பேரா.சி.இலக்குவனார் -Ilakkuvanar

இலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு

  பேராசிரியர் சி.இலக்குவனார், கொள்கையிலும் மொழிப் பற்றிலும் பிடிவாதமான உறுதி வாய்ந்தவர். அஞ்சா நெஞ்சுடையவர். கடைசிக் காலம் வரை எதிர்ப்பில் போராடியவர். கொள்கைக்காகத் தம் ஆசிரியப் பணியையும் விட்டார். கொள்கைப் பிடிவாதத்தால் குடும்பத்துடன் துன்பப்பட்ட காலங்களும் நிரம்ப உண்டு. எக்கட்சி ஆளுங்கட்சியாய் இருந்தாலும் அரசுக்கு அவ்வப்போது இடித்துரை கூறத்தவறுவதில்லை. இதனால் பலமுறை பணிமாறுதல்களையும் சந்தித்த பெருமையுடையவர். தம் பிழைப்புக்காக ஒரு போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காத பேராண்மை படைத்தவர். சென்னையில் வாழ்ந்த போது, பல தமிழ் இலக்கியம் கூட்டங்களை நடக்கப் பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். வார, மாதக் கூட்டங்களை நடத்திக் தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தார். விருந்தோம்பலில் தனி ஆர்வம் உடையவராய் விளங்கினார். நண்பர்கள் பலரையும் உடனிருந்து உண்பிக்கச் செய்தார். இலக்குவனாரைச் சரியான முறையில் புரிந்து கொண்டு அவரைப் பயன்படுத்தத் தெரியாத அரசின் செயலை இன்றும் நான் நினைத்து வருந்துவதுண்டு. அவருடைய பேச்சு இன்னும் என் நெஞ்சில் நிறைந்து பசுமையாய் விளங்குகிறது.
– திருவாட்டி சிவகாமி சிதம்பரனார்  
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு
– பேராசிரியர் முனைவர் ம. இராமச்சந்திரன்.)