திங்கள், 24 அக்டோபர், 2011

தேசியத் தலைவர் பற்றிச் சிதம்பரம் சொன்ன பொய்க்கு மறுப்பு.

தேசியத் தலைவர் பற்றிச் சிதம்பரம் சொன்ன பொய்க்கு மறுப்பு.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் பற்றி ஊழலுக்கு எதிரான காந்தியவாதி அன்னா ஹசாரே சொன்ன விமர்சனக் கருத்து இப்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிதம்பரம் ஒரு குடைச்சல் பேர்வழி என்றார் ஹசாரே. முன்னாள் இராணுவ வீரரான இவர் பேச்சில் பிடிவாதமும் நிதானமும் உள்ளவர்.
முன்னுக்குப் பின் முரண்படப் பேசுவதிலும், முன்பு பேசியதை விரைந்து மறுப்பதிலும் சொன்னதிற்கு மாறாகச் செயற்படுவதிலும் சிதம்பரம் பெயரெடுத்தவர். மொத்தத்தில் அவர் கைதேர்ந்த அரசியல்வாதி என்பதில் மறுப்பில்லை. அவருடைய பல்டிகளுக்குப் பல உதாரணங்கள் உண்டு. இவற்றைப் பார்ப்போம்.
விடுதலைப் புலிகளைக் கையாள்வதற்கு இலங்கை தனது இராணுவத்தைப் பயன்படுத்தியது போல் நாம் நக்சலைற்றுகளுக்கு எதிராக எமது இராணுவத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்றார் சிதம்பரம். ஏனென்றால் அது எமது தர்மசாத்திரங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் பொருந்தாதவை என்று அவர் சொன்னார்.
இதே சிதம்பரம் 1987ல் இந்தியப் படையை ஈழத் தமிழர் மீது படை எடுப்பதற்கு ராஐPவ் காந்தி தீர்மானித்த போது அதற்கு உறுதுணையாக நின்றார். அப்போது எங்கே போய்விட்டன இந்திய தர்மசாத்திரங்களும் நீதி நெறிகளும். தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் அநியாயமாகச் சீரழிக்கப்படுகிறார்கள், என்று சிதம்பரத்திற்கு நேரடியாக அறிவிக்கப்பட்ட போதும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.
இது வரை காலமும் இந்தியப் படை தமிழீழத்தில் நடத்திய இன அழிப்புப் பற்றி சிதம்பரம் ஒரு சொல்லைத் தன்னும் பேசவில்லை. தமிழராக இருந்தும் தமிழுணர்வு அற்ற சிதம்பரம் காங்கிரசின் தலையாட்டியாக இருக்கிறார்.
திடீரென்று முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை என்ற அறிவிப்பிற்கும் சிதம்பரத்தின் உள்துறை அமைச்சிற்கும் தொடர்பு இருக்கிறது. உள்துறை அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டுத் தூக்குத் தண்டனை விதித்தார்.
இன்னொரு விடயத்தை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் 1987ல் ஏற்றிருந்தால் இன்று அவர் இலங்கையின் முடிசூடா மன்னனாக இருப்பார் என்று சிதம்பரம் கூறியிருக்கிறார். நாக்கில் நரம்பு இல்லாத இந்தப் பேச்சை ஏற்கமுடியாது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஒரு சமாதான உடன்படிக்கை என்று வர்ணிக்க முடியாது.அது தமிழின அழிப்பிற்காக இந்திய மத்திய அரசும் சிங்கள தேசமும் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கை. இதைச் சிதம்பரத்தால் மறுக்க முடியுமா?
இந்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால் அதே இந்திய இராணுவம் ஈபிஆர்எல்எப் போன்ற ஒட்டுக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் புலிகளைத் தாக்கும் ஆணையையும் வழங்கியது.
இதைச் சிதம்பரம் அறியாதவர் போல் பிதற்றுவது வரலாற்றைத் திரிபுபடுத்தும் கேவல முயற்சியாகப் பார்க்கப் படுகிறது. படித்த மனிதன் போல் பாசாங்கு செய்து ஆங்கிலம் பேசித் திரியும் இந்த மனிதப்பரை என்னவென்று கூறுவது. அவருடைய சிறுபிள்ளைத் தனத்திற்கு அளவேயில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டு இழுபறியில் இருக்கும் காஷ்மீர் பிரச்சனைகக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் இராணுவத் தீர்வு தவிர்ந்த வேறு எந்தத் தீர்வை வைத்திருக்கிறார்? தர்மசாத்திரங்களும் நீதி நெறிகளும் என்ன செய்கின்றன.
நக்சலைற்றுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற சிதம்பரம் இன்று அவர்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார். உன்னதமான பேச்சுக்கும் உண்மைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிகப் பெரியது. இதற்குச் சிதம்பரம் நல்ல உதாரணம்.

Comments are closed.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக