(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 தொடர்ச்சி)
தலைப்பு-பெரியார்தமிழினத்தின் பகைவரா-வாலாசாவல்லவன் : thalaippu_periyaar_thamizhinathin_pakaivaraa_vaalaasavallavan

2/3

ஆந்திராச் சிக்கல் குறித்து திராவிடர் கழக நடுவண் மேலாண்மைக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்:
(அ) ஆந்திர நாடு பிரிவினையில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிப்பதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்குழு தெரிவித்துக் கொள்ளுகிறது.
  அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது ஆளுநர் முதலியவை சென்னையிலிருக்க வேண்டுமென்று கேட்பதையும், சென்னையைத் தற்காலிகத் தலைநகரமாக இருக்க இடம் தர வேண்டுமென்பதையும், இக்கூட்டம் கண்டிப்பதுடன், அப்படிப்பட்ட உரிமைக்கோ சலுகை முதலியவற்றிற்கோ மத்திய அரசார்(சர்க்கார்) இடம் கொடுக்குமானால் தமிழர்களின் அதிருப்திக்கும், கிளர்ச்சிக்கும் ஆளாகவேண்டி நேரிடுமென்று மத்திய அரசாருக்கு எச்சரிக்கை செய்கின்றது.
  இதே சமயத்தில், திராவிடர் கழகம் இராச்சியப் பிரிவினையைப் பற்றிய தனது கருத்தைக் தெரிவித்துக் கொள்ளுகின்றது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி நாடுகள் சேர்ந்த சென்னை மாகாணம் மத்திய (இந்திய யூனியன்) ஆட்சியின் எவ்விதத் தொடர்புமில்லாத தனி விடுதலை யரசாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதே அதன் முடிந்த கருத்தாகும். இந்த நிலையில் சென்னை அரசிலிருந்து எந்த மொழி நாடு பிரிந்து போனாலும் மீதியுள்ள மொழி நாடு அல்லது நாடுகள் முழுத் தன்னுரிமையுள்ள தனி அரசு நாடாக ஆக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு இருக்கிறதுடன் இந்தக் கொள்கைக்குக் கட்டுப்பட்டுப் பிரிவினைக் கிளர்ச்சி செய்யும் எந்த மொழி நாட்டாருடனுடம் யாருடனும் திராவிடர் கழகம் கூடுமான அளவு ஒத்துழைக்க முன்வரும் என்று தெரிவித்துக் கொள்கின்றது.
ஆ) எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய அரசாங்கத்தார் சென்னை நகரத்தையும் அதைச் சேர்ந்த எந்தப் பாகத்தையும் சேர்த்து ஆணையர் மாகாணமாக (Part C State) ஆக்கக் கூடாதென்றும் இக்குழு வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்ளுகிறது.
இ) பிரித்தானிய ஆட்சி இருந்த காலத்தில் அவர்கள் நிருவாக வசதிக்கு ஆக அமைத்துக் கொள்ளப்பட்ட மாவட்ட எல்லையில் தமிழ் பெரும்பான்மையாகப் பேசப்படும் பகுதியையும், தெலுங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் பகுதியையும் ஒன்றாக ஒரே மாவட்டமாக அமைத்திருந்தனர். சித்தூர் மாவட்டத்தில் திருத்தணி முதலிய, பெரும்பாலாகத் தமிழ் பேசும் மக்களடங்கிய பகுதிகள் இருப்பதனால் இப்போது மொழியை அடிப்படையாகக் கொண்ட நாடே பிரிக்கப்படுவதனால் ஒரு மொழி பேசும் நாட்டுடன் வேறு மொழி பேசும் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பகுதி சேர்க்கப்படுவதென்பது மொழிவாரிப் பிரிவினைத் தத்துவத்திற்கே எதிர்ப்பானது என்பதோடு வேறு மொழி பேசும் மக்களுக்கும் இடையூறானது. ஆதலால் இந்த மொழிவாரி நாடு பிரிவினையில் சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி அதிகமாகப் பேசும் பகுதியைக் கண்டிப்பாகத் தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று இக்குழு தீர்மானிக்கிறது. (விடுதலை 12-1-1953).
  1-2-1953ஆம் நாள் தமிழ் இசுலாமியர் சார்பில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற ‘சென்னை தமிழருக்கே’ என்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நூறாயிரக்கணக்கான (இலட்சக்கணக்கான) மக்கள் இடையில் பேசிய பெரியார் “எங்களுடைய கொள்கைப்படி நாங்கள் பிரிவினை கேட்பது எல்லாம் இந்த மாதிரியான பிரிவினை அன்று. நாடு பிரிய வேண்டும். எப்படிப்பட்ட பிரிவினை என்றால், பருமா பிரிந்தது போல… அயலவர் சுரண்டலற்ற தனி நாடு வேண்டும் என்பதுதான். ஆனால் பிரிய வேண்டுமென்பவர்களை மகிழ்ச்சியாகப் பிரித்து அனுப்பி விடுவோம். தன்னலக்காரர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட வெளியே அனுப்பிவிடுவது நல்லது.
  மற்றபடி இரண்டு, மூன்று சிக்கல்கள் சொல்லப்படுகின்றன; அதாவது ஆந்திரா அரசு உயர்நீதிமன்றம், அரசு செயலகம், தலைநகர் முதலியவை எல்லாம் சென்னையில் கொஞ்ச நாளைக்காவது இருக்க வேண்டும் என்கிறார்கள். எப்போது போகிறோம் என்று போகிறார்களோ, அவர்களுக்கு இங்கு என்ன வேலை? ஒரு வீட்டில் பாகப்பிரிவினை எல்லாம் செய்யப்பட்ட பிறகு சமையல் மட்டும் கொஞ்ச நாளைக்கு இங்கே செய்து கொள்கிறேன் என்பது என்ன நியாயம்?
  அடுத்தபடியாக ஆணையர் மாகாணமாகச் (Part C State) சென்னையை ஆக்க வேண்டும் என்று ஆந்திரர்கள் சொல்வதைப்பற்றிக் கூற வேண்டுமானால் மடத்தை விட்டுப் போகின்ற ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றி என்ன கவலை? மற்றும் நட்ட ஈடு கேட்பது என்பதும் அப்படித்தான், நியாயமில்லாத கோரிக்கையாகும்” என்று ஆந்திரர்களைக் கண்டித்துப் பேசினார். (விடுதலை 3-2-1953).
  சென்னை நகர மாநகர்தலைவர்(mayor) செங்கல்வராயன் முதலமைச்சர் இராசாசியைக் கலந்து பேசி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். முதலமைச்சர் இராசாசி அக்கூட்டத்திற்குப் பெரியாரையும் அழைக்கும்படி கூறினார். பெரியாருக்கு மட்டும்தான் நேரு அஞ்சுவார் என்பது இராசாசிக்கு நன்கு தெரியும். அக்கூட்டத்திற்குப் பெரியாரை அழைக்க மாநகர் முதல்வர் செங்கல்வராயனும் ம.பொ.சி-யும் வந்தனர். பெரியார் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரு நூறாயிரம்  மக்களிடையே எழுச்சியுரை ஆற்றினார். ஆந்திரர்களின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட ஒருநாள் கடையடைப்பும் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அக்கூட்டத்தில் எம்.பக்தவச்சலம், எசு.என்.கரையாளர், பி.டி.இராசன், மீனாம்பாள் சிவராசு, ம.பொ.சி முதலான பலர் பேசினர். மாநகர் தலைவர் நன்றி கூறினார். (விடுதலை 17-2-1953). வாஞ்சு அறிக்கை வெளிவருவதற்கு முன்பிருந்தே அதன் செய்திகள் கசியத் தொடங்கிய காலம் முதலே விடுதலையில் அதன் ஆசிரியர் குத்தூசி குருசாமி நடுவண் அரசைக் கண்டித்தும், ஆந்திரர்களைக் கண்டித்தும், வாஞ்சு அறிக்கையைக் கண்டித்தும் 7-1-1953 முதல் பல ஆசிரியவுரைகள் எழுதியுள்ளார்.
ம.பொ.சியின் பொய்
  “மாநகர் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் 16-3-1953 அன்று திருவல்லிக்கேணிக் கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ.ரா-வையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு இராசாசி கூறினார்.
  நான் “அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில்தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். ‘இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். அவர் வருவார்’ என்று சொன்னார்”. (ம.பொ.சி ‘எனது போராட்டம்’ பக்கம் 623). இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய்! திராவிடர் கழக நடுவண் செயற்குழு 11-1-1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம். தற்காலிகத் தலைநகராகக் கூட ஆந்திராவிற்குக் கொடுக்கக்கூடாது என்று கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், 1-2-1953இல் சென்னைக் கடற்கரையில் நூறாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சென்னையில் ஆந்திரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று கண்டித்துப் பேசிய பிறகும், 16-3-1953 கூட்டத்திற்கு அழைக்க வந்த ம.பொ.சி. இராசாசியிடம் கூறியதாக ‘எனது போராட்டம்’ என்ற நூலில் எழுதியுள்ளது எவ்வளவு பெரிய வரலாற்று ஏய்ப்பு? உண்மையில் ம.பொ.சி-யின் ஆசான் இராசாசிதான் சென்னை ஆந்திரர்களின் தற்காலிகத் தலைநகராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதோ ம.பொ.சி.யே கூறுகிறார். “மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கும் செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்ததும் மாநகரத்தலைவரையும்(மேயரையும்) என்னையும் இராசாசி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். “ஆந்திர அரசுக்குத் தற்காலிகமாகக் கூடச் சென்னையில் இடம் தரக்கூடாது’ என்ற வாசகத்தை நீக்கிவிடுமாறு மாநகரத்தலைவரையும் (மேயரையும்) என்னையும் இராசாசி கேட்டுக் கொண்டார். மாநகரத்தலைவர் மேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கிவிட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்குச் சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன்”. (ம.பொ.சி ‘எனது போராட்டம்’ பக்கம் 632). சென்னையில் ஆந்திராவுக்குத் தற்காலிகமாகக் கூடத் தலைநகரமாக இருக்க விடக்கூடாது என்று சொன்ன பெரியாரை இரண்டகர் (துரோகி) என்பதும், ஆந்திரத் தலைநகர் தற்காலிகமாகச் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்ன இராசாசியைத் தலைவர் என்பதும் இராசாசியைத் தமிழ்ப் பார்ப்பனர் என்பதும், வேண்டுமென்றே பெரியார் அவரை எதிர்க்கிறார் என்பதும் எவ்வளவு பெரிய வரலாற்று ஏய்ப்புகள் (மோசடிகள்) என்பதை இதன் மூலம் அறியலாம்.
(தொடரும்)
– வாலாசா வல்லவன்
தலைப்பு-பெரியார்முழக்கம் :thalaippu_periyaarmuzhakkam 
08-10-2015 இதழ்
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 3/3