செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை: மத்திய அரசிடம் அனுமதி கேட்கத் தயார் - கருணாநிதி



சென்னை, ஏப்.19: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் தெரிவித்தார் .
மலேசியாவில் இருந்து சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், உடனடியாக அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்தப் பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தின் மீது, டி.சுதர்சனம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), பாலபாரதி (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது:
பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக விசா பெறலாம் என்ற நிலையில் அரசின் உத்தரவு அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, மத்திய அரசினுடைய அதிகாரிகள் சிலர், விமான நிலையத்தில்-விமானத்துக்குள்ளே நுழைந்து, தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இதுபற்றிய முழுத் தகவலை மறுநாள் காலையில் பத்திரிகைகளைப் படித்த பிறகே தெரிந்து கொள்ள முடிந்தது.
பழைய சம்பவம்: இதேபோல ஒரு சம்பவம் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோள்படிதான் இடப்பட்டது எனக் கூறப்பட்டது. அதில், உண்மை எதுவோ எனக்குத் தெரியாது.
எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக, டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக, சந்திரஹாசன் மீதான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகு, பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது.
தொடர்பு இல்லை: பார்வதியம்மாள் தமிழகத்துக்கு வருவது பற்றி அவரிடமிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புகிறவர்களிடம் இருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ நேரடியாக வரவே இல்லை.
மத்திய அரசுக்கும் பார்வதியம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
கடந்த 2003-ம் ஆண்டில், தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தின் 2-வது பத்தியில், இலங்கைத் தமிழர்கள் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதியம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களது பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள்-எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ-மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் எல்லா கட்சியினரும் குரல் எழுப்புகின்ற இந்தப் பிரச்னையில் அவர்கள் (அதிமுக) மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியில் இருக்கிறார்கள். அது தமிழர் கூட்டணி எனச் சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்னையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு உரிய பிரச்னை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறேன். பார்வதியம்மாள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால், இந்தச் செய்தி முறையாக, உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை.
அதன் காரணமாக, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவுக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மருத்துவ வசதி பெறுவதாக செய்திகள் வந்திருக்கின்றன.
மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசின் பதிலைப் பற்றி-அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

கருத்துக்கள்

5.தனது ஆட்சிநிலத்தில் தனக்கு மதிப்பளிக்காத கட்சியுடன் இன்னும் ஏன்உறவு தேவை? 6. இரு தலைவர்களைத் தடுத்துப் பெரும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தும் முதல்வருக்குத் தெரியவில்லை என்றால் ஆட்சி சரியில்லை என்றல்லவா ஆகின்றது! 7. இவருக்குத் தெரியாமல் நடந்ததென்றால் ஏன் உடனே கண்டனம் தெரிவிக்கவில்லை? 8. இந்த நாடகம் அரசியல் மேடையில் எத்தனை நாளம்மா? அம்மா, எத்தனை நாளம்மா? மானம் கெட்ட பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்புதானா அம்மா?ஐயகோ! பிழைப்புதானா அம்மா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:25:00 AM

1/8) மத்திய அரசிற்கு மடல் எழுதி இசைவுபெற்றுத்தருவதாகக் கூறவில்லை. பதில் பெற்றுத் தெரவிப்பதாகத்தான் கூறுகிறார். 2. உண்மையில் உணர்வு இருந்தால் உடனே தொலைபேசிவழிப் பேசியும் தம் சார்பாளர்களை நேரில் தலைமையமைச்சரைச் சந்திக்கச் செய்தும் தடையற்ற புகுவிசைவு தரச் செய்து அதனைப் பார்வதி அம்மையாரிடம் தெரிவிக்கலாமே!. அவரது விருப்பத்தைக் கேட்டு மீண்டும் அவமானப்படுத்துவதைவிட தடையை நீக்கிவிட்டு அழைக்கலாமே! 3. 1985 இல் எதிர்க்கட்சியாக இருந்தார். இப் பொழுதும் மக்கள் அதைத்தானே கூறுகின்றனர். எதிர்க்க்டசியாக இப்பொழுது கலைஞர் இருந்தால் உலகத்தின்கவனத்தை ஈர்த்துத் தமிழ் ஈழம் அமையப் போராடியிருப்பார். எனவே, அதனை ஒப்பிட்டுப் பயன் இல்லை. 4/8) மேலும் முழுமையான பேச்சில் மாண்புமிகு முதல்வர் இருவர் மட்டும் கமுக்கமாகச் சென்று பார்த்ததாகச்சிண்டு முடியப் பார்த்து உள்ளார். இருவர் சந்தித்ததற்கே அதனால்தான் தடை எனக் காவல்துறை அறிவிக்கிறது. பலர் சென்றார் இன்னும் மோசமான நடவடிக்கை எடுததிருக்காதா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:23:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக