77velipalayam_p.o.

மூடுவிழாவை நோக்கி வெளிப்பாளையம் அஞ்சல்நிலையம்

  நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் நீதிமன்ற வளாகத்தில் அஞ்சலகம் உள்ளது.
  இப்பகுதியில் உள்ள வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் தங்கள் குறைகளை அரசுக்குத் தெரியப்படுத்தும் விதத்தில், தங்கள் குறைகளை அரசு களையும் என்ற நம்பிக்கையில் பதிவு அஞ்சலில் தங்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு அனுப்பச் செல்கின்ற பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம், “இங்கு பதிவஞ்சல் அனுப்ப முடியாது. தலைமை அஞ்சலகம் அல்லது மற்ற அஞ்சலகங்களுக்குச் சென்று அனுப்புங்கள்” எனக்கூறுவதும், பொதுமக்களை ஒருமையில் பேசுவதும்   அஞ்சலகப் பணியாளர்களின் நடத்தையாக உள்ளது.
  இதன் தொடர்பாக நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நாமும் பதிவஞ்சல் அனுப்பவேண்டும் என்று 5 பதிவஞ்சலைக் கொண்டு சென்றோம். அப்பொழுது அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள், “பதிவஞ்சல் இங்கே அனுப்பமுடியாது. மேலும் எங்களுக்கு வேலைப் பளு அதிகமாக உள்ளது. இவற்றைத்தவிர பதிவஞ்சல் அனுப்பக்கூடிய தாள் இல்லை” எனக்கூறித் திருப்பிவிட முயன்றனர். நாமும், “இந்தியாவில் எங்கே இருந்தாலும் அனுப்பலாம்” எனக்கூறினோம். அதற்கு, “இங்கே அனுப்ப முடியாது” எனக்கூறினார்அலுவலர்; இதே போல நம்அருகே நின்ற ஒருவரை ஒருமையில் பேசி, “அனுப்பமுடியாது. நீ எந்த முகவரியில் வசிக்கின்றாயோ அங்கேயே போய் அனுப்பு” எனக்கூறினார்.
  இதனைப் புகாராக எடுத்து நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகத்தில் புகார்பிரிவில் பணிபுரியும் உயர்அதிகாரி சிவப்பிரகாசிடம்; கொண்டு சென்றோம். அவரும் நம்முடைய தகவலை உள்வாங்கிக்கொண்டு தொடர்புடைய அஞ்சலகத்திற்குப் புகாரை அனுப்பி விளக்கம் கேட்டார். அதற்கு வெளிப்பாளையத்தில் பணிபுரிகின்ற அஞ்சலக ஊழியர்கள், “தாள் இல்லை. அதனால் திருப்பி அனுப்பினோம்” என்று கூறினார்கள். “தாள் இல்லை அல்லது தட்டுப்பாடு உள்ளது எனத் தலைமைக்கு மடல் எழுதி அனுப்பினீர்களா” எனக்கேட்டுப்  பொதுமக்களைத் திருப்பி அனுப்பாமல் பதிவு அஞ்சல்களைப் பதிவுசெய்யுங்கள் என உடனடியாக உத்தரவிட்டார்.
  இதே நிலைமைதான் நாகூர், திட்டச்சேரி, வவ்வாலடி, சன்னாநல்லூர் அஞ்சலகங்களில் உள்ளது.. எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அஞ்சலக ஊழியர்கள் மீது துறையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
77vaigaianeesu