இந்துத்துவா கமல் :kamal_hinduthuva
கருத்துரிமைக்கு எதிரான இந்துத்துவா வெறிச்செயலுக்கு
வலுசேர்க்கும் கருத்தே, நடிகர் கமலஃகாசனின் கருத்து!

தமிழ்க் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் 
தோழர் நாவைகறை அறிக்கை!

  “நான் தேசிய விருதைத் திருப்பித் தர மாட்டேன்; விருதுகளைத் திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிப்பதாய் அமையும்.விருதுகளைத் திருப்பித் தருவது என்பது ஒரு பயனற்ற செயல். விருதுகளைத் திருப்பித் தருவதால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது” என்று 03.11.2015 அன்று, ஐதராபாத்தில் அளித்த தனது பேட்டியில் நடிகர் கமலஃகாசன் கூறியுள்ளார்.
  இஃது ஒருவகையில் இந்துத்துவா மதவாத பா.ச.க. அரசுக்கு ஆதரவான கருத்தாகும்.
  தாத்திரியில் இசுலாமிய முதியவர் படுகொலை, எழுத்தாளர்கள் கல்பர்கி, பன்சாரே முதலானவர்கள் படுகொலை, கருநாடகத்தில் இளம் எழுத்தாளர் மீது தாக்குதல் என இந்துத்துவாவின் வெறிச்செயல்கள், கருத்துரிமைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்தேறுகிறது. மேற்கண்ட செயல்கள், புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஆகியவற்றை முன்வைத்து எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் தங்களுக்கு இந்திய அரசு வழங்கிய விருதுகளைத் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.
  இந்நிலையில் நடிகர் கமலஃகாசன் மோடி அரசுக்கு ஆதரவு தரும் விதமாகக் கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
  குசராத்தில் 3000 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு “ மகிழுந்தில் போகும் போது பூனைக்குட்டிகள் அடிபட்டால் என்ன செய்வது” என்று நஞ்சு கக்கியவர்தான் மோடி. பா.ச.க. அரசினுடைய மதவாத நடவடிக்கைகள், இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. கருத்துரிமைக்கு எதிராக நடக்கும் வெறிச்செயல்கள் எதற்கும் விடையளிக்காது, இந்தியத் தலைமையமைச்சர் மோடி அமைதி காக்கிறார்.
  தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றுசொன்னபோது, கமலஃகாசன் கடைசி வரை அதை மறுத்து, “மும்பை எக்சுபிரசு” என்று தனது திரைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் காவிரிப் போராட்டம் நடைபெற்ற போது, “காவிரியில் தண்ணீர் வரவேண்டுமே தவிர, இரத்தம் வரவேண்டியதில்லை” என்று கூறி, தமிழர் உரிமைச் சிக்கல் என்பதைக்கடந்து கருநாடகத்திற்கு ஆதரவான கருத்தைத்தான் உரைத்தார்.
  திரைத்துறையினர் பலர் தொடர்ந்து முன் வைக்கும் “தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம்” என்ற பெயர்மாற்றக் கருத்தை குழிதோண்டி புதைக்கும் விதமாக அண்மையில் நடந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்சங்கத் தேர்தலின் போது “இந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்று தனது இந்தியப் பாசத்தை வெளிக்காட்டினார். மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்று தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.
 தன்னை ஒரு முற்போக்காளன், பெரியாரியலர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் கமலஃகாசன் இப்போது இந்துத்துவா மதவாத அரசுக்கு ஆதரவாகப் பேசுகிறார். அவரின் கருத்தென்பது ஆளும் பா.ச.க அரசுக்கு வலுசேர்க்கவே பயன்படும்.
  சமூகப் படைப்பாளிகள் அனைவரும் தொடர்ந்து கருத்துரிமைக்கு எதிராகக் களம் காண வேண்டும். கமலஃகாசன் போன்ற திரைப்படக் கலைஞர்களைத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.
நா. வைகறை
பொதுச் செயலாளர்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
இடம்: தஞ்சாவூர்



அறிக்கை வெளியீடு
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை. 
பேச: 9841604017, 7667077075
முகநூல்: fb.com/tha.ka.e.pe
இணையம்:http://tamizhkalai.blogspot.in