வெள்ளி, 19 அக்டோபர், 2012

மொழி அழிந்தால் இனமும், பண்பாடும் அழிந்துவிடும்: க. கபிலர்

மொழி அழிந்தால் இனமும், பண்பாடும் அழிந்துவிடும்: க. கபிலர்

First Published : 17 October 2012 06:57 PM IST
ஒரு மொழி அழிந்தால், அதை பேசும் இனமும், அவர்களுடைய பண்பாடும் அழிந்துவிடும் என திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) க. கபிலர் தெரிவித்தார்.
 மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இரு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில்  செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 பயிலரங்கில் துணை இயக்குநர் கபிலர் பேசியது:  உலகின் பழமையான மொழிகளாகக் கருதப்படுபவை கிரேக்கம், தமிழ், லத்தீன், சீனம், சம்ஸ்கிருதம். இவற்றில் தமிழ் மற்றும் சீன மொழிகள் தவிர, அனைத்து மொழிகளும் அழிந்துவிட்டன.
 அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், தங்களது பதவியைக் குறிப்பிடும்போது ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லும் நிலை உள்ளது. இந்நிலை மாற வேண்டும். பயன்பாட்டில் இல்லாத மொழி,அழியும் நிலைக்குத் தள்ளப்படும். மொழி அழியும்போது அதைப் பேசும் இனமும், அந்த இனத்தின் பண்பாடும் அழிந்து விடும்.
  இந்திய மொழிகளில் வங்காளம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகள் தான் நிலைத்து நிற்கும் என்றும், மற்ற மொழிகள் அழிந்து விடும் என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
 தமிழில் பேசினால், தாழ்வாக நினைத்துக் கொள்வார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஆங்கிலம் கலந்து பேசும் நிலை உருவாகி உள்ளது.   தமிழில்  மட்டும்தான், எல்லா நேரத்துக்கும் பொருத்தமான வணக்கம் என்ற இனிமையான சொல் பயன்படுகிறது. தமிழில் என்ன எழுத்து உள்ளதோ, அது அப்படியே உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் அந்நிலை இல்லை.  அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழைப் பயன்படுத்துவதற்கு சட்டம் இருக்கிறது. அதில் குறிப்பிட்ட 5 இடங்கள் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் தமிழையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அரசு முறை கடிதங்களில் திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் நாள் உலகத் தாய்மொழி தினமாகக்  கொண்டாடப்படுகிறது. அன்று நாம், தாய்மொழியிலேயே பேசுவோம் என்று உறுதி எடுக்க வேண்டும் என்றார்.
 மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பெ.ரவீந்திரன்: ஆட்சி மொழியாக இருக்கும் நமது தாய்மொழிக்கு பயிலரங்கம் நடத்துவது வேதனை தருகிறது. தமிழ்மொழி செம்மொழியாக இருந்தபோதிலும், ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனாலும் கூட, அலுவலகங்களில் பயன்பாட்டில் இன்னும் முழுமையாக வரவில்லை.
 பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் பெயர், முகவரி, கையெழுத்து போன்றவற்றை ஆங்கிலத்திலேயே எழுதும் வழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
 அலுவலகப் பயன்பாட்டில் அனைத்து வரைவுகளையும் தமிழில் எழுதுவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடும் நிலையில், நம்முடைய தாய் மொழியின் நிலை இருக்கிறது. அரசுக்காக அலுவலர்கள் பணியாற்றுகிறோம், அரசு மக்களுக்காக பணி செய்கிறது. இதன் அனைத்து செயல்பாடுகளும் மக்களுக்கு தெரிந்த மொழியிலேயே இருக்கவேண்டும் என்றார்.
 தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் கோ.செழியன் (சேலம்), க.சிவசாமி (திருச்சி), சு.தம்புசாமி (பெரம்பலூர்) உள்ளிட்டோர் பேசினர். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க. பசும்பொன் வரவேற்றார். பொதுப்பணி, வணிகவரி, காவல், தீயணைப்பு, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட  துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக