புதன், 4 நவம்பர், 2015

கவிக்கோ பவளவிழா

     01 நவம்பர் 2015      கருத்திற்காக..

கவிக்கோபவளவிழா05: nighazvu_kaviko-pavalavizhaa05

கவிக்கோ பவளவிழா ​

​ கவிக்கோ அப்துல் இரகுமான் என்ற மாபெரும் கவிஞரின் பவளவிழா சென்னையில் சென்ற ஐப்பசி 10 & 11 / அக்.26 & 27 ஆம் நாள்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மிகச்சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
  அரசியல், இலக்கியம், திரைப்படம், கலை, இசை, சமயம், இயல், இதழியல் & ஊடகம் என அனைத்துத் துறைகளையும் சார்ந்த தலைவர்கள், புகழாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அறிஞர்கள், சமயத் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசை இயக்குநர்கள், திரைத்துறைப் படைப்பாளிகள், கலைஞர், துணைவேந்தர்கள், நீதியரசர்கள், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், இலங்கை முதல் அமெரிக்கவரை சிறப்பு வாய்ந்தவர்கள் , மசுகட்டிலிருந்து நான், என அனைவரும் ஓரு குடையின்கீழ் வந்து பங்கேற்றுச் சிறப்பித்த நிகழ்வு என அனைவரும் பாராட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.
  மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், புகழ்வாணர்கள், அனைத்து மதங்களின் முதன்மையாளர்கள் ஆகியோரை ஒரேமடையில் அடுத்தடுத்து அமரவைக்க முடியும் என்கிற கற்பனைக்கெட்டாத அருந்திறலை நமது ‘தமிழ்’ அதாவது கவிக்கோ எனும் ‘கவிதைத் தமிழ்’ ஆற்றிியிருக்கிறது.
  கலைஞர், வீரமணி, வைகோ, தமிழிசை, காதர்முகைதீன், திருமாவளவன், பீட்டர் அல்போன்சு, நல்லகண்ணு, பழ.கருப்பையா, டி.கே.இரங்கராசன் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், புகழ்வாணர்களும் வந்து கலந்து சிறப்பித்த காட்சி உண்மையில் அற்புதம் தான்.
  அதேபோல் சுகி.சிவம், பாலமுருகனடிமை சுவாமிகள், கசுபர், தேங்கை சர்புதீன் என மும்மதத்தைச் சார்ந்த மதப்பெரியவர்களும் மேடையை அணிசெய்து கவிக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மற்றொரு அருமையான பதிவு,
  ‘கவிக்கோ கருவூலம்’ நூலை கலைஞர் வெளியிட்டு வாழ்த்திப்பேசி கவிக்கோவின் பெருமைகளையும், எளிய பண்பினையும், அவருடனான தம் நட்பினையும் பாராட்டினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கவிக்கோவின் கவி ஆளுமை – திறன்’ பற்றிய உள்ளார்ந்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
  உலகம் பாராட்டும் அமர்வில் நான் கவிக்கோவின் சிறப்புகள் பற்றிப் பேசி ஒரு கவிதையும் வாசித்தேன். என்னுடன், சிங்கப்பூர், மலேசியா, பங்காக்கு, அமெரிக்கா, இலங்கை, துபாய், சவூதி அரேபியா எனப் பன்னாட்டுத்தலைவர்களும் பேசினர். முன்னதாக மலேசியா, இலங்கை அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
  ஒரு தமிழ்க்கவியால் அனைத்துத் தமிழர்களையும் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைக்க முடியும் என்கிற மாபெரும் ஆற்றல் தமிழுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஒரு நிகழ்வாகும் எனச் சொல்வேன்.
  என்னைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு எனக்குக் கிடைத்த ஒரு ‘விருது’ ஆகும்’. வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் !
இன்னும் பதிவு செய்கிறேன் நிகழ்ச்சி பற்றி!
அன்புடன்
பசீர்

படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!