறையைப் புறக்கணித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் எமது நல்லாட்சி அரசு நாடுவது எமக்கு ஐயங்களை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
  இவை மட்டுமல்ல, எமது வடக்கு – கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுதும் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள். தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு – கிழக்குக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவது மட்டுமன்றி எமது மீனவர்களின் படகுகளைச் சட்டப்புறம்பாகப் படையினர் உதவியுடன் கைப்பற்றுகின்றார்கள்; வாடிகளை (மீன் உலத்தும் இடங்களை) அமைக்கின்றார்கள். சட்டப்புறம்பான மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள்.
 கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந்நடவடிக்கைகளால் எமது வடக்கு – கிழக்குப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் இன்னும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. இவற்றை யாரிடம் சொல்வது? சொன்னாலும் தீர்வுகள் கிடைக்குமா?
  இவற்றை உலகறியச் செய்யத்தான் இந்தப் பேரணி. வடக்கு கிழக்கில் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் போதைப் பொருள் பழக்கம் இல்லாமல் இருந்தது. இதனை மத்திய அரசு உயர் அலுவலர்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறாயிரம் (ஒன்றரை இலட்சம்) படையினர் பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கில் குடியமர்ந்து இருக்கும் நிலையில், பெரும்பான்மையான காவலர்களை எமது காவல் நிலையங்களில் பதவியில் நிறுத்தியுள்ள நிலையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான அயிரைக்கல்(கிலோ) கஞ்சா வட பகுதியை வந்தடைகின்றது. மேலும், போதைப் பொருட்களும் வந்தடைகின்றன; மிகுதியான சாராயம் விற்பனையாகின்றது. இஃது எப்படி? சட்டமும் ஒழுங்கும் எங்களின் கையில் இல்லை. அப்படியானால் இவை எவ்வாறு நடக்கின்றன அல்லது இவை ஏன் நடக்கின்றன? இவை எமது இளம் தலைமுறையினரைத் திட்டமிட்டு அழிக்கும் செயல்பாட்டின் ஒரு பகுதியா என்கிற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? இதனை எமது பெரும்பான்மை உடன்பிறப்புக்களிடமும் உலக நாட்டு மக்களிடமும் கேட்கவே இந்தப் பேரணி. தனியாகச் சொன்னால் எவரும் கேட்க மறுக்கின்றார்கள். ஆகவே, நாங்கள் நடை பயின்று வந்து பலராகக் கேட்கின்றோம். எமது மனக் கசப்பை வெளிப்படுத்துகின்றோம். மக்கள் சார்பாளர்களும் மக்களும் சேர்ந்து கேட்கின்றோம்.
  அடுத்து, அரசியல் யாப்புக்கு வருவோம். தொடர்ந்து தமிழ் மக்கள் அரசியல் சார்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆட்சியுரிமைகளை உள்ளூராருக்கு வழங்கப் போகின்றார்கள் என்று தெரிந்ததும் 1919ஆம் ஆண்டில் இருந்தே அதைத் தம் கையில் வைத்திருக்கப் பெரும்பான்மையின மக்கள் தலைவர்கள் கங்கணம் கட்டி விட்டார்கள். ஆட்சியுரிமை முழுமையாக பெரும்பான்மையின மக்களிடம் சென்று விட்டது. எமது மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபொழுது ‘இவ்வளவு தருகின்றோம்’, ‘இன்னும் கொஞ்சம் தருகின்றோம்’, ‘சரி! இவ்வளவுதான். இதற்கு மேல் எதுவும் கேட்கக்கூடாது’ எனவெல்லாம் பேரம் பேசி வருகின்றார்கள்.
  இவ்வளவுக்கும், தமிழ் பேசும் மக்கள் காலம் காலமாக 2000 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையின மக்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இங்கே சிங்கள மக்கள் ஒருபொழுதும் வாழவில்லை. சிங்கள மொழி நடைமுறைக்கு வந்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில்.
  தமிழ் மக்கள் பௌத்தர்களாகச் சில நூறு ஆண்டுக் காலம் மாறியிருந்தமையே பௌத்த சமய எச்சங்கள் வடக்குக் கிழக்கில் காணப்படுவதற்குக் காரணம். அப்படியிருந்தும் எம்மை ‘வந்தேறு குடிகள்’ என்றும், வடக்கு – கிழக்கில் சிங்கள மக்கள் முன்னர் வாழ்ந்தார்கள் என்றும், அவர்கள் விரட்டப்பட்டு விட்டார்கள் என்றும் புதிய வரலாற்றை வேண்டுமென்றே எழுதத் தொடங்கி விட்டனர். தாம் எழுதிய புதிய வரலாற்றின் அடிப்படையிலேயே ‘இவ்வளவு தருகின்றோம்’, ‘இன்னும் கொஞ்சம் தருகின்றோம்’ எனப் பேரம் பேசத் துணிந்துள்ளார்கள்.
  இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம். அவர்களுக்குத் தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம். இந்த நாடு அமைதியுடனும் நல்லுறவுடனும் அரசியல், குமுக(சமூக), பொருளாதார விடிவை நோக்கிப் பயணிக்க விரும்பினால் நிகர்முறை(சமசுட்டி) அரசியல் முறையொன்றே அதற்குத் தீர்வாக அமையலாம்.
  இதில் கட்சிகளும் மக்களும் உறுதியாக இருக்கின்றனர். ஒற்றையாட்சியானது ஆட்சி உரிமைகளைத் தொடர்ந்து பெரும்பான்மையின மக்களின் கைகளிலேயே தேக்கி வைக்கச் செய்யும். தமிழ் பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் நல்லுறவாக, இணையான தரத்துடன் இனியாவது வாழ்வதானால் வடக்கு – கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களின் உரிமையை மதித்துத் தன்னாட்சி வழங்குவதே ஒரே வழி! அதனால்தான் நாங்கள் நிகர்முறை ஆட்சி முறையை வலியுறுத்தி வருகின்றோம். அதற்கேற்றவாறு அரசியல் யாப்புப் பற்றிய நகர்வுகள் நடப்பதாகத் தெரியவில்லை.
  ஏனோ தானோ என்று மூடி மெழுகி அரசியல் தீர்வு ஒன்றைத் தரலாம் எனத் தெற்கு நினைப்பதாக எமக்குத் தோன்றுகின்றது. எமக்குத் தர வேண்டிய உரித்துகள் எமது குழுமம் சார்ந்த உரித்துகளே அன்றித் தனிப்பட்டவர்களுக்கு அளிக்கும் உரித்துக்கள் அல்ல.
 வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் என்று நாம் கேட்பதை ஏதோ கேட்கக் கூடாததை நாம் கேட்பதாகத் தெற்கில் நோக்கப்பட்டு வருகின்றது. தமிழ் பேசும் மக்கள் பலரால் கூட அவ்வாறே நோக்கப்படுகின்றது.
(தொடரும்)
  • நீதியரசர் க.வி.விக்கினேசுவரன்,
    முதலமைச்சர்,
    வட மாகாணம்.

  • ‘எழுக தமிழ்’ நிகழ்வில் ஆற்றிய உரை
  • தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்