செவ்வாய், 8 நவம்பர், 2011

ஐ.நா.,வில் பேசினேன்!

சொல்கிறார்கள்


'ஐ.நா., சபையில் பேசிய முதல் தமிழ்ப் பெண் ஜெயா பார்த்திபன்: திருச்சி மாவட்டம், சித்தாம்பூர் கிராமம் தான் என் பூர்வீகம். பஞ்சம் பிழைக்க மலேசியா சென்ற என் அம்மா, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த குழந்தைவேலுவை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவிட்டார்.என்னுடன் சேர்த்து, என் பெற்றோருக்கு ஏழு பெண்கள். பள்ளிப்படிப்பை முடித்து, மலாக்கா வானொலி நிலையத்தில், கே.ஜெயா என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தேன். அங்கு பணியில் இருந்த போது, உடன் பணிபுரிந்தவரை மணந்தேன்.மலேசிய தோட்டப்புறக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயா, கொட்டகைகளின் அவல நிலைப் பற்றி அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்தேன். அதனால், குழந்தைப் பராமரிப்பு மையத் துணைச் சட்டத் திருத்தம் வந்தது.பின், "சலங்கை' என்ற பெயரில், மகளிர் இதழைத் தொடங்கினேன். "ஐடென்டிட்டி' என்ற மலாய் மாத இதழின் ஆசிரியர் ஆனேன். மலாய்ப் பத்திரிகை உலகில், தமிழ்ப் பின்னணியுள்ள ஒரே பெண் பத்திரிகை ஆசிரியர் நான் மட்டுமே. இதில் இருந்து ஆற்றிய பணிகள், விவரிக்க முடியாத மன நிறைவைத் தருகின்றன.கடந்த, 1971ல் மலேசிய இந்திய காங்கிரசில் சாதாரண உறுப்பினர் ஆனேன். பின், கட்சியின் செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் தலைவி, கூட்டரசுப் பிரதேச மாநில மகளிர் செயலர் என, படிப்படியாக முன்னேறி, 1999ல் பார்லிமென்ட் மேலவை உறுப்பினர் ஆனேன்.தையல் பயிற்சி, அழகுப் பொருட்கள் விற்பனை, தனித்து வாழும் தாய்மார்களுக்குப் பயிற்சி என, பல திட்டங்களைக் கொண்டு வந்தேன்.இதைத் தொடர்ந்து, ஐ.நா., சபையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துலகப் பிரச்னைகள் மீதான விவாதங்கள், ஆலோசனைகளைக் கேட்ட நான், மலேசியாவின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தேன்; இது எதிர்பாரா வாய்ப்பு.எங்கள் பிரதமருக்கு அடுத்து, ஐ.நா., சபையில் பேசியவள் நான் மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக