தேனிப்பகுதியில் நடைபெறும்
வாரச்சந்தையில் எடைமோசடி
நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் வாரச்சந்தையில் எடைமோசடி நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேவதானப்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும்
புதன்கிழமை நடைபெறும். இதனையொட்டி எருமலைநாயக்கன்பட்டி,
பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், புல்லக்காபட்டி, மஞ்சளாறு அணை,
காமக்காபட்டி முதலான பல ஊர்களில் இருந்து தங்களுடைய வாரத்தேவைகளுக்கான
காய்கறிகள், பருப்புவகைகள், கிழங்கு வகைகள், ஒன்பான்கூலங்களை(நவதானியங்களை)
வாங்கிச்செல்வார்கள்.
வாரச்சந்தைக்கு கொடைக்கானல்,
வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பாளையம் முதலான பகுதிகளில்
இருந்து ஏராளமான காய்கறி வணிகர்கள் வருகை புரிகின்றனர். தேவதானப்பட்டியில்
அதிகப்பணப்புழக்கம் உள்ள ஒரே நாள் புதன் கிழமை மட்டுமே.
இந்நிலையில் தேவதானப்பட்டி பகுதியில்
நடைபெறும் வாரச்சந்தைக்கடைகளில் எடைத்தராசுகள், மின்னணுத் தராசு கொண்டு எடை
அளவிட்டு விற்பனை செய்கின்றனர். வாங்கிச்செல்லும் நுகர்வோர்களும் எடை
சரியாக இருக்கும் என்று வீட்டிற்குச் செல்கின்றனர். ஆனால் 1
அயிரைக்கல்(கிலோ) வெங்காயம் வாங்கினால் 700 கல்(கிராம்) வெங்காயமும் 1
அயிரைக்கல்(கிலோ) தக்காளி வாங்கினால் 750 கல் தக்காளியும் உள்ளன. இவ்வாறு
தராசுகளிலும் மின்னணுத் தராசுகளிலும் மோசடிகள் நடைபெறுகின்றன.
இவை தவிர தராசுகளின் கிடைமட்டத்தையும்
தராசு தட்டுகளையும் நெளித்தும் 1 அயிரைக்கல்(கிலோ) எடைக்கல்லை
தனிப்பட்டமுறையில் 900 கல் அளவுள்ள எடையாக மாற்றியும் வைத்திருக்கின்றனர்
சில வணிகர்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர்த் தராசுகளைச்
சரிபார்க்கவும் எடைக்கற்கள் முத்திரையிடப்பட்டனவா எனவும் ஆய்வு மேற்கொள்ள
அதிகாரிகள் வருகை புரிந்துள்ளார்கள். தற்பொழுது நடைமுறையில் அதிகாரிகள்
ஆய்வு மேற்கொள்வதில்லை. இதனால் எடைமோசடி நடைபெறுகிறது.
எனவே பொதுமக்களின் நம்பிக்கையில் மோசடி
செய்யும் வணிகர்கள்மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என
எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக