வெள்ளி, 6 நவம்பர், 2015

வைகோ தாயார் மாரியம்மாள் மறைவு




வைகோ தாயார்  மாரியம்மாள் மறைவு


  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (அகவை 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார்.
 வைகோவின் தந்தை வையாபுரி, பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வைகோ,  இரவிச்சந்திரன் என்ற 2  ஆண் மக்களும் 4  பெண்மக்களும் உள்ளனர். வைகோ மாணவர் பருவத்தில் தி.மு.க.வில் ஈடுபட்டதற்கு வைகோவின் தாயாரும் ஒரு காரணமாகும். பின்னர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கியபோதும்  தாயார் மாரியம்மாளிடம்  வாழ்த்து பெற்றே வைகோ கட்சியைத் தொடங்கினார்.

  அரசியல் சமூகப் பணிகளில் இவர் அதிக ஆர்வம் உடையவர். தமிழக முதல்வர்  செயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் ஆகியோர் இவரது வீட்டிற்கு ச்சென்று இவரைச் சந்தித்துப் பேசி உள்ளனர்.

  ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக ஒருமுறையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டபோது ஒரு முறையும் மாரியம்மாள் தன்னந்தனியாக உண்ணா நோன்புப் போராட்டம் நடத்தினார்.  அண்மையில் மதுவிற்கு எதிராக கலிங்கப்பட்டியில் மது ஒழிப்பு போடாட்டத்தை முன்னெடுத்து நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 சில நாட்களுக்கு முன்பு இவருக்கு  முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவரை வைகோவின் தம்பி இரவிச்சந்திரன் அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் இன்று (ஐப்பசி 20, 2046 / நவ.06. 2015) காலை 9.15 மணியளவில்  தாயார் மாரியம்மாள்   பண்டுவத்தால் பயனின்றி இறந்தார். இந்தத் தகவல் சென்னையில் இருந்த வைகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விமானம் மூலம் நெல்லை புறப்பட்டு வந்தார்.
வைகோவின் ர் மறைவிற்குத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கலைஞர் இரங்கல்:
  திமுக தலைவர் கருணாநிதி வைகோ தாயார் மாரியம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். "வைகோ தாயார் மறைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறேன்" எனக் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.

மரு.இராமதாசு இரங்கல்:

  பாமக நிறுவனர்  இராமதாசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள்  இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

 மரபார்ந்த குடும்பத்தின் தலைவியாகத் திகழ்ந்த மாரியம்மாள் தம் மக்களின் பொதுவாழ்க்கைக்குத் துணையாக இருந்தார்.

  கலிங்கப்பட்டிப் பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படுபவராகவும், அனைத்துத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் மரியாதைக்குரியவராகவும் திகழ்ந்தவர். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பான்மையானோர் நெல்லை மாவட்டத்திற்குச் செல்லும் போது அவரைச் சந்தித்து வாழ்த்து பெறுவது இயல்பாகும்.

  தாயார் மாரியம்மாளின் மறைவு நண்பர் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். தாயாரை இழந்து வாடும் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மதிமுகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேல்முருகன் இரங்கல்:

  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அண்ணன் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் நம்மைவிட்டுப் பிரிந்தார் என்ற செய்தி துயரத்தைத் தருகிறது.

  ஈழத் தமிழர்  சிக்கல், மதுவிலக்கு போன்ற தமிழினத்தின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு முன் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் அன்னை மாரியம்மாள்.

  அண்மையில் கூட கலிங்கப்பட்டியில் மதுக்கடையை அகற்றும் கோரிக்கைக்காகத் தாமே தலைமை வகித்துப் போராடி, பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர் அன்னை மாரியம்மாள்.

  அன்னை மாரியம்மாளை இழந்துவாடும் அண்ணன் வைகோ, அவர்தம் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


  மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர்  இராமகிருட்டிணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

 "மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 அவர்களுக்கு  அகவை 95. தள்ளாத  அகவையிலும்கூட, மதுவிலக்குக்கான போராட்டத்தில் களத்தில் நின்றார்.

 அவரை இழந்து வாடும் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவரிடமும் ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சீமான் இரங்கல்:
'போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி.'

 "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்கள் காலமான செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைகிறோம்.

 அருமைத்தாயார் மாரியம்மாள் அவர்கள், இறுதிவரை போராட்ட உணர்வு நீங்காத பெருமாட்டியாக வாழ்ந்தவர். சமூகப் போராட்டக்களங்களுக்குப்  பெற்றெடுத்த தன் மகனை தன்னைப்போலவே உறுதியான நெஞ்சுரம் கொண்டவராக வளர்த்தெடுத்துப் போராட்டக் களத்திற்கு அனுப்பி வைத்த வீரத்தாயாக அருமைத் தாயார் மாரியம்மாள் விளங்குகிறார். தேசியத்தலைவர். மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் சிங்களப் பேரினவாதிகளால் கொல்லப்பட்ட  ஒளிப்படங்கள் வெளியான போது, அம்மையார் மாரியம்மாள் அவர்களும் அக்கொடுமையைத் தாங்க முடியாமல் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டார். சில மாதங்களுக்கு முன் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தின் உயிர் ஈகம் செய்த காந்தியவாதி சசிப்பெருமாள் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாட்டில்  அரசு சாராயக் (தாசுமாக்கு) கடைகளுக்கு எதிராக எழுந்த போராட்டக்களத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்டு தள்ளாத  அகவையிலும் தளராத தனது போராட்ட உணர்வில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய பெருமை அருமைத்தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு உண்டு. உறுதியான நெஞ்சுரம் உடைய பெருமாட்டியார் மாரியம்மாள் அவர்களின் இழப்பில் வாடி இருக்கும் அண்ணன் வைகோ, அவரது குடும்பத்தார்களின் பெருந்துயரத்தில் பங்கேற்கிறேன்.

 மேலும் வற்றாப் பெருமைகளோடு வாழ்ந்து முடிந்திருக்கும் மதிப்பிற்குரிய அருமைத் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் புகழ்வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

 தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழகம் - புதுச்சேரி இலக்கிய அமைப்புகளின்  கூட்டமைப்பு, அகரமுதல மின்னிதழ் முதலானவையும் ஆழ்ந்த வருத்தத்தையும் துயரத்தையும் தெரிவித்து தமிழ்நலப் போராளி வைகோவின் குடும்பத்தாரின்  துயரத்தில் பங்கேற்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக