வியாழன், 31 டிசம்பர், 2009

பிரபாகரன் பயங்கரவாதி என்ற கூட்டத்தின் படத்தை பார்ப்பவன் ஈனத்தமிழன்

Posted on 8:28 AM by எல்லாளன்

"பிரபாகரன் பயங்கரவாதி! ராஐபக்ச மீட்பர்!" - இசையமைப்பாளர் விஜய் அன்ரனி.

கனடா பல்கலைக்கழகப் பட்டதாரிகள்அமைப்பின் அறிக்கை

அன்பான உறவுகளே!

உங்களோடு சில நிமிடங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம். நாம் கடந்த காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்களை பெருமளவில் நடத்துவதற்குத் தயக்கம் காட்டி வந்திருக்கின்றோம். எம் தயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீலங்கா அரசு தட்டிக் கேட்பாரற்ற நிலையில் எம் மக்களைக் கொன்றொழித்தது.

வதை முகாம்களில், சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்கின்றது. நாம் எதையும் ஆழமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. பொதுநோக்கில் ஆழமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. உணர்ச்சி வேகத்தால் அவ்வப்போது கூடிக் கலைந்திருக்கின்றோம். நாம் புறக்கணிப்பு போராட்டங்கள் குறித்து நிறையப் பேசுவோம். களங்களையும் குறிப்போம். ஆனால் களமிறங்கும்போது பின்வாங்கிவிடுகின்றோம். ஈடுபாடின்மை பயம் இவை போன்றவையே நாம் ஒப்புக்கொள்ள மறுக்கின்ற காரணங்கள். புறக்கணிப்புப் போராட்டம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட சனநாயக உரிமை. அந்த சனநாயக உரிமையினைக் கையிலெடுத்து எம் உறவுகளைக் காப்பதற்காக போராடியிருக்க வேண்டிய நாம் காலங்கடந்தும் அதை உணராமல் இருப்பதுதான் வேதனைக்குரியது.

ஆரம்ப நாட்கள் முதல் நாம் ஸ்ரீலங்கா பொருட்களையும், சன் ரீவி (Sun TV) போன்ற தொலைக்காட்சிகளையும் பெரும் முனைப்போடு புறக்கணித்திருந்தால் சிலவேளை எம் உறவுகளை நாம் காப்பாற்றியிருக்கக் கூடும். இன்று உறவுகளை இழந்து, அழது புலம்புகின்றோம். முள்ளியவாய்க்கால் கொலைக் களத்தில் எஞ்சிய எமது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்றும் தமிழர் வணிக நிறுவனங்களில் குவிந்து கிடக்கிக்கின்ற ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள் எதைப் புலப்படுத்துகின்றன?அந்தச் சுவைகளைத் துறக்க நாதியற்று, அவற்றை நுகர்ந்துகொண்டிருக்கின்றோமே நாம் இன்னும் புறக்கணிப்பின் உண்மையான போராட்டக்களத்துக்குள் இறங்கியிருக்கின்றோமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான விடை.

இதன் ஊடாக, தொடர்ச்சியான புறக்கணிப்பு போராட்டத்தால் விளைந்திருக்கக்கூடிய நன்மைகளை நாம் அறிய முயற்சிக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சனநாயக வழிப்பட்டதும் பெரு வெற்றியைத் தரக்கூயடியதுமான புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் நாம் அதனைக் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்.IRISH நாட்டில் ஏற்பட்ட நிலச் சண்டையில் (Land War) Captain Charles Boycott அவர்களினால் பறிக்கப்ட்ட நிலப்பிரதேசங்களும், அவருடைய தேவையற்ற பண அறவிடல்களுக்கும் எதிராக கிழந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமே பின்னால்Boycott என்ற போராட்ட வடிவம் உருவாகுதற்கு காரணமாக இருந்திருக்கின்றது.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கும், இதர மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்பதற்கும் புறக்கணிப்பு போராட்டம் ஒரு கருவியாக பல நாட்டு மக்களால் இற்றைவரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சனநாயகத்தின் அடிப்படை உரிமையின் ஒரு அங்கமாகவே இந்தப்போராட்டம் இருப்பதை உணர வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழல், மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுகின்ற போது, அந்த தீங்கைச் செய்கின்ற நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக தொடர் போராட்டமாக இருக்கக்கூடியது இந்தப் போராட்டமே! தீங்கு செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தவும், அவர்களின் மமதைப்போக்கை நிறுத்தவும் இந்தப் போராட்டம் மிகப்பெரும் கருவியாய் இருந்திக்கின்றது.

வெற்றியீட்டிய புறக்கணிப்புப் போராட்டங்கள் சில:

• 1830 இல் நடந்தேறிய நிக்கரோ மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் அடிமைகளை வைத்து உருவாக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அடிமைத்தனத்தை ஊக்கப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அமெரிக்காவில் நிற வேறுபாடு உச்சம் தொட்ட காலத்தில் வெள்ளை இனத்தவர்களால் நடத்தப்படும் பேருந்துகளில் கறுத்த இனத்தவர்கள் பயணிப்பதை புறக்கணிக்கும்மாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். பேருந்துகளில் கறுப்பர்களுக்கான தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் விடுதலைக் காலத்தில்; பிரித்தானியா அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் இருந்து இறுக்குமதியாகும் அனைத்தையும் புறக்கணிக்குமாறு அமெரிக்க விடுதலைப் போராளிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் கடுமையான கட்டளையொன்றை பிறப்பித்திருந்தார்கள்.

இந்திய சுதந்திரக்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் பல புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தேறியது.

யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்

1980 இல் ரஸ்ஸியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை புறக்கணிக்க வேண்டி அமெரிக்க அரசாங்கமே முன் நின்று புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியது.

இத்தகையபோராட்டங்களூடாகவே போராடிய இனங்கள் விடுதலை பெற்றிருக்கின்றன அல்லது விடுதலைக்கு வலுவேற்றியிருக்கின்றன. புறக்கணிப்பின் தாக்கமே எம் மக்களின் சுதந்திரத்தை வெற்றியாக்கித் தரும். புறக்கணிப்புப் போராட்டத்திலே நாம் தேடும் பல விடைகள் மறைந்திருக்கின்றன. இந்தவகைப் போராட்டமே தமிழர்களில் விடிவை எடுத்துவரும் என்பதற்கு மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் போதுமானவை.. இலங்கையின் பொருளாதாரத்தையும், இன்னும் புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும் தமிழ் விரோத சக்திகளையும் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு தமிழர்கள் நாம் முன்வந்தால் மட்டுமே முடியும். அப்போதுதான் தேடிக்கொண்டிருக்கின்ற விடிவை நம் மக்கள் அடையலாம்.

நாளை நாங்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கும் போது, செத்து மடிந்த எங்கள்; மொழி பேசுகின்ற மக்களையும், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு காடுகளில் வீசப்பட்ட எங்கள் உறவுகளையும், கொடுரமாகப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எங்கள் பெண்மணிகளையும், பிஞ்சுகளிலே உயிரைக் கொடுத்த எம் பச்சிளம் பாலகர்களையும், காணாமல் போய்க் கொண்டிருப்போரையும் மனதில் கொண்டு வாருங்கள். உங்களால் முடியும்!

நீங்களும் மனிதர்கள் தான். நீங்கள் வாங்கப்போகின்ற ஒவ்வொரு பொருளிலும் எம் உறவுகளின் சோகமும் இரத்தக் கறையும் கலந்திருப்பதை உணருங்கள்.

புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவொரு பங்களிப்பையும் விட மிக இலகுவானதாக செய்யக்கூடியது. இதைக் கூட நாம் செய்யத் தவறினால், தமிழர்களாக அல்ல, மனிதர்களாக பிறந்ததில் பயன் உண்டா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.


வேட்டைக்காரன் படப் புறக்கணிப்பு!!!

கொடுமைகளை செய்கின்ற இலங்கை இராணுவத்துக்கு இசை அமைத்தவர் இப்போது வரப்போகின்ற வேட்டைக்காரன் படத்துக்கும் இசை உதவி செய்திருக்கிறார். கொலை செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம்.

நீங்கள் பணம் கொடுத்துப் பார்க்கப்போகின்ற படத்துக்குப் பின்னால் ஒரு இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள்.

பொழுதுபோக்குக்காக மற்றைய படங்களை பாருங்கள். ஆங்கிலப்படங்களை ஊக்கப்படுத்துங்கள். குற்றம் செய்தவர்களை இன்னும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள். மக்களுக்காக கண்ணீர் சிந்தும் மற்றய தமிழர்கள் நடித்த படங்களை பாருங்கள். எமக்கான ஆதரவுக் குரல்களைத் தரும் கலைஞர்களை ஆதரியுங்கள். பாசத்துக்குரிய தமிழர்களே!!!

எல்லாவகையான புறக்கணிப்பு போராட்டங்களையும் வெற்றியடைய வைப்பீர்களா? அல்லது மீண்டும் தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொட முயற்சிப்பீர்களா? எம் விடிவுக்கான வாசலின் திறவுகோல் உங்கள் ஒவ்வொருவரிடமும் தான் உள்ளது!!!

தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு - கனடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக