முதலக்கம்பட்டி ஊராட்சியில்
அரசால் வழங்கப்பட்ட
2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை
தேவதானப்பட்டி அருகே உள்ள
முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு
வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள்
முறையிடுகின்றனர்
முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில்
பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு
வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக
வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம்
போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி உள்ளது. இந்நிலையில் 2
காணி(ஏக்கர்) நிலத்தையொட்டி அமைந்த தொழிற்சாலைகள்,
அகழ்களங்கள்(கல்குவாரிகள்) வைத்திருப்பவர்கள், தொழிலதிபர்கள்
இடைத்தரகர்கள் உதவியுடன் 2 காணி(ஏக்கர்) நிலத்தைக் கவர்ந்து வேலி அடைத்து
அதன்பின்னர் பயனாளிகளை அழைத்து மிரட்டி இடத்தை எழுதி வாங்கிக்கொள்கின்றனர்.
இதில் சில பயனாளிகள் தங்கள் இடத்தை
அளந்து தரவேண்டும் எனப் பெரியகுளம் நிலஅளவை வட்டாட்சியரிடம் முறையிட்டுப்
பல ஆண்டுகள் ஆகியும் அளந்து கொடுக்க முன்வராததால் 2 காணி(ஏக்கர்) நிலம்
வாங்கிய பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்குள்ளது எனத்
தெரியாமல் அலைகின்றனர். இதனைப் பயன்படுத்திப் போலி ஆவணம் உருவாக்கி 2
காணி(ஏக்கர்) நிலம் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே மாவட்ட நிருவாகம் 2 காணி(ஏக்கர்)
நிலத்தை முறையாக ஆய்வு செய்து விற்பனை செய்பவர்கள் மீதும் 2 காணி(ஏக்கர்)
நிலத்தை வன்கவர்ந்து செய்து வைத்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கவேண்டும் என அப்பகுதிப் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக