தமிழ் இன்றும் என்றும்
- இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து
நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய
கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி
மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும்
வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே
இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல,
அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை
எட்டும் காலம் – இன்றைய சூழலில் எதுவும் மாற்றம் இல்லை எனில் –
வெகுதொலைவில்கூட இல்லை என்பதுவே உண்மை. இன்றைய இழிநிலை மாறி என்றும் தமிழ்
உளதாகும் நிலை எய்த என்ன செய்ய வேண்டும்?
ஆட்சி சட்டம் நடைமுறையில் உள்ளது;
தமிழில் கையொப்பம் இடாவிட்டால் தண்டனை; தமிழில் எழுதாவிட்டால் தண்டனை
என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றனவே என்கிறீர்களா? இத்தகைய
அறிவிப்புகள்தாம் அவ்வப்பொழுது செய்திகளாக வரும். ஆனால் தமிழ்ப் பயன்பாடு
என்பது பெயரளவிற்குத்தான் இருக்கும். வேறு என்னதான் செய்ய வேண்டும் எனக்
கேட்கிறீர்களா? உண்மையிலேயே தமிழை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
என எண்ணினால் உயர் அதிகாரிகளுக்கே என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும்.
இனிமேல், தமிழில் இருக்கக் கூடிய ஆணைகள், ஒப்பந்தங்கள், ஆவணங்கள்,
குறிப்புகள், கோப்புகள், படிவங்கள், விண்ணப்பங்கள், தீர்ப்புகள்,
பட்டியல்கள், கையொப்பங்கள், முத்திரைகள், முகவரிகள் முதலான அனைத்துமே
செல்லத்தக்கன என ஆணையிட்டால் போதுமே. மேலும், தமிழ் என்பது பிறமொழிக்
கலப்பற்றுத் தமிழில் எழுதுவதுதான் என்றும் அறிவித்தால் போதுமே.
தெரியவாதவர்களும் தெரிவதற்குரிய வழிவகைகளை மேற்கொண்டு
விடுவார்களேஇன்றோஎனில்எல்லாவற்றிற்கும்ஏதோஒருவிதிவிலக்குஇருக்கும். அதனையே
பற்றுக்கோடாகக் கொண்டு தமிழை விலக்கி வைக்கும் நடைமுறைதானே உள்ளது. மேலும்
ஆட்சிமொழி என்பது ஆட்சிப்பணியைப் பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு
மட்டும்தானா? பொதுமக்களுக்கு இல்லையா? இவ்வாறு தமிழில் இருப்பன மட்டுமே
செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்தினால்தானே, எல்லா நிலைகளிலும்
பொதுமக்களாலும் தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப்படும். அப்பொழுதுதானே
ஆட்சிமொழி என்பதற்குப் பொருள் இருக்கும்.
பள்ளிகளில் மொழிப்பாடமாகத்
தமிழைக்கட்டாயமாக ஆக்கிவிட்டாயிற்றே! இனி செய்ய வேண்டியது என்ன உள்ளது
என்கிறீர்களா? ஆண்டிற்கு ஒரு வகுப்பு என்ற முறையில் பத்தாண்டுகளுக்கு
இத்திட்டத்தை ஒத்திப் போடுவதில் இருந்தே செயல்படுத்துவோரின் ஈடுபாடின்மை
நன்கு புரிகின்றதே. இக்கல்வியாண்டு வீணானது போதும். உச்ச நீதிமன்றத்தைக்
காப்பாகக் கொண்டு, 2008-2009 கல்வியாண்டு முதல் எல்லாப் பாடநிலைகளிலும்
தமிழ் மொழிப் பாடம் என்பதைத் தவிர்க்க இயலாப் பாடமாக மாற்ற வேண்டும்.
இக்கோடை விடுமுறையில் வரும் கல்வியாண்டில் தமிழ் படிப்பதை எளிமையாக்கும்
வகையில் தமிழ்ச் சான்றிதழ் வகுப்புகள் நடத்த வேண்டும். அது மட்டுமல்ல
தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் முதலான தொழில் படிப்பு பயில வருவோரும்
தமிழை அறியச் செய்ய வேண்டும். எவ்வாறு பிற நாடுகளில் அந்நாட்டு மொழிகளில்
தேர்வு நடத்துகிறார்களோ, அதே மாதிரித் தமிழ்நாட்டிலும் தமிழ் மொழித் தேர்வு
நடத்தப்படவேண்டும்.
தமிழ்ப் பயிற்று மொழி என்பதும்
எல்லா வகைக் கல்வியிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பிற மொழி பேசுவோர்
தமிழ்நாட்டில் பயில விரும்பினால், எவ்வாறு அவர்கள் பிற நாடுகளுக்குச்
சென்று படிக்க விரும்பினால், முதலில் அந்நாட்டு மொழியைக் கற்றுக் கொண்டு
அதன்பின் அந்நாட்டு மொழியில் கற்க இயலுமோ அதுபோல், தமிழ்நாட்டின் தமிழை
முதலில் கற்றுக்கொண்டு அதன்பின்பு விரும்பும் படிப்பைத் தொடரும் வகையில்
நடைமுறைப் படுத்த வேண்டும்.
தத்தம் மொழியைப் பயில உரிமை
உண்டு என்றும் இந்திய நாடு என்னும் போர்வையிலும் யாரும் எதிர்ப்பு
தெரிவிப்பின், அவர்களை மக்கள் இல்லாப் பகுதிக்கு அனுப்பி அவர்கள் விருப்பம்
போல் படிக்கச் சொல்ல வேண்டும்.
ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்
சாக இந்தியா என்று சாற்றிடுவோம்
என்னும் பாவேந்தரின் முழக்கத்திற்குத்
தேவையில்லாத சூழலை உருவாக்கி வலிவான பொலிவான இந்தியத் துணைக்கண்டத்தை
உருவாக்க வேண்டும் எனில், தமிழே தமிழ்நாட்டின் கல்வி மொழி என்பதை
நடுவணரசிற்கும் நாம் உணர்த்த வேண்டும்.
எல்லாக் கோயில்களிலும் தமிழிலும்
அருச்சனை செய்யலாம் என இருந்து, இப்பொழுது தமிழில் அருச்சனை செய்யப்படும்
என அறிவிப்பு உள்ளதும் சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடலாம் என்பது
நடைமுறைக்கு வந்தபின்பும் தமிழ் வழிபாட்டைப்பற்றிப் பெருமை கொள்ளாமல்
இருக்கலாமா எனச் சிலர் எண்ணலாம். சிதம்பரம் கோயிலில் ஆரியவழிபாடு
முடிந்தபின்பு வெளி மேடையில் சிறிது நேரம் தேவாரம் பாடத்தான் இசைவே அன்றி,
தெய்வப் படிமம் உள்ள கருவறையில் தேவாரம் பாட இயலாது. மேலும், தமிழ்நாட்டில்
தமிழர்களால் கட்டப்பெற்ற தமிழ்க் கோயில்களில் தமிழ்க் கடவுள்களுக்குத்
தமிழில் வழிபாடு நடத்துவதற்கு அறிவிப்பு தேவைதானா? அறிவிப்பு எதுவும்
இல்லாமலேயே தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்படவேண்டும். எழுத்து மூலமான
வேண்டுகோளின் அடிப்படையிலேயே பிற மொழி வழிபாட்டிற்கு இசைவு வழங்கப்பட
வேண்டும். சமய உரிமை அல்லது ஆகம வழிபாட்டுமுறை என்ற பெயரில் எதிர்ப்பு
தெரிவிப்பது தமிழர்களின் இறைவழிபாட்டு உரிமைக்கு எதிரானது எனச் சட்டம்
கொண்டு வந்து அத்தகையோரின் அடாவடிப் போக்குகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க
வேண்டும்.
திரைப்படங்களோ, தொலைக்காட்சிகளோ,
இதழ்களோ எவையாயினும் பெரும்பாலும் தமிழ்க்கொலையில் முதலிடம் பெறுகின்றன
என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் “திரு” என
வரவேண்டிய இடங்களில் “சிறீ” என மாற்றிய தணிக்கையை ஏற்றுக் கொண்ட நாம்,
இப்பொழுது தமிழ்க்காப்பிற்கெனத் தணிக்கையை அறிமுகப்படுத்தினால்தான் நம்
பிறநிலைகளில் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றி காணும் என்பதை உணர
வேண்டும். பிறமொழிக் கலப்பின்றித் தமிழைத் தமிழாகப் பயன்படுத்தினால்
மட்டுமே, அரசு விளம்பரங்களும் நல்கைகளும் கடன் உதவிகளும் விருதுகளும்
வழங்கப்பெற வேண்டும். தமிழோசையும் மக்கள் தொலைக் காட்சியும்
இம்முயற்சிகளில் வெற்றி கண்டு வரும் பொழுது, தினமணியின் ஒரு பகுதி நல்ல
தமிழில் செய்திகளைத் தந்து வெற்றி ஈட்டிக் கொண்டிருக்கும் பொழுது
சிற்றிதழ்கள் பலவும் இலக்கிய இதழ்கள் பலவும் நல்ல தமிழில் வந்து
கொண்டிருக்கும் பொழுது பிறவற்றால் ஏன் இயலாது? தமிழ், தமிழ் என முழங்கும்
எல்லாக் கட்சிகளும் தத்தம் கட்சி இதழ்களைத் தமிழில் நடத்தியும் தமிழில்
உள்ள தமிழ் இதழ்களை மட்டுமே வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாலே
போதுமே. அஃதாவது, பிற மொழி இதழ்களைப் படிக்கத் தடையில்லை. ஆனால் தமிழில்
வரக் கூடிய இதழ்கள் எனில் உண்மையிலேயே பிழையற்ற நல்ல தமிழில் வந்தால்
மட்டுமே படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என அடையாளம் காட்டி
அறிவுறுத்தினால் போதுமே! பண்பாட்டுச் சீர்குலைவான படைப்புகளைத் தணிக்கையின்
மூலம் தடுத்தால், நாடகங்கள், படங்கள், தொகுப்பு நிகழ்ச்சிகள்மூலம்
நடைபெறும் மொழிக் கொலைகளைத் தடுக்க இயலுமே!
வணிக நிறுவனங்களுக்கு உரிமம்
கொடுக்கும் பொழுதே, நல்ல தமிழில் பெயர் இருந்தால் மட்டும் ஏற்பு அளிப்பின்,
இயல்பாகவே விளம்பரப் பலகைகளில் தமிழைக் காண இயலுமே! பொதியப் பட்ட
எப்பொருளாயினும் அதன் உறைகளில் தமிழைக் காணலாமே! அவ்வாறாயின் இயல்பாவே
மக்கள் நாவில் நற்றமிழ் நடமாடுமே!
இவ்வாறு கூறுவதெல்லாம் புதிய
திட்டங்கள் அல்ல. பல நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவனதாம். நம்
நாட்டிலும் காலங்காலமாக வலியுறுத்தி வரப்படுவனவே!
எனவே, தமிழ் என்றும் நம் நாட்டின்
எல்லா நிலைகளிலும் செயற்பாட்டு மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் திகழ
இன்றைய நிலையில் துணிந்து மேற்குறித்தவாறான நடவடிக்கைகளை எடுத்தால்தான்
இயலும். இல்லையேல், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதே போல் “இன்றும்
தமிழ்! என்றும் தமிழ்!” என்னும் வெற்று ஆரவார முழக்கம் மட்டுமே
மேலாங்கியிருக்கும்.
என்றென்றும் தமிழை வாழவைக்க
இன்றேனும் கலையட்டும் தூக்கம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக