புதன், 16 டிசம்பர், 2015

வினா தொடுத்த மாணாக்கர் தாக்கு - வைகோ கண்டனம்

வினா  தொடுத்த மாணாக்கர் தாக்கு 
- வைகோ கண்டனம் 

  சென்னைப் பல்கலைக் கழகத்தில்,  நேற்று (திசம்பர் 15 ஆம்  நாளன்று) தேசியப் பேராபத்து-பேரிடர் மையம் சார்பில், ‘சென்னை வெள்ளம் - பேரிடர் மேலாண்மைஎன்ற பொருளில் கருத்தரங்கம் நடந்தது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.

  பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.தாண்டவன், "எம்ஞ்சியார், போன்ற பல முன்னாள் தலைவர்களின் ஆட்சிக் காலங்களில், மழை, வெள்ளம் ஏற்பட்டால், அரசுதான் அனைத்துப் பணிகளையும் செய்யும். ஆனால்,  அண்மைய வெள்ளத்தின் போது, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் என, ஆளாளுக்கு  துயர்துடைப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்; இதனால், குழப்பம்தான் ஏற்பட்டது."  என்று பேசினார்.

  தேசியப் பேரிடர் மீட்பு மையக் கட்டளையர்  இரேகா(நம்பியார்), “பெரும்பாலான மக்கள், வீடுகளைவிட்டு வரத் தயங்கினர். உணவுப்பொருட்ளை வாங்கிச் சேமித்து வைத்தனர். மறுநாள் சென்றபோது, உணவை வாங்க மறுத்துத் தேவையானவர்களுக்குத் தரும்படிக் கூறினர். இதுபோன்ற பல மனிதாபிமான நிகழ்வுகளை, மீட்புப் பணியின் போது பார்க்க முடிந்தது." என்றார்.

  மாநிலத் தேர்தல் ஆணையர்  சோதி நிர்மலா சாமி பேசுகையில், அரசின்  துயர்துடைப்பு உதவிகளைப் பட்டியலிட்டார். அப்போது,  பன்னாட்டு அரசியல் துறையில்  முதுகலை பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்  சோன் ஆண்டன் புலேந்திர இராசா எழுந்து, வெள்ளப் பாதிப்பிற்குப் பிறகு அரசு என்ன செய்தது என வெள்ளத்துயரீட்டுப் பணிகள் பற்றியே கூறுகிறீர்கள்? வெள்ளப் பாதிப்பிற்கான காரணம் குறித்துக் கூறுங்கள்என்று கேட்டுள்ளார்.

 
  உடனே, அங்கிருந்த தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டாளர் திருமகன், பேராசிரியர் மதுரை வீரன், இணைப் பேராசிரியர் வெங்கடேசன், பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர், மாணவர் புலேந்திர இராசாவை, அரங்கத்திற்கு வெளியே இழுத்து வந்து மிருகத்தனமாகத் தாக்கி உள்ளனர். துணை வேந்தர் தாண்டவன், பதிவாளர்  தாவீது(டேவிட்டு) சவகர் ஆகியோர்  கண் முன்னரே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

  சென்னை பல்கலைக் கழக கருத்தரங்கத்தில் வெள்ளப் பாதிப்புகளுக்கான காரணம்பற்றிக் கூறுங்கள் என்று வலியுறுத்திய மாணவர் தாக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாக்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டுவிட்டுப் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  “ஈழத்தமிழ் மாணவர்  சோன்சு ஆண்டன் புலேந்திர இராசா, பிரான்சு நாட்டின் குடிஉரிமை பெற்றவர்.  சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். தாக்குதலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பதிவாளர்   தாவீது(டேவிட்டு) சவகரிடம், ‘வெளிநாட்டில் இருந்து உங்களை நம்பி இங்கு படிக்க வந்த எங்களைத் தாக்குகிறார்களே?’ என்று மாணவர் புலேந்திர இராசா முறையிட்டுள்ளார். அதற்கு அவர், “இங்கே பரவாயில்லை. உங்கள் நாட்டில் இதைவிட மோசமாக இருக்கும். உனக்குத் தேவைதான் பட்டுக்கொள்என்று திமிராகப் பதில் கூறியுள்ளார்.

 மாணவத் தோழர் தாக்கப்பட்டதற்குப் பதிவாளரிடம் நியாயம் கேட்கப் போன தான்சானியா நாட்டு மாணவர் பாப்பு மற்றும் மாணவர்கள் சிலரையும் ஒரு கும்பல் சராமரியாக அடித்து உதைத்து இருக்கின்றது.
 
  “வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி கேட்பதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல்,  செயலலிதா அரசுக்கு  முதலாளிப் பற்றை-எசமான விசுவாசத்தை-க் காட்டுவதற்காகவே மாணவர் புலேந்திர இராசா அடித்து உதைக்கப்பட்டுள்ளார், இது கடும் கண்டனத்துக்கு உரியது.

  செயலலிதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள், ஊடகங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று அடக்குமுறையை ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விடும் போக்கு தொடர்ந்து வருகிறது.

 இதுபோன்ற நடவடிக்கைகளால்  செயலலிதா அரசாங்கத்தின் அலங்கோலங்களையும் நிருவாகச் சீர்கேட்டையும் மூடி மறைத்து விட முடியாது.

  சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்  சோன்சு ஆண்டன் புலேந்திர  இராசா மீது  தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதுடன், கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக