ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

மலேசியாவில் தங்க அனுமதி: தமிழக அரசுத் தரப்பில் மெளனம்



சென்னை, ஏப். 17: சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அந்த நாட்டு அரசு ஒரு மாத காலத்துக்கு விசா அனுமதி தந்துள்ளது.மலேசியா விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார். இந்திய அரசு ஆறு மாத காலத்துக்கு விசா தந்ததன் அடிப்படையில் அவர் சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்றபோது, தமிழக காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு விமான நிலைய வளாகத்துக்குள் சென்றனர். இருந்தாலும் பார்வதி அம்மாளையும், அவருக்குத் துணையாக வந்த பெண்ணையும் நள்ளிரவில் மலேசியாவுக்கே அதிகாரிகள் திரும்ப அனுப்பி வைத்தனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த அதிபர் ராஜபட்ச இந்தியாவுக்கு வந்தால் கோவில்களில் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்கும் நிலையில், பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சைக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. மத்திய அரசு விசா கொடுத்திருந்த நிலையில், பார்வதி அம்மாளை அனுமதிக்க கூடாது என்று தமிழக காவல் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனரா என்ற கேள்விக்கு மெüனமே பதிலாக இருக்கிறது.சனிக்கிழமை முழுக்க இதுபற்றி பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் உண்டா, இல்லையா என்பது பற்றியோ, எதற்காக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பற்றியோ அரசுத் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாளுக்கு ஒரு மாத காலத்துக்கு அந் நாட்டு அரசு விசா அனுமதி கொடுத்துள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் அவர், தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்திய அரசு உதவிகள் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு, சிகிச்சைக்காக வந்தபோதுகூட, தமிழகத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கவில்லை என்ற பிரச்னை பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கருத்துக்கள்

துணிவுடன் இவ்வாறு செய்தியை வெளியிட்டுச் சிலரின் முகமூடியைக் கிழிக்கும் தினமணிக்குப் பாராட்டுகள்.

பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 4:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக