தேனிப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலை நேர்ச்சிகள் தொடர்கதையாகி வருகின்றன.
திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை
இருவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திண்டுக்கல்லில்
இருந்து தேவதானப்பட்டி வரை இருவழி சாலை அமைக்கும் பணி முடியும் தறுவாயில்
உள்ளது. அதனை ஒட்டியுள்ள சிற்றூர்களை இணைக்கும் சாலைகளைச் செப்பனிடாமல்
அப்படியே விட்டுவிட்டனர்.
இருவழிச்சாலையில் அதிவேகமாக வரும்
வாகனங்கள் சாலை இப்படியே நீளும் என்ற எண்ணத்தில் அதிவேகத்துடன்
வருகின்றனர். அப்போது புல்லக்காபட்டி பகுதியில் சாலை அமைக்கப்படாததால்
ஒட்டுநர்கள் வேகத்தை உடனடியாகக் குறைக்கமுற்படுகின்றனர் அல்லது திடீர்
நிறுத்தம்(சடன்பிரேக்) போடுகின்றனர். இதனால் சாலைநேர்ச்சி நடைபெறுகிறது.
புல்லக்காபட்டி பகுதியில் கடந்த சில
மாதங்களுக்கு முன்னர்ச் சாலை நேர்ச்சியில் 4 பேர் இறந்தனர். அதன் பின்னர்க்
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் முதிய பெண்மணி ஒருவர்
நேர்ச்சிக்குள்ளானர். மேலும் அதே இடத்தில் நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட
ஆடுகள் பேருந்தில் சிக்கிப் பலியாகின.
அவ்வப்பொழுது மகிழுந்துகளும்
நேர்ச்சிக்குள்ளாகின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறை நேர்ச்சிப்பகுதி என்றும்
இருவழிச்சாலை முடிவுற்றது என்றும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். உடனடியாக
நேர்ச்சிகளில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற நெடுஞ்சாலைத்துறையும் உரிய
அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
- வைகை அனீசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக