தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் வேளாண் பெருமக்கள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மாறிவருகிறார்கள்.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி,
சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் சோத்துப்பாறைஅணை, வைகை
அணை,மஞ்சளாறு அணை ஆகிய அணைகளின் பாசனத்தை நம்பி உழுதொழில் புரிந்து
வந்தனர். இதனால் நெல், கரும்பு, வாழை எனப்பயிரிட்டு தமிழகத்திற்குள்ளும்
பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில
வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் வறட்சி காணப்பட்டது. இதனால் உழவர்கள்
பயிரிட்ட தென்னை, வாழை, கொய்யா,
எலுமிச்சை மரங்கள் அனைத்தும்
கருகத்துவங்கியன. இந்நிலையில் சிறு -குறுநில உழவர்கள் தண்ணீர்ப்
பற்றாக்குறையை சரிசெய்ய அனைவரும் சொட்டுநீர் பாசனத்திற்கு
மாறிவருகிறார்கள். குறுகிய கால, நீண்ட காலப்பயிர்களுக்குக்கூடச்
சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்பாக உழவர்கள் கூறுகையில்,
“தற்பொழுது தண்ணீர்ப் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. இதனைச் சமாளிக்கச்
சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மாறிவருகிறோம். தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை
அதிகாரிகள் இதன் தொடர்பாக விளக்கம் கூறி நல்கைத்தொகையைப் பற்றி
தெரிவித்தால் அனைத்து உழுவர்களும் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மாறி
தண்ணீரைச் சிக்கனப்படுத்துவதோடு அல்லாமல் தொடர்ந்து உழுதொழில் புரிவோம்”
என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக