பா.நமச்சிவாயம், “குடும்ப விளக்கு
நடத்தக்கூடாது” என்ற பாவேந்தர்!
மறுத்துச்சீறிய இலக்குவனார்!
பட்டிமன்றப் பேச்சாளர், அறிஞர் பா.நமச்சிவாயம் வாழ்வில் நடைபெற்ற ஒரு
நிகழ்வு, பேரறிஞர்கள் இருவருடன் தொடர்பு உடையது. அவர்
மறைவின்பொழுது இதனை நினைவுகூர்வது பொருத்தமாக அமையும். அறிஞர் பா.நமச்சிவாயம்,
முனைவர் மறைமலை
இலக்குவனார் அவர்களிடம் தெரிவித்து, அவரால், 'சாகித்திய
அகாதெமி'யின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள் - சி.இலக்குவனார்'
நூலில் பதிவு
செய்யப்பெற்ற (பக்கங்கள்139-140) செய்தி இதோ!
"அறுபத்துமூன்று ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த அப்பெருந்தகையின்
பண்புநலனை விளக்க அறுபத்து மூவாயிரம் நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம் என்னும்
வகையில் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உணர்வுநலன் சிறக்க வாழ்ந்து பிறர்க்கு
முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். புகழ்வாய்ந்த பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர் பா.நமச்சிவாயம் கூறிய ஒரு
நிகழ்ச்சி.
அவர் நாகர்கோயிலில் தெ.தி.இந்துக்கல்லூரியில்
இளநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த நேரம்; இலக்குவனார் அங்கே பொறுப்பு முதல்வர்; பாவேந்தர் பாரதிதாசன் அக் கல்லூரி
நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டு வந்துள்ளார்; மாலையில்தான் விழா; முற்பகலில் வந்துள்ளார்; இலக்குவனார் பாவேந்தரை அழைத்துக் கொண்டு எல்லா
வகுப்பறைகளையும் காண்பித்துத் தமிழ் முதுகலை வகுப்புகளுக்கு மட்டும் உள்ளே
அழைத்துச் சென்று ஆசிரியரையும் மாணவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்; அப்போது அக்கல்லூரி கேரளப் பல்கலைக்கழகத்தின்
ஆளுகைக்குட்பட்டிருந்தது. இலக்குவனாரின் முயற்சியாலேயே தமிழ் முதுகலை(எம்.ஏ.)
வகுப்பு அங்கே ஏற்படுத்தப்பட்டது.
பாவேந்தரின் 'குடும்ப விளக்கு' என்னும் படைப்பு அம்மாணவர்களுக்குப் பாடாமாக
(இலக்குவனார் முயற்சியால்) வைக்கப்பட்டிருந்தது. பாவேந்தர் அவ்வகுப்பில் நுழைந்த
பாடவேளை 'குடும்ப விளக்கு'
நடத்துதற்குரிய
பாடவேளை.அதனை நடத்தும் ஆசிரியர் பா.நமச்சிவாயம்தான். இதனை மகிழ்வோடு பாவேந்தரிடம்
கூறினார் இலக்குவனார். மிக இளமைத் தோற்றம் கொண்ட நமச்சிவாயத்தைப் பார்த்துப்
பாவேந்தர் கேட்டார், "உமக்குத்
திருமணம் ஆகிவிட்டதா?" அப்போதுதான் புதிதாக வேலையில்
சேர்ந்திருந்த
நமச்சிவாயம் அஞ்சியபடியே விடையளித்தார், "இல்லை, ஐயா"
அங்கே ஆசிரியரைவிட
மூப்பாகத் தெரிந்த மாணவர்களை நோக்கிக் கேட்டார் பாவேந்தர், "உங்களில் யாராவது திருமணமானவர்கள்
இருக்கிறீர்களா?" மூன்றுபேர் கை தூக்கினார்கள். அவர்களைப்
பார்த்துப் பாவேந்தர் கூறினார்:
"உங்களில் யாராவது இப்பாடத்தை நடத்துங்கள்."
இந்நிகழ்ச்சிப்
போக்கில் சற்றும் காலத்தாழ்வு செய்யாமல் உடனேயே சீற்றமிக்க குரலில் இலக்குவனார் பாவேந்தரைப் பார்த்துக்
கூறினார்: "என்ன ஐயா, கூறுகிறீர்?
இளங்கோ அடிகளும்
திருத்தக்கதேவரும் திருமணம் புரிந்துகொண்டா இல்லற இன்பம் பற்றிப் பாடினார்கள்?"
மறுகணமே அமைதியான
பாவேந்தர் இலக்குவனாருடன் மீண்டும் முதல்வர் அறைக்கே சென்றுவிட்டார். தமது
மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் மனங்குன்றிப் போகும்படிச் செய்துவிடக்கூடாது
என்பதில் இலக்குவனார் காட்டிய கவனம் இங்குக் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக