54naattaamaikkal

தேனிமாவட்டத்தில் பாதுகாக்கப்படும்

நாட்டாண்மைக்கல்

  தேனிமாவட்டத்தில் பகுதியில் நாட்டாண்மைக்கல் இன்றும் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  பண்டைய காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஓர் ஊரில் கிணறு, குளம், ஆலமரம், கோயில் போன்ற அடையாளங்கள் இருக்கும். இவ்வாறு ஆலமரம் அல்லது அரசமரத்தின் கீழ் ஒரு கல்வைக்கப்பட்டிருக்கும். அந்தக்கல்லில் அந்த ஊரில் குடும்பத்தகராறு, வாய்க்கால் வரப்புகள் தகராறு, திருமணத்தகராறு, பாகப்பிரிவினை முதலான அனைத்திற்கும் ஊர் நாட்டாண்மையிடம் அப்பகுதி மக்கள் முறையிடுவார்கள். முறையிட்ட பின்பு குறிப்பிட்ட நாள் குறித்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி, அவர்கள் முன்னிலையில் வாதி, பிரதிவாதிகள் தங்கள் குற்றங்களை அடுக்கிவைப்பார்கள். அப்போது நாட்டாண்மை கம்பளியில் உட்கார்ந்து, பித்தளைச்செம்பை எடுத்து வைத்துக்கொண்டு தீர்ப்பு வழங்குவார். இன்றும் திரைப்படங்களில் இதனை காண்பிப்பார்கள். இவ்வாறு நாட்டாண்மை உட்கார்ந்து பஞ்சாயத்து செய்த கல் நாட்டாண்மைக்கல் அல்லது அம்பலக்கல் என்று அழைக்கப்பட்டது.
  மேலும் பண்டைய காலத்தில் நாடுகளை நிருவகிப்பதற்கு அம்பலம் என்ற அதிகார அமைப்பை உருவாக்கியிருந்தனர். தங்கள் குழுவிலேயே ஒருவரை அம்பலமாக நியமித்துக் கொண்டனர். கரை அம்பலம், ஊர் அம்பலம், தெரு அம்பலம், மாகாண அம்பலம், நாட்டுஅம்பலம் எனப் பல நிலைகளில் அம்பலங்களை நியமித்துக் கொண்டனர். அம்பலம் என்பதற்கு ஊரின் பொது அவை எனப் பொருள். ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு செய்தியை அல்லது சிக்கலை அம்பலப்படுத்தித் தீர்வு காண்கின்ற அவை என இது அழைக்கப்படும். இந்த அம்பலப்படுத்துகின்ற பொது அவைக்குத் தலைமை தாங்குபவன் அம்பலம் அல்லது அம்பலக்காரன் எனப்பட்டான். அவனே வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்கினான். அம்பலப்பதவி பெரும்பாலும் மரபுவழி அடிப்படையிலேயே அமைந்தது. . அம்பலக்காரராய் நியமிக்கப்பட்டவர்களின் மரபு வழியினர் அம்பலம் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர். அம்பலம் என்ற அமைப்பின் நினைவாக ஊர்களில் உள்ள பொது அமர்வுக் கல்லிற்கு அம்பலக்கல் என்று பெயரிட்டனர். காலங்கள் மாறிய பின்பு காவல்நிலையம், நீதிமன்றம் என மாறியபிறகு ஊர்நாட்டாண்மை என்ற பதவியும், அம்பலம் என்ற பதவியும் அதிகாரம் இழந்தது. ஆனால் காலச்சுவடாய் இன்றும் நாட்டாண்மைக்கல் சில சிற்றூர்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
54vaikaianesu_name