சனி, 6 மார்ச், 2010

தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த மாற்று வேட்பாளருக்கு தகுதி இல்லை: மு.க.அழகிரி



சென்னை, மார்ச் 5: தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த மாற்று வேட்பாளர் லாசருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.மதுரை மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.வழக்கு நடைபெற்று வந்தபோது, உடல் நலக் குறைவு காரணமாக மோகன் காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லாசர் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.""மதுரை மக்களவை தேர்தலில் மோகனுக்கு மாற்று வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டேன். அந்த அடிப்படையில், மோகனின் தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்'' என்று அவர் மனுவில் கோரினார்.இதுதொடர்பாக, மு.க.அழகிரி தரப்பில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:மதுரை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல. எனவே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது. மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரான மறைந்த மோகன், இந்த வழக்குக்குக் கட்டணம் செலுத்தியுள்ளார். அந்தக் கட்டணத்தில் வழக்கைத் தொடர விரும்புவதாக லாசர் தெரிவிக்க முடியாது.மோகனுக்குப் பதிலாக இந்த வழக்கைத் தொடர்வதற்கு லாசருக்கு எந்தத் தகுதியும் இல்லை. மதுரை மக்களவைத் தொகுதியில் மோகனுக்கு மாற்று வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லாசர் நிறுத்தப்பட்டார்.ஆனால், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னரே அவர் தனது மனுவை திரும்பப் பெற்றார். எனவே, மதுரை தொகுதியில் இருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்ப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். மனுவை திரும்பப் பெற்ற வேட்பாளர்கள் சட்டப்படி வழக்குத் தொடர முடியாது. மோகனுக்கு மாற்று வேட்பாளர் என்பதைத் தவிர, இந்த வழக்கைத் தொடர்வதற்கு வேறு எந்த அடிப்படையையும் லாசர் தனது மனுவில் தெரிவிக்கவில்லை.தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதை தான் நேரடியாகப் பார்த்ததாகவும், தன்னிடம் பிறர் தெரிவித்ததாகவும் மோகன் தனது மனுவில் புகார் தெரிவித்திருந்தார்.÷வழக்கைத் தொடர அதுபோன்ற எந்த அடிப்படையையும் லாசர் தெரிவிக்கவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மு.க.அழகிரி தரப்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜரானார்.வழக்கு விசாரணையை மார்ச் 15}ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கருத்துக்கள்

மதுரை உயர் நீதி மன்றம எனத் தனியாக இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைதான் உள்ளது. எனவே, விசாரணைக்குத் தடை இல்லை. மடியில் கனமிருந்தால்தானே அஞ்ச வேண்டும். யார் வழக்கை நடததினால் என்ன? நியாயமாகத் தேர்தல் நடைபெற்றது எனில் அதனை மெய்ப்பிக்க வேண்டியததானே! மேலும் தேர்தல் முறைகேடு குறித்து வாக்ளித்த வாக்காளர் வாக்களிக்க உரிமை உண்டா இல்லையா? இல்லையெனில் அதற்கான உரிமையை நல்கும் சட்டத்திருத்தம கொண்டு வரவேண்டும். மதொகாட்சி மீதான தாக்குதல் வழக்கை வேத்து வேட்டாக ஆக்குவதாகக் கூறி இவ்வழக்கைத் திரும்பப் பெறுவார்களோ! என்ன ஆனால் என்ன? எல்லாத் தேர்தல் வழக்குமே பதவிக்காலம் முடிந்த பின்தான் முடிவிற்கு வருகிறது. 3 மாதகாலத்திற்குள முடிக்க வேண்டும் என விரைவுநடவடிக்கை எடுக்காத வரையில் எவ்வழக்காலும் பயன் இல்லை.எனவே, அழகிரி இவ்வழக்கு குறித்து அஞ்ச வேண்டா! தன் தொண்டினைத் தொடரட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக