புதன், 30 ஜூன், 2010

அடுத்து செய்ய வேண்டியது என்ன?

First Published : 29 Jun 2010 01:43:08 AM IST


உலக அளவில் தமிழின் சிறப்பை அறியச் செய்யவும், தமிழர்களின் பெருமைகளை விளக்கவும் மாபெரும் தமிழ் மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளது. அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டுப் பலரும் இம் மாநாட்டில் பங்கேற்றுப் பெருமை சேர்த்ததை நன்றியுள்ள தமிழன் மறக்கமாட்டான். இத்தனை சிரமங்களும் எதற்காக? தமிழின் தொன்மையைப் பறைசாற்றுவதற்கும், பிற மொழிகளில் இல்லாத சிறப்புகளை எடுத்துக்கூறவும்தான். இப்படிப்பட்ட நிலையில் தமிழின் வளர்ச்சிக்கும், அதைப் பாதுகாப்பதற்கும் நாம் செய்ய வேண்டிய பணிகள் போதுமானதா என யோசிக்க வேண்டும். இனிமேல்தான் நாம் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். தமிழ் வாழ்கிறதா?  தமிழன் வாழ்கிறானா? இதுவே நம் கேள்வி. இன்று அரசுத் துறைகளாகட்டும், தனியார் துறைகளாகட்டும் 90 சதவிகிதம் பேருக்கு தமிழ் குறித்த அடிப்படை அறிவு இல்லை என்றே கூறலாம். பேச்சு, எழுத்து வழக்குகளில் நிறைய முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, பெரும்பாலான படித்தவர்களிடம் காணப்படும் குறை லகரம், ழகரம் எங்கு பயன்படுத்துவது என்பதுதான். இன்னும் சிலரோ ர, ற பயன்படுத்துவதையும், ன, ண பயன்படுத்துவதையும் அறியாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை, மருத்துவம், பொறியியல், கணிப்பொறித் துறைகளில் வல்லுநர்களாகத் திகழும் தமிழர்களுக்கு அறவே தமிழ் தெரியாத நிலையை என்னென்பது?  கடந்த திமுக ஆட்சியில், தமிழுக்கென்றே தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டார். அது பின்னர் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இப்போது அந்தத் துறைக்கு அவசியம் வந்துள்ளது.  செம்மொழி மாநாடுதான் முடிந்துவிட்டதே, இனி தமிழ் தானாக வளரும் என யாரும் எண்ணி அமைதியாக இருந்துவிடக் கூடாது என்பதே நம் கவலை. எனவே, உடனடியாக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இனி தீவிரம் காட்ட வேண்டும்.  ஒவ்வொரு துறையிலும் ஆவணங்கள், சுற்றறிக்கைகள், வருகைப் பதிவேடு உள்ளிட்டஅனைத்துமே தமிழில் கட்டாயம் இருக்குமாறு உத்தரவிட வேண்டும். தினம் ஒரு குறள் மாதிரி, தினம் ஒரு தமிழ் நூல், காப்பியம், புராணம் என்ற ரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.  இதற்கு ஊடகங்கள், பத்திரிகைகளின் பங்களிப்பைத் தாராளமாக நாடலாம். அனைத்துப் பள்ளிகளிலும் உடற்பயிற்சி, நீதிபோதனை, கைத்தொழில் பாடவேளையை ஒதுக்குவது போல, தமிழ் சிறப்பு வகுப்பைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம்.இப்போது ஆங்கிலம், தமிழ் என இரு பாடவேளைகள் உள்ளதைத் தவிர்த்து முழுக்க முழுக்க இலக்கணம், இலக்கியம், தமிழறிவு சார்ந்த பாடங்களைப் போதிக்கும்படிச் செய்யலாம். இதற்கு மதிப்பெண் தர வேண்டியதில்லை.  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் என்ற கோஷத்தை மட்டுமே அறிந்துள்ளோம். அதை நிஜமாக்கும் வகையில் தமிழ் நூலகத்தைத் தீவிரமாக்கி, அங்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள், தமிழறிஞர்களை வைத்து வகுப்புகள், போட்டிகள் நடத்தச் செய்யலாம்.  இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் செய்யும் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச பரிசுகள், அன்பளிப்புகள் ஆகியவற்றை நல்ல தமிழ் நூல்களாக மலிவு விலையில் அச்சிட்டு வழங்கலாம். தங்கள் நிறுவன விளம்பரப் பைகளை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே அச்சிட்டு வழங்கலாம். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் குறள்களை மட்டுமே எழுதிவைப்பதைத் தவிர்த்து இலக்கியம் தொடர்பான வாசகங்களை எழுதச் செய்யலாம்.  விடுமுறை நாள்களில் பைபிள் வகுப்புகள், கணினி, விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதைப்போல தமிழ் இலக்கணம், தமிழ்க் காப்பிய அறிமுகம், தமிழ் பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சிகளை நடத்தலாம். இதற்காக அரசே நிதி உதவி செய்யலாம் அல்லது வியாபார நிறுவனங்களின் ஒத்துழைப்பை நாடலாம்.  பிரபல தலைவர்களுக்குப் பாராட்டு விழா, நன்றியறிவிப்பு விழா என்றெல்லாம் வீணாகச்  செலவழிப்பவர்கள் அதைத் தமிழுக்காகச் செலவிடலாம். இலவசமாகத் தமிழ் நூல்களை வழங்கலாம். அன்னதானம் வழங்குவதைப்போல நூல்தானம் வழங்கலாம்.  முன்பெல்லாம் தமிழ் வளர்க்க உதவியவை திருமண, பிறந்தநாள் விழாக்கள்தான். அன்று  திராவிட இயக்கத்தின் இளம் பேச்சாளர்கள் தமிழில் சொற்சிலம்பம் விளையாடுவார்கள். இன்று அவை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டன.  பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், கவியரங்கம், வாழ்த்தரங்கம் என்றெல்லாம் தமிழ் மணந்தது. வளர்ந்தது. இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னேதான் அனைவருடைய முக்கால்வாசி ஆயுளும் வீணாகிறது.  இன்றைக்கு 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் தமிழில் சரளமாக முழுமையாக பேச, எழுத அறிந்தவர்கள். இன்றைக்கு 40 வயதானவர்களை எடுத்துக் கொண்டால் பலர் தமிழில் வெற்றிடமாக இருக்கிறார்கள். எனவே, மலிவு விலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களை அச்சடித்து விநியோகிக்கலாம். ஊடகங்கள் வழியே நாடகம், சித்திரங்களாகத் தமிழ்க் காப்பியங்களை மீண்டும் வெளிக்கொணரலாம். ஆங்காங்கே தமிழ் மன்றங்களைத் தொடங்கி கவியரங்கம், தமிழ் இலக்கிய அரங்கம் போன்றவற்றை நடத்த வேண்டும்.    முன்பெல்லாம் கோயில் விழாவாகட்டும், பள்ளி விழாவாகட்டும் இலக்கிய நாடகங்கள் நடைபெறும். இன்று அனைத்தும் பழங்கதையாகி விட்டது. எனவே, தமிழை வளர்க்க மறுமலர்ச்சி அவசியம்.
கருத்துக்கள்


தமிழை வளர்க்க வலியுறுத்தும் கட்டுரையிலேயே கோசம், நிசம் என்றுஎ ல்லாம் எழுதினால் தமிழ் எவ்வாறு வளரும்? தமிழில் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்; தமிழில் பேசுங்கள்; தமிழில் பயிலுங்கள்; தமிழ் தானாக வளரும். கட்டுரையாளர்கள் எப்படி எழுதியிருந்தாலும் பிற மொழிச் சொற்களைத் திணிக்கும் போக்கு ஊடகங்களில் உண்டு.தினமணியாவது அதற்கு மாறாகப் பிற மொழிச் சொற்களைக் களைந்து நல்ல தமிழில் கட்டுரைவர ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/30/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக