திட்டச்சேரி பகுதியில் தொடரும் ஊர்தி மோதல்கள்!
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியில்
சாலைகள் ஒழுங்காகச் சீரமைக்கப்படாததால் சாலை நேர்ச்சி(விபத்து)கள்
அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்துக்கள்,
இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபடக்கூடிய
புகழ்பெற்ற இடங்கள் உள்ளன. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு முதலான
இறைவழிபாட்டு இடங்களும் தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால், வேதாரண்யம்
முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் உள்ளன. இப்பகுதியைக் காண ஏராளமான
சுற்றுலா ஊர்திகள் வருகை புரிகின்றன. இதன்மூலம் சுற்றுலாவை மையப்படுத்தி
சுற்றுலா சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாலைகள்
மேடு, பள்ளங்களாகவும், அதிகமான வளைவுகள் கூடியதாகவும் உள்ளன. மேலும்
தேவையான இடங்களில் வேகத்தடை, எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்படாததால்
மோதல் நேர்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் இருசக்கர
ஊர்தியில் பயணம் செய்பவர்கள்தான் அதிகமாக இறந்துவிடுகின்றனர். கடந்தவாரம்
காலை 10.00 மணியளவில் நாகப்பட்டினத்தைச்சேர்ந்த சருபுதீன் என்பவர் தன்னுடைய
மனைவியை ப.கொந்தகை என்ற இடத்தில் பார்த்துவிட்டுத் திரும்பும்போது
பனங்குடி என்ற இடத்தில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள
பனை மரத்தில் மோதி உயிர் துறந்தார்.
இதே போலக் கடந்த வாரம் நாகூர் புதிய
பேருந்து நிலையத்தின் அருகில் கணவனும், மனைவியும் அங்கு இருந்த மேடு
பள்ளத்தைக் கவனிக்காமல் கீழே விழுந்து இறந்துள்ளனர். மோதல் நேர்ச்சி
நடைபெறும் இப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகை
வைக்கப்படாததால் அங்கு நாள்தோறும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் பழுதான
சாலைகளைச் சீரமைத்தும், ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகை அமைத்தும் ஏற்படும்
உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்தவேண்டும்; மாவட்ட ஆட்சியரும் இதில் கருத்து
செலத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக