ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மதுக்கடையும் இல்லை! கட்சிக் கொடியும் இல்லை! விந்தைச் சிற்றூர்


ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தில், டாஸ்மாக் கடைகள் கிடையாது; கட்சிக் கொடிகளையும் ஏற்ற, மக்கள் விடுவதில்லை. இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடி மட்டும் ஏற்ற, கொடிக் கம்பம் ஒன்று மட்டும் உள்ளது. இதன் கட்டுப்பாடால் இங்குள்ளோர், எந்தவித பிரச்னையின்றி அமைதியுடன் வாழ்கின்றனர்.

ராஜபாளையத்தில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது, சிவலிங்காபுரம். இங்கு, விவசாயம் தான் முக்கிய தொழில். மற்ற கிராமங்களைப் போல, இங்கும், சில ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாப் அருகே, கொடிக் கம்பங்கள் அணிவகுத்து நின்றன. இரவு வர வேண்டிய தலைவருக்கு, காலையிலேயே, "மைக் செட்' வைத்து, கிராம அமைதி சூழலுக்கு சவால் விடுவது போன்ற பிரச்னைகளும் நடந்தன. இதற்கு முடிவு கட்ட, கிராமத்தினர் முடிவு செய்தனர். பார்லிமென்ட் தேர்தலும் வந்தது; தேர்தல் விதிப்படி கொடிக் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன; கொடிமர பீடங்கள் மட்டும் இருந்தன. தேர்தல் முடிந்த பின், பீடங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க, மக்கள் அனுமதிக்கவில்லை. "தேர்தல் நேரங்களில் மட்டும் ஒலி பெருக்கி உபயோகிக்கலாம்; கட்சிக் கொடிகளுக்கு அனுமதி இல்லை' என்ற நிலையை மக்களே உருவாக்கி விட்டனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""இங்கு, கொடிக் கம்பங்கள் தான் இல்லை; கட்சிகள் உண்டு. கிராமத்திற்கு எந்த தலைவர் வந்தாலும், சர்வ கட்சியினரும் சென்று வரவேற்போம். தலைவர்கள் வரும் போது, அந்தந்த கட்சியினர் மட்டும், தெருக்களில் கொடி கட்டுவர். தலைவர்கள் சென்றவுடன், அவர்களாகவே அகற்றி விடுவர்,'' என்றார்.

ஊராட்சி துணைத் தலைவர், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, கேசவன், ""இங்கு டாஸ்மாக் கடைக்கும் வழி இல்லை. கடை துவங்க நடந்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால், முறிந்தது. கொடிமர பீடங்களை அகற்றவும் பேசி வருகிறோம். இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடியை ஏற்ற மட்டுமே அனுமதிக்கிறோம். இதற்கு அனைவரும் சம்மதித்ததால், பிரச்னை இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இது சாத்தியப்படுகிறது,'' என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக