செவ்வாய், 22 ஜூன், 2010

மொழி ஆய்வுகள் மூலம் தமிழின் தொன்மையை நிறுவ முடியும்: அருட்செல்வர் நா.மகாலிங்கம்


கோவை, ஜூன்  21:  குமரிக் கடல் ஆய்வையும், சீன, சம்ஸ்கிருத, கிரேக்க, லத்தீன் ஆகிய பண்டைய மொழிகளின் லிபிகளோடு மொகஞ்சதாரோ எழுத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் நடவடிக்கைகளையும் தமிழக முதல்வர் மேற்கொண்டால் மட்டுமே தமிழின் மெய்யான தொன்மையை நிறுவ முடியும் என்று சக்தி குழுமங்களின் தலைவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் கூறினார்.  கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செம்மொழிக் கோவை மலர் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்து அவர் பேசியது:  இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியா பக்கம் லெமூரியா இருந்ததாகவும், பிரளயங்கள் காரணமாக பல்வேறு பகுதிகளாக உடைந்து நகர்ந்து சென்றதாகவும் 2006-ல் வெளியான மறைந்த லெமூரியா என்ற நூலில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிராங்க் ஜோசப் கூறியுள்ளார். இதில் லெமூரியா வேறு, குமரிக் கண்டம் வேறு எனவும் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.  புதையுண்ட மொகஞ்சதாரோ நகரத்தின் எழுத்துக்கள் சம்ஸ்கிருதமாக இருக்கலாம் என்ற கருத்தை குஜராத் அறிஞர் எஸ்.ஆர்.ராவ் தெரிவித்திருந்தார். சிந்து சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ நகரத்தின் நாகரிகம், திராவிட நாகரிகம் தான் என்றும் அங்கிருந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள்தான் என்றும் அண்மைக்கால ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.  மொகஞ்சதாரோ எழுத்தில் இருந்து தான் செவ்விந்திய இனத்தார், ஆன்டெக்ஸ் இனத்தார், இன்காஸ் இனத்தார் ஆகியோரின் மொழிகள் தோன்றின என்ற கருத்தை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்க்கலாம்.  லெமூரியா கண்டம் அழியத் துவங்கியபோது ஒருசாரார் கிழக்கு நோக்கி பயணம் மேற்கொண்டனர். அப்படி கிழக்கே சென்றவர்கள் ஆன்டெக்ஸ் இன்காஸ் எனவும், வடஅமெரிக்கா சென்றவர்கள் சிவப்பிந்தியர்கள் எனவும், மெக்சிகோ சென்றவர்கள் மெக்சியர்கள் என்றும் உருவாகினர். இன்னொரு சாரார் மேற்கு நோக்கி பயணமாகி குமரிக் கண்டத்தில் குடியேறினர். குமரிக் கண்டம் மூழ்கியபோது மேற்கு நோக்கி இஸ்ரேலுக்குச் சென்றவர்கள் யூதர்கள் ஆனார்கள். எகிப்து சென்றவர்கள் சுமேரியர்கள் ஆனார்கள்.   கொல்கத்தா பக்கம் சென்றவர்கள் சோழர்கள் எனவும், சிந்து சமவெளியில் குடியேறியவர்கள் சேரர்கள் எனவும், தெற்கு பகுதியில் தங்கியவர்கள் பாண்டியர்கள் எனவும் ஆனார்கள். பின்னர் அடுத்தடுத்து நடந்த படையெடுப்புகளாலும், ஆட்சி மாற்றங்களாலும் பாண்டியர் ஆட்சிக்கு உள்பட்ட தென்பகுதிக்கே சோழர், சேரர் வந்து சேர்ந்தனர்.     இந்திய வடபகுதி முழுவதும் தமிழர்கள் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார் மகாலிங்கம்.  செம்மொழிக் கோவை மலரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வெளியிட முதல் பிரதியை பாரதியார் பல்கலை. துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார். தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஏற்புரையாற்றினார். தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பொது மேலாளர் ஏ.என்.சாட்டர்ஜி விழா நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன், வேளாண் பல்கலை. துணைவேந்தர் ப.முருகேசபூபதி, முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், தமிழாசிரியர் அன்வர் பாஷா உள்ளிட்டோர் பேசினர்.  ஓம் சக்தி இதழ் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன் வரவேற்றார். தினமணி கோவை பதிப்பு துணை செய்தி ஆசிரியர் கே.வி.ஐயப்பன் நன்றி கூறினார்.

2/2) தமிழ் ஆர்வலர்கள் இவரைப் புறக்கணிக்கவேண்டும். தொல்காப்பிய வெளியீடு மூலம் தமிழை முன்பு அழிக்கப் பார்த்தார். இப்பொழுது உலக அறிஞர்கள் தமிழின் சிறப்பையும் தொன்மையையும் ஆய்ந்து உணர்ந்து அறிவிக்கும் வேளையில் கதை விடுகிறார். இவர் தமிழறிஞரல்லர். அருட் செல்வர் எனில் தமிழின் பால் அருள் காட்டட்டும். தமிழ்ப் பகைவர்களைத் தமிழக அரசே ஊக்கப்படுத்தும் பொழுது பொது மக்கள் இவர்களை அழைக்காமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகைவர்களைப் புறக்கணிக்கவும் தமிழ் ஆர்வலர்களைச் சிறப்பிக்கவும் முன் வரவேண்டும். கலைஞர் அவர்கள் முன் மாதிரியாகத் திகழ வேண்டும் . அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
½) தமிழ் என்று சொல்லிக் கொண்டே சமற்கிருதத்திற்குக் காவடி தூக்கியும் வால் பிடித்தும் வருபவர் பொள்ளாச்சியார். சிந்து வெளி நாகரிக எழுத்துகள் தமிழே என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்ப்பற்றாளனாகக் காட்டிக் கொள்ள அறிஞர் மதிவாணனின் சிந்து வெளி எழுத்துகள் நூல் வெளிவர உதவியவர், தன் உண்மை முகத்தைக் காட்டுவதற்காகச்சமசுகிருதத் தோற்றம்ம இல்லாத காலத்தில் உள்ள தமிழ் எழுத்துகளைச் சமசுக்கிருத எழுத்து என்ற முறையில் தெரிவித்து ஆய்வு காணச் சொல்கிறார். மிகப் பிந்தைய காலத்தில் தமிழ் வரிவடிவத்தைப் பார்த்துத் தன் எழுத்து வடிவத்தை உருவாக்கிக் கொண்ட ஆரியனின் சமசுகிருத மொழி எவ்வாறு தமிழர் வாழ்ந்த மொகஞ்சதாரோ எழுத்துகளாக இருக்க முடியும்? குமரிக் கண்ட வரலாற்றையும் திரிக்கின்றார்.தமிழுக்குக் கேள் போல் பகைவராக விளங்கும் பொள்ளாச்சியார் திருந்த வேண்டும். அன்புடன் 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக