ஞாயிறு, 14 அக்டோபர், 2012

என்புமுறிவுக் காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?

பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: என்புமுறிவுக் காய்ச்சலில் உயிர் தப்புவது எப்படி?
பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது: டெங்கு காய்ச்சலில்
 உயிர் தப்புவது எப்படி?
எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது “டெங்கு” காய்ச்சல் மிரட்டுகிறது. லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.

டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது. ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.

2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல்தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.

டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.

இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள்தான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை. டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த:- வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பலிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.

கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக