pirar-karuvuulam
kachatheevu
  தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய சிக்கல், கச்சத்தீவு பற்றியது. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களைக் காவு வாங்கியும், பசியடங்காக் காலனின் கொடுமைக்குக் காரணமான கச்சத்தீவின் சிக்கலுக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவைத் தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று?
  தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், இராமேசுவரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தொலைவு, 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20 ஆம் நூற்றாண்டில்,இராமநாதபுரம் சமத்தானத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர், அங்கு அந்தோணியர் தேவாலயத்தை அமைத்தார். இன்றும், அத்தீவில் இருக்கும் ஒரே கட்டடம் அதுதான். இந்தியாவின் தென்கோடி இராமேசுவரமும், அதை ஒட்டிய கடல் பகுதிகளும், சிறு தீவுகளும், இந்தியா விடுதலை பெற்ற, 1947 ஆம் ஆண்டு வரை, பிரிட்டிசாரின் நேரடி நிருவாகப் பகுதியாக இல்லாமல், சேதுபதி மன்னர்கள் ஆண்டு வந்த, இராமநாதபுரம் அரசாட்சியிடமே இருந்தன. விடுதலைக்குப் பின், இந்தியாவிலிருந்த மற்ற அரசாட்சிகளைப்போல், இராமநாதபுரம் அரசாட்சி, சட்ட பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதுவரை கச்சத்தீவு, இராமநாதபுரம் அரசாட்சியை ஆண்ட, சேதுபதி மன்னர்களின் பரம்பரைச் சொத்து என்பதை மெய்ப்பிக்க, ஏராளமான சான்றுகள் உள்ளன. அவை இன்றும், மதுரையிலுள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  இராமநாதபுரம் மன்னருக்கும், அன்றைய இந்திய (மத்திய) அரசின் உள்துறை செயலருக்கும் இடையே, 1913 இல் குத்தகைப் பத்திரம் ஒன்று கையெழுத்தாகியது. அந்தப் பத்திரத்தின் இறுதியில், இராமநாதபுர அரசாள்கையில் சங்கு கிடைக்கும் பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில், கச்சத்தீவின் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், இராமநாதபுரம் அரசாளுகையின் சொத்தாக, கச்சத்தீவு இருந்தது என்பதும், அதை பிரிட்டிசு அரசு அங்கீகரித்துள்ளது என்பதும், தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 1921 அக்., 21 ஆம் நாள், இலங்கைத் தலைநகராகிய கொழும்பில், மீன் பிடி எல்லையை வகுக்க மாநாடு ஒன்று நடந்தது. இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட, ஆர்சுபர்க்கு என்ற அதிகாரி, கச்சத்தீவுக்கு அப்பால், 3.45 கல்(3 கடல் மைல்) வரை, மேற்கே உள்ள கடல் பகுதியும் உள்ளடங்கும் வகையில், இலங்கையின் எல்லை வகுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார்.
  இந்திய அரசுக் குழுவினர், கச்சத்தீவு தனக்குச் சொந்தம் என்று, இராமநாதபுரம் மன்னர் கூறுவதை வெளியிட்டு, வரைபடத்தையும் காட்டினர். நெருக்கடியைத் தவிர்க்க, இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை, கச்சத்தீவுக்கு மேற்கே, 3.45கல் தொலைவிலேயே தற்காலிகமாக வரையறுத்துக் கொள்ளலாம் என, உடன்பாடு செய்து, இந்தியக் குழு அறிக்கை ஒன்றை, இந்திய அரசுக்கு அனுப்பியது. பழைய ஆவண விவரங்களையும், பிரிட்டிசு அரசின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது, பிரிட்டிசார் ஒரு போதும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கவில்லை என்பதும், அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டனர் என்பதும், தெளிவாகத் தெரிகிறது.
  கடந்த, 1956க்கு பின், இந்திய அரசு, தன் கடல் ஆதிக்க எல்லைக் கோட்டை, 3 கடல்கல்லளவிலிருந்து (ஒரு கடல் கல் என்பது, 1.15 கல் அல்லது 1.863 புதுக்கல்/கி.மீ.,) 6 கடல்கல்லளவாக விரிவுபடுத்தியது. இதே போன்ற போட்டி அறிவிப்புகளை, இலங்கை அரசும் வெளியிட, சிக்கல் வலுவடைந்தது. கடந்த, 1973 இல், அன்றைய தலைமையமைச்சர் இந்திரா, இலங்கை சென்றார். பின், இரு நாடு அதிகாரிகளும் கூடிப் பேசினர். 1974 இல், இலங்கைத்தலைமையமைச்சர், சிரிமாவோ பண்டாரநாயகா, இந்தியா வந்தார். அண்டை நாடுகளுடன் அமைதியான நல்வாழ்வு என்ற இந்தியாவின் கொள்கை, ஒரு வகையில் நமக்கு சொந்தமான கச்சத்தீவு கைமாறக் காரணமாக இருந்தது. 1974 இல், இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமாக்கப்பட்டது.
  இந்த ஒப்பந்தத்தின், ஐந்தாவது பிரிவு, இந்தியத் தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும், கச்சத்தீவில் ஓய்வெடுக்கவும், மீன் பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளவும் வழி வகுத்திருந்தது. முதல்வர் செயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, 2008 இல், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற முறையில், கச்சத்தீவை மீட்க வழக்கொன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியும், 2013 இல், அதேபோல் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கின் அடிப்படை, இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தவறு என்பது தான். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை நீக்குவதற்கும், ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை மீட்டெடுக்கவும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?
  உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில், 1960 மார்ச்சு, 14ஆம் நாள் வழங்கப்பட்ட தீர்ப்பு விடை சொல்கிறது.
  இந்தியா, 1947 இல் விடுதலை அடைந்த போது, மேற்கு வங்க மாநிலம் இந்தியாவுடன் இருக்க, கிழக்கு வங்க மாநிலம், கிழக்கு பாகித்தானாக மாறியது. பின், இந்த கிழக்கு பாகித்தான், வங்க தேசமாகத் தனி நாடானது. ‘பேர்பாரி’ என்ற நிலப்பரப்பு தொடர்பாக, இந்தியாவுக்கும் – பாகித்தானுக்கும் இடையே தொடக்கம் முதல், சிக்கல் இருந்து வந்தது. ‘பேர்பாரி’ என்ற நிலப்பகுதி, மேற்கு வங்கத்தின் நிருவாகத்தில்தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்த போதும், கிழக்கு பாகித்தானாக மாறிய, கிழக்கு வங்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று, பாகித்தான் பிடிவாதமாக வாதாடியது. அரசமரத்து நாட்டாமை பாணியில், உனக்குப் பாதி எனக்குப் பாதி என்று முடிவானது. இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மத்திய அரசின் சார்பில், இந்திய நிலப்பரப்பு பகுதிகள் ஏதும் பாகித்தானுக்கு வழங்கப்படவில்லை; சிக்கலுக்குள்ளாயிருந்த எல்லைப்பகுதிதான் வரையறுக்கப்பட்டது என்று, வாதிடப்பட்டது.
  ஆனால், இந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை ஆராய்ந்த நீதிமன்றம், அந்த ஒப்பந்தம், இந்தியாவின் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தமே என்று முடிவு செய்தது. இப்படி ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க, அரசுக்கு உரிமை உள்ளதா என்று ஆராய்ந்த போது, இவ்வாறு விட்டுக் கொடுப்பதற்குத் தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்பு சட்டத்தில் செய்ய வேண்டும் என்றும், அவ்விதம் செய்யாத நேர்வில், இந்தியாவின் நிலப்பகுதிகளை வேறு நாட்டோடு ஒப்பந்தம் செய்து, அதை விட்டுக் கொடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும், ஒரு மிகமுதன்மையான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ‘பேர்பாரி’ நிலப்பரப்பு முழுவதும், இந்தியாவுடன் இணைந்தது.
  உச்ச நீதிமன்ற, எட்டு நீதிபதிகள் கூடி வழங்கிய இந்த தீர்ப்பு வந்த, 14 ஆண்டுகள் கழித்து, கச்சத்தீவு ஒப்பந்தம் இலங்கை அரசோடு போடப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது போலவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் பின்னேற்பு செய்யப்பட வேண்டும் என்று, கச்சத்தீவு ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக, அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு திருத்தமும் இன்று வரை செய்யப்படவில்லை. எந்தத் திருத்தமும் செய்யப்படாத நிலையில், இந்தியா – இலங்கையோடு, 1974 இல் செய்து கொண்ட ஒப்பந்தமும், அதன்பின் தொடர்ச்சியாக, 1976 இல் செய்து கொண்ட ஒப்பந்தமும் சட்டபூர்வமானதல்ல. கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தமிழக மீனவர்களுக்கு உண்டான மீன் பிடித்தல், வலை உலர்த்தல் ஆகிய உரிமைகளை வழங்காத இலங்கையுடன், இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடியாகும்?
  இப்போது, மத்திய அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது என்பதுதான் புதிர். இனப்படுகொலை நடத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு அரக்கனுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் மத்திய அரசு, கச்சத்தீவு சிக்கல் முடிந்து போன செய்தி என்று, இலங்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில், எதிர் உறுதி ஆவணம் அளிக்குமா? உச்ச நீதிமன்ற எட்டு நீதிபதிகளின் அமைப்பான, அரசியல் அமர்வு வழங்கிய முதன்மை வாய்ந்த தீர்ப்பை ஒப்புக்கொள்ளுமா அல்லது புறக்கணிக்குமா?
ramaiya_dinamalar01க. இராமையா, சமூக ஆர்வலர்
உரத்த சிந்தனை , தினமலர்   சூன் 8, 2013
 மின்வரி: karuramiah70@yahoo.in