ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் என்னும்
அமைப்பு அறுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லின் செல்வர்
இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஒய்.எம்.சி.ஏ. என்னும்
உலகளாவிய அமைப்பின்.சென்னைக் கிளையின் இலக்கியப்பிரிவாக
உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்தஒய்.எம்.சி.ஏ.
கட்ட்டத்தின் முதல் மாடியில் செவ்வாய் தோறும் இங்கே பல துறைகளில்
அறிவார்ந்த பொழிவுகள் பல்துறை வித்தகர்களால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.
மே திங்களைத் தவிர ஏனைய அனைத்துத்
திங்களிலும் செவ்வாய் தோறும் இக் கூட்டங்கள் கருத்துவிருந்து வழங்கி
வருகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்கள்கூடச் செவ்வாய்க்கிழமை பாரிமுனைப்
[பகுதிக்கு வந்து விட்டால் இங்கே வந்து பயனடைந்து செல்வது வழக்கம்.
நாடறிந்த நாவலர் ஔவை.நடராசன் அவர்கள்
இதன் தலைவராக விளங்குகிறார். கடந்த ஐம்பது ஆண்டுக் காலமாகப் பொறியாளர்
கெ.பக்தவத்சலனார் இதன் செயல்திறம் மிக்க செயலாளராக விளங்கி இதனை ஒரு
பல்கலைக்கழகம்போல இயங்கச் செய்துவருகிறார்.
மறைமலை இலக்குவனார் துணைத்தலைவராகவும்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலராகவும் இம் மன்றப்பணிகளில் செயலருக்கு
உறுதுணை புரிந்து வருகின்றனர்.
செவ்வாய் தோறும் நடந்து
வரும் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றக் கூட்டங்கள் பற்றிய தொகுப்புரையை எழுதி
வழங்கும் பொறுப்பைப் பேராசிரியர் ப.தாமரைக்கண்ணன் ஏற்றுள்ளார்.
செவ்வாய்தோறும் செந்தமிழ் வளர்க்கும்
ஒய்.எம்.சி.எ. பட்டிமன்றக் கூட்டம் மே மாதம் கோடை விடுமுறைக்குப் பின்
மீண்டும் எழுச்சியுடன் வைகாசி 19, 2046 /02.6.2015 செவ்வாய் மாலை 6 மணிக்கு
இனிதே தொடர்ந்து தொடங்கியது.
நந்தனம் கல்லூரியின் தமிழ்ப்
பேராசிரியர் (பணிநிறைவு) செ. ஏழுமலை தலைமையில் மதுராந்தகம் சமற்கிருதக்
கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பெ.கி. பிரபாகரன், ‘தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு‘ என்னும் தலைப்பினில் இசையுரை ஆற்றினார்.
பட்டிமன்ற இணைச் செயலாளர் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி பெருந்திரளாக வந்திருந்த அறிஞர்பெருமக்களை
இன்முகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர்
செ . ஏழுமலை, ”இந்த மே 31 ஓய்வு பெற்ற என்னை, நண்பர் தாமரை தொடர்ந்து
அன்புடன் அழைத்தபோதெல்லாம் என்னால் வர இயலவில்லை. இந்தக் கூட்டத்தின்
தலைப்பைக் கேட்டதும் என்னால் வராமல் இருக்க முடியவில்லை. காரணம் என்
பொழுதுபோக்கே பழைய திரைப்பாடல்களைக் கேட்டு மகிழ்வதுதான். அதனாலும்
பிரபாகரன்தான் என்னுடைய எல்லா விழாவுக்கும் தொகுப்புரைஞராக அமைவார்; அவர்
மேலுள்ள அன்பினாலும் இங்கு வந்தேன். பேரறிஞர் பலர் பேசிய பட்டிமன்றத்திற்கு
வருவதில் பேருவகை அடைகிறேன். தொடர்ந்து வருவேன்” என்றார்.
சிறப்புரையாற்றிய பேராசிரியர்
பெ.கி.பிரபாகரன், தமிழ்த்திரைப்படப் பாடல்களில் பெரும் பங்களிப்பாற்றிய
பாடலாசிரியர்கள் பலரை நினைவுகூர்ந்தார். உடுமலை நாராயணகவி, உவமைக்கவிஞர்
சுரதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி
முதலானோரின் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கினைப்பற்றிப் பல சான்றுகளைக்
காட்டியும் பாடியும் பயன்கொள்ளச் செய்தார். “படியெடுப்பாக எழுதுவது (காப்பியடிப்பது) வேறு; செல்வாக்கினால் எழுதுவது வேறு” என்று பதிய வைத்தார்.
“இலக்கியங்களை எளிமைப்படுத்தித் தொண்டு
செய்த பாடலாசிரியரின் தொண்டுக்குத் தலைவணங்கி நன்றி சொல்வோம்” என்று
இறுதியில் தாமரைக்கண்ணன் நன்றி கூறி, எதிர்வரும் ஒய்.எம்.சி.எ. பட்டிமன்ற
எழுபதாம் ஆண்டு விழாவுக்கான நன்கொடைகளை வேண்டி நிறைவு செய்தார்.
-முனைவர் மறைமலை இலக்குவனார்
முனைவர் ப.தாமரைக்கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக