மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.:
பேரறிவாளன் குறிப்பேடு
– தொடரும் வலி! பாகம் – 08
(வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)
‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன்.
ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே
திடீரென ஒரு நாள் அது என் முன்பு எதிர்நிற்கும் என நான் கற்பனையிலும்
கண்டதில்லை. துறக்கம்(சொர்க்கம்), அளறு(நரகம்), முற்பிறவி, மறுபிறவி
ஆகியவற்றில் நான் நம்பிக்கையற்றவன் என்பதை முன்பே அறிவீர்கள்.
மத, இறை நம்பிக்கையற்ற பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் எனது வாழ்வில் அவை குறித்து நினைத்துப் பார்த்ததும் இல்லை.
எந்தக் கருத்தும் சரியானதுதானா என்பது குறித்து அவை குறித்த ஏரண(தருக்க)முறையிலான வாதங்களில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.
மாறாக, உரிய ஆய்வுக் களத்தில் (Testing
Field) மட்டுமே இறுதி செய்யப்படுகிறது என்ற நம்பிக்கை உடையவன். எனக்கான
ஆய்வுக் களமும் வந்தது.
ப.சீ.த. (‘தடா’) சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் எனக்கும் பிற மூவருக்கும் உறுதி செய்துவிட்டது.
உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட பிறகு, உயிர் தப்ப அடுத்த வாய்ப்பு ஏதும் இல்லை.
தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்குக் கருணை மனு அளிப்பதுதான் நான் உயிர்தப்ப உள்ள ஒரே வாய்ப்பு என அப்போது சொல்லப்பட்டது.
‘கருணை மனு’ என்பது குற்றத்தை
ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோருவது என்பதே எனச் சிறை காவலர்களால் அவர்கள்
அறிந்த அளவில், எனக்கு கருத்துக் கூறப்பட்ட நிலையில், குற்றமற்றவனான நான்
அதில் உடன்பாடற்று இருந்தேன்.
அவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் இராசீவு கொலையில் மன்னிப்பெல்லாம் கிடைக்குமா என்பது ஐயமே எனக் கூடுதலான ஒரு தகவலையும் சொல்லி வைத்தார்கள்.
இந்திரா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சதிக்குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை பெற்ற கெகர் சிங்கு (Keher Singh)
கருணை மனு குறித்து தொடுத்த வழக்கில் தனது கருணை மனுவில் குற்றமற்றவன்
என்பதற்கான வாதங்களை முன்வைக்கலாம் எனவும் உச்ச நீதிமன்ற இறுதித்
தீர்ப்புக்கு மாறாகக் குடியரசுத் தலைவர், ஆளுநர் மனுதாரரை குற்றமற்றவன்
எனக் கூறி விடுதலை செய்யலாம்’ எனவும் உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அரசியல்
அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து அறியாத தருணம் அது.
1971- இல் பிறந்த நான் ஓர் இயல்பான இளைஞனுக்கு உள்ள கனவுகளோடுதான் வளர்ந்தேன். மிகச் சிறந்த படிப்பாளி அல்ல.
இருப்பினும், பெற்றோருக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் அளவுக்கு கல்வியில் தாழ்ந்ததுமில்லை.
ஒழுக்கக் குறைவானவன் என ஒரு நாளும் என்னைப் பற்றி எனது பெற்றோரிடம் எவரும் முறையிடும் அளவுக்கு நான் வாழ்ந்ததும் இல்லை.
மிகவும் அன்பான இரண்டு
உடன்பிறந்தாள்களைப் பெற்றதால் பாசத்துக்குப் பஞ்சமில்லை. எனது தாய், தந்தை
என இரு வீட்டாரிலும் நானே மூத்த ஆண் மகன் என்பதால், இரு வீட்டாரின்
அன்புக்கு அளவில்லை.
இங்ஙனம் வளர்க்கப்பட்ட என்னிடம் அன்பைத் தவிர்த்து வேறு எந்தக் குணமும் குடிகொண்டிருக்கவில்லை.
இராசீவு காந்தியை மட்டுமல்ல, என் வாழ்நாள் முழுமைக்கும் எவரையும் காயப்படுத்த நான் எண்ணவில்லை.
அப்படியான நான் 19 அகவையில் கைது
செய்யப்பட்டுப் பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்றாலும்
இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், அனைத்தையும்
பொய்யாக்கி உச்ச நீதிமன்றத்தாலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு வாழ்வின்
இறுதிக்கட்டத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்.
பரந்த உலகம் ஒன்றில் ஒரு பறவையைப்போல்
சுற்றித் திரிந்த நான், 6 அடி அகலமும் 10 அடி நீளமும் கொண்ட அகண்ட
சுவர்களால் சூழப்பட்ட அறை ஒன்றுக்குள் தனிமைப்படுத்தப்பட்டேன்.
உறவுகளின் கூட்டத்தாலும் அவர்களின் அளவற்ற அன்பாலும் சூழப்பட்டிருந்த என் உலகத்தில் தனிமை தவிர்த்து எதுவுமே இல்லாமல் போனது.
தனிமை என்றால் இயல்பான தனிமை அல்ல – 24
மணி நேரமும் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் (எனக்குப்
பாதுகாப்பாய்!) காவலர் முன்புதான், பகலை விஞ்சும் வெளிச்சத்தைப் பீய்ச்சும்
விளக்கொளியில்தான், எந்த மறைப்பும் இன்றி எனது காலைக்கடன்களை
முடித்திடவும் உண்ணவும் உறங்கவுமான தனிமை அது.
எப்போதும் ஒரு வெள்ளைக் கால்சட்டை, கைச்சட்டை. உள்ளாடை அணிய இசைவு கிடையாது. (இலங்கோடு எனக் கோமணத்துணி ஒன்றைத் தருவார்கள்). கால் செருப்பு அணிய முடியாது.
பகல் நேரங்களில் பக்கத்தில் அடைபட்டிருக்கும் எனது வழக்கின் நண்பர்கள் தவிர, எனது துன்பம் பகிர மனிதர் எவரும் இல்லை.
என்னைப்போலவே துன்பத்தில் இருக்கும் அவர்களிடம் எனது துன்பத்தை எப்படிப் பகிர்வது?
வாரம் ஒரு முறை வரும் எனது தாயாரிடமும்
எப்போதாவது வரும் பிற உறவுகளிடமும் காவலர் புடைசூழப் பேசுகிற நேர்காணலில்
எந்தத் துன்பத்தை நான் சொல்வது?
அப்போது நான் சேலம் நடுவண் சிறையில் உள்ள உயர் பாதுகாப்புத் தொகுதியில் அடைக்கப்பட்டுக் கிடந்தேன்.
எல்லாம் முடிந்து போனது – முடிவுக்கு வந்துவிட்டது. என் சாவுக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.
மனத்தளவில் என்னால் எதிர்கொள்ள முடியாத
பெரும் சுமை அது என்பது தெரியும். உள்ளம் மொத்தமும் வேதனையும், உறக்கம்
தொலைத்த இரவுகளுமாகக் கழிந்த நாட்கள் அவை.
குற்றமேதும் செய்யாத எனக்குக் கொலைத் தண்டனையா?
போன பிறவியில் செய்துவிட்ட தவறுக்கான தண்டனை என்றோ இந்தப் பிறவியிலேயே
செய்துவிட்ட வேறு ஏதேனும் குற்றத்துக்கான தண்டனை இது என்றோ என் பகுத்தறிவு
மனம் ஏற்கத் தயாராக இல்லை.
விதி என்று சொல்லியும் என்னால் விட்டு ஒதுங்க முடியவில்லை. அது சொல்ல முடியாதத் தவிப்பு, சொல்லில் அடங்காப் பெருந்துன்பம்.
அப்போதுதான் முதன்முறையாகப் புரியத்
தொடங்கியது – அவ்வளவு எளிதில் மீளவே முடியாத பெரும் சூழ்ச்சியில் சிக்க
வைக்கப்பட்டு விட்டேன் என்பது.
அரசியல் சூழ்ச்சியில்
பலியாகிப்போன எத்தனையோ அப்பாவி மனிதர்களில் நானும் ஒருவனாகிச் சாகப்
போகிறேன் என்பதை நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது.
இதனை எதிர்க்க எனக்கு வழியுமில்லை – வலிவுமில்லை. மரணத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் என்னிடம் இல்லை.
சாவைச் சந்திப்பதற்கு முன்பாக ஓர் எளிய
மனிதனாக எனக்கு நானே கட்டிவைத்திருந்த எனது எதிர்காலக் கனவுக் கோட்டையைச்
சிதைக்க வேண்டும்.
அதுவே, எனக்குச் சாவை எதிர்கொள்வதைக் காட்டிலும் அறைகூவலாக இருந்தது. எனது
மரணம் பரிதாபத்துக்குரியதுதான். இருப்பினும், எந்த நிலையிலும் அழுதுவிடக்
கூடாது – கண்ணீர் சிந்திவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தேன்.
அந்தச் சிறையின் சிறை அலுவலர் அறைக்குப்
பின்புறம்தான் தூக்குமேடை அமைந்திருந்தது. அந்த அறையின் சன்னல் வழியே அதைப்
பார்க்க முடியும்.
என்னைப் பலியிடப்போகும் அந்த பலிபீடத்தைப் பழக்கப்படுத்திக்கொள்வது இறுதி நிமிடங்களில் பதற்றத்தைத் தவிர்க்கும் எனக் கருதி அதைப் பார்த்துவைத்தேன்.
அந்தச் சிறையில் இறுதியாகத் தூக்கிலிடப்பட்டவரின் இறுதி நிமிடங்கள் எப்படிக் கழிந்தன எனக் காவலர்களிடம் கேட்டறிந்தேன்.
28 அகவையில் வாழ்க்கையைப்பற்றிய புரிதலே
எனக்கு முழுமையடையாதபோது, மரணத்தை எங்ஙனம் புரிந்துகொள்வது? அந்தத்
துணிவைத் தருவதற்கு எனக்கு ஒரு துணை தேவைப்பட்டது.
ஆத்திகர்களுக்கு உள்ள விதி,
தலையெழுத்து, பிறவிப் பயன் என்ற பெயர்களில் தேடுதலுக்கும் வழியில்லை,
ஆண்டவனிடம் அழுது முறையிட்டு ஆறுதல்படவும் வாய்ப்பில்லை.
இந்த 25 ஆண்டுக்கால என் நீதிக்கான
போராட்டத்தில் இதுவரை எத்தனையோ இந்து, கிறித்தவர், இசுலாமியர் எனப்
பாகுபாடு இல்லாமல் உண்மையான பாசத்தோடும் மனிதத்தோடும் தங்களது அன்பை,
ஆதரவைச் செலுத்தி வருகின்றனர்.
அவர்களின் அன்பு இல்லையென்றால், இன்று நான் இல்லை. அவர்களின் மனிதம் போற்றத்தக்கது.
நீதிக்கான அவர்களது குரலே என் வலிமை. இருப்பினும், என்னை முழுமையான நாத்திகனாக உணர்ந்த அந்தத் தருணத்தைப் பதிவுசெய்வது எனது கடமை.
எனக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி மரணத்தை எதிர்கொள்ளும் துணிவைத் தந்தவர் வள்ளுவர். ‘இடுக்கண் அழியாமை’
அதிகாரத்தின் ஒவ்வொரு குறளையும் “உறங்குவது போலும் சாக்காடு’’ என்ற
தொடரையும் எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது.
அவைதான் எனக்கு வாழ்வு, மரணம்
ஆகியவற்றின் ஆழ அகலத்தை அறிமுகம் செய்தது. வள்ளுவம் தந்த தெளிவுதான்,
குற்றமற்ற எவரையும் கொல்லத் தயாராக இருக்கும் இந்த நீதி அமைப்பு முறை
குறித்த புரிதலைத் தந்தது.
மரணத் தண்டனை என்ற போலியானதும், ஏற்றத்தாழ்வு மிக்கதுமான தண்டனை வடிவம் குறித்து ஆராயும் உணர்வை உண்டாக்கியது.
எல்லாம் சரி, மரணத்தை எதிர்கொள்ளும் மன உறுதியை வள்ளுவம் தந்து விட்டது.
எட்டு ஆண்டு உழைப்பும் வீணாகி எனக்காகவே தன் வாழ்வை ஒப்படைத்துவிட்ட என் தாயாரின் முகத்தைப் பார்க்கும் துணிவை மட்டும் எனக்கு எந்த நூலும் வழங்கவில்லை.
அந்த உணர்வை வேறு ஒரு சமயம் எழுதுவேன்.
மற்றபடி வைகாசி 26, 2030 / 09.06.1999
அன்று அதிகாலை தூக்கிலிடப்படுவதாக நாள் குறிக்கப்பட்ட செய்தியை எனக்கு
முறைப்படி அறிவித்த – எத்தனையோ படிப்பினைகளைக் கொடுத்துச் சென்ற மறக்க
முடியாத அந்த நாள் வைகாசி 03, 2030 / 17.5.1999.
(வலிகள் தொடரும்)
–பேரறிவாளன்
இளைய விகடன் 20.07.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக