தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை-பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்யும் அவலம்
தேனிமாவட்டத்தில் கந்துவட்டிக்கொடுமை தலைவிரித்தாடுகிறது.
தேவதானப்பட்டி வேளாண்மை செழித்த
பூமியாகும். மேலும் இதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், கெங்குவார்பட்டி,
செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளும் வேளாண்மை நிறைந்த பூமியாகும்.
இப்பகுதியில் வாழை, நெல், தென்னை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களை
உழவர்கள் பயிரிட்டு வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகப் போதிய
மழையில்லாததால் சோலைவனமாக இருந்த இப்பகுதி பாலைவனமாக மாறியது. இதனால்
உழவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் கடன்கள் வாங்கியும் தங்கள்
நகைகளை அடமானம் வைத்தும் உழவுத்தொழில் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் மழை பொழியத்
தொடங்கியதால் உழவர்கள் நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற பயிர்களைப்
பயிரிட்டு வருகின்றனர். தற்பொழுது அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் கடன் தர பல
நிபந்தனைகள் விதித்து வருவதால் தனியாரை நாடிச்செல்கின்றனர் உழவர்கள்.
வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது, கடன் உறுதிஆவணம், 10உரூபாய்
பத்திரம் போன்றவற்றில் கையெழுத்துவாங்கிவிட்டு நூற்றுக்கு ஐந்து முதல்
பத்துரூபாய் வட்டி வரை பெறுகிறார்கள். இதில் மாதவட்டி, வாரவட்டி,
நாள்வட்டி, ஓட்ட(ரன்)வட்டி எனப் பலவகைப் பெயர்களில் வட்டிகளுக்கு
விடுகின்றனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி
விடுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்புலம், சாதிய அமைப்புகளில் பதவிகளில்
உள்ளவர்களாக உள்ளனர். இதனால் வட்டிக்கு விடுபவர்கள் குறித்த நேரத்தில்
தவணையைக் கட்டாவிட்டால் ஏற்கெனவே வாங்கிவைத்த வெற்றுப்பத்திரம், கடன்
உறுதிஆவணம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டிய தொகையை நிரப்பிக் கொள்கின்றனர்;
இவற்றின் அடிப்படையில் பணம் கொடுத்தவர்களுடைய வீடு, நிலம், ஊர்தி எனக்
கைப்பற்றிக்கொள்கின்றனர்.
இதன் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள்
காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலும் அவர்கள் வழக்கு பதிவு செய்வதில்லை.
மாறாகக் கந்துவட்டிக்கு ஆதரவாகக் காவல்துறையினர் செயல்படுகின்றனர். இதனால்
பலபேர் தங்கள் நிலங்களை இழந்துவிட்டுத் தொழில் நகரங்களுக்கு இடம்
பெயருகின்றனர். ஒரு சிலர் கந்துவட்டிக்கும்பலுக்கு பயந்து இரவோடு இரவாக
வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
தேவதானப்பட்டி காவல்நிலையத்தில்
கந்துவட்டிக்கு எதிராகப் புகார் கொடுத்துப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட
கந்துவட்டித் தொழில் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என
இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக