தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும்
10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி
தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல்.
தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத்
தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க
வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும்
வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி
27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி
தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது.
10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும்
திருச்சியில் நடைபெறும் முற்றுகைப் போரட்டத்தைத் தெரிவித்தும்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் முற்றுகைப் போரட்டத்தின் தலைவருமான
தோழர் பெ. மணியரசன் ஆவணி 24, 2047 / 09.09.2016 அன்று தொடர்புடைய நடுவண்
தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களின் அனைத்திந்திய தலைமை அதிகாரிகளுக்கும்
தமிழ்நாட்டு தலைமை அதிகாரிகளுக்கும் பதிவு அஞ்சலில் மடல் அனுப்பியுள்ளார்.
அதன் சுருக்கம் வருமாறு:
இந்தியத் துணைக் கண்டம் பல்வேறு மொழி
இனங்களின் வரலாற்றுத் தாயகமாக உள்ளது. இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு
தான் மொழிவழித் தாயகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநிலங்கள்
மறுசீரமைப்புச் சட்டம் – 1956 இயற்றப்பட்டது. புரட்டாசி 14, 1986 /
30.09.1955 இல் வெளியான மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையில்
பண்பாடு, மொழி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை உறுதி ஆகியவற்றிற்காக மொழி வழி
மாநிலங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று கூறியது. இதன்படி புரட்டாசி 15,
1986 / 01.10.1956இல் தமிழ்நாடு தமிழர் தாயகமாக நிறுவப்பட்டது.
இச்சட்டத்தின்படித், தமிழ்நாட்டில்
உருவாகும் மாநில மற்றும் நடுவண் அரசு மற்றும் தனியார் துறை
வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமைதரவேண்டும். வேலைவாய்ப்பு
அலுவலகங்கள் (காலி இடங்கள் பற்றிய கட்டாய அறிவிக்கை) சட்டம் – 1959
மாநிலங்களில் உள்ள இந்திய அரசின் நிறுவனங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகளை
மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.
ஆனால் மேற்கண்ட சட்டங்களுக்கும் அறிவிக்கைகளுக்கும் முரணாகத் தமிழ்நாட்டில்
உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் அண்மைக் காலமாக
வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே மிக அதிக எண்ணிக்கையில் சேர்க்கிறார்கள்.
எடுத்துக் காட்டாகத் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் கிட்டத்தட்ட
70 விழுக்காட்டினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில்
சேர்க்கிறார்கள். இராணுவத் தொழிற்சாலைகளில் வேலையில் சேர்க்கப்படுவோர் 80
விழுக்காட்டினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
கொதிகலன்(பாய்லர்) தொழிற்சாலையில் ஊழியர் அளவில் 40 விழுக்காட்டினர்
வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அதிகாரிகள் அளவில் 80% வெளி
மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதே போல் நடுவண் அரசின் உற்பத்தி
வரி, வருமான வரி, கடவுச்சீட்டு அலுவலங்களிலும், எரிநெய்(பெட்ரோலிய)
ஆலைகளிலும், துறைமுகங்களிலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே அதிக
எண்ணிகையில் வேலையில் சேர்த்துள்ளார்கள்.
இந்த அநீதிகளைக் களைந்து, மேற்கண்ட நிறுவனங்களில் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும். 10%க்கு மேல் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
ஆவணி 27, 2047 / 12.09.2016 முற்றுகைப்
போரட்டத்திற்கு இனத்தற்காப்பு உணர்வோடு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து
உணர்வாளர்கள் திருச்சிக்கு வருமாறும் வேண்டுகிறோம்.
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
இடம் : தஞ்சை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக